ராமாயணத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் மாதிரி, பாகவதத்தில் பகவானுக்குப் பட்டாபிஷேகமான ஸந்தர்ப்பத்தில் சூட்டப்பட்ட பேர் “கோவிந்த” என்பதே. ராமர் மாதிரி க்ருஷ்ணர் பெரிய ராஜ்யத்துக்கு ராஜாவாகப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்ளாவிட்டாலும், தேவ ராஜாவாலேயே பட்டாபிஷேகம் பெற்றதால் இதற்கு ரொம்ப முக்யத்வமுண்டு. “கோவிந்தராஜா” என்று க்ருஷ்ணனுடைய பல பெயர்களில் இதற்கு மட்டுந்தான் “ராஜா” சேர்க்கிறோம்!
எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஆண்டாள் திருப்பாவையில் “குறைவொன்றுமில்லாத கோவிந்தா!” என்று கூப்பிடுகிறாள் அல்லவா? பகவானுக்குக் குறை இருந்தது என்று யாராவது நினைப்பதுண்டா? ஸாதாரண மநுஷ்யன் குறைப்பட்டுக் கொண்டேயிருக்கும் ஸ்வபாவமுள்ளவவன். அதனால் அப்படியில்லாத ஒருவனைக் ‘குறைவொன்றுமில்லாத மநுஷ்யா’ என்று விசேஷிப்பது பொருத்தம். பகவானை ஏன் இப்படிச் சொல்லவேண்டும்? இப்படிச் சொல்வதாலேயே, ‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்கிற மாதிரி, பகவானுக்குக் குறையிருந்தது போலத்தானே த்வனிக்கிறது!
யோசித்துப் பார்த்ததில், பகவானுக்கு வாஸ்தவமாகவே பூர்வத்தில் ஒரு குறை இருந்து, அது கோவிந்தனாக அவன் ஆனபோதுதான் தீர்ந்தது என்று தெரிந்தது.
பகவானுக்கு என்ன குறை இருந்தது? ‘ராம பட்டாபிஷேகம்’ என்றேனே, அதிலேயேதான் குறை! சக்ரவர்த்தியாக முடி சூடியதில் என்ன குறை என்றால், இதை வால்மீகி தம்முடைய ராமாயணத்தில் வர்ணித்திருக்கிற தினனுஸிலேதான் குறை ஏற்பட்டுவிட்டது.
‘வஸிஷ்ட வாம தேவாதி ரிஷிகள் எட்டுப்பேர் ஸ்ரீராம சந்த்ரமூர்த்திக்குப் பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அது எப்படித் தெரியுமா இருந்தது? அஷ்ட வஸுக்கள் தேவேந்த்ரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணின மாதிரி இருந்தது’ என்று வால்மீகி வர்ணித்திருக்கிறார். “வஸவோ வாஸவம் யதா” – “வாஸவன் எனப்படும் இந்த்ரனுக்கு வஸுக்கள் பண்ணியதுபோல” என்று அர்த்தம்.
இந்த Comparison (ஒப்புவமை) தான் ராமருக்குக் குறை உண்டாக்கிவிட்டது. ஏன்? இந்த்ரன் சீரழிந்த கதையை இதே வால்மீகி பாலகாண்டத்தில் சொன்னார். கௌதம பத்னியாகிய – அதாவது தாய் போல் மதிக்க வேண்டிய – ரிஷிபத்னி அஹல்யையிடம் தப்பாக நடந்து கொண்டு, மஹாபாபம் பண்ணினவன் இந்த்ரன். அதற்காக சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு அவமானப்பட்டவன். பதிதையாகிவிட்ட அஹல்யைக்கு ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி புனருத்தாரணம் தந்த பெருமைதான் இன்றைக்கும் அவரை “பதித பாவன ஸீதாராம்” என்கிறோம்.
கதை இப்படியிருக்க, அந்த இந்த்ரனையே தனக்கு உவமையாக வால்மிகி மஹர்ஷி சொல்லிவிட்டதில் ராமருக்கு உள்ளூரக் குறை ஏற்பட்டுவிட்டது. ஏகபத்னீ வ்ரதனான தம்மை, தகாத பாபம் பண்ணினவனோடு ஒப்பிட்டுவிட்டாரே என்று ஒரு குறை.
ஆதியிலே ஒரு பட்டாபிஷேகம் நிச்சயமான ஸமயத்திலே அது நிறைவேறாமலே ராமர் வனவாஸம் பண்ணும்படி ஆயிற்று. அப்புறம் பதிநாலு வருஷங்கள் ஜனங்கள் தவியாய்த் தவித்துக் காத்திருந்து மறுபடி பட்டாபிஷேகம் நடக்கிறது. அதனால் பட்டாபிராமன் என்றே பகவானுக்கு ஒரு பேர் ஏற்பட்டிருக்கிறது. ராமாயண பாராயணம், ப்ரவசனம் எதுவானாலும் பூர்த்தி செய்யும் மங்களமான கட்டம் அதுதான். அங்கேபோய், பால காண்டத்தில் தன் கால் தூசியினாலேயே பரிசுத்தி பெற்ற ஒருத்தியை ஆதியில் தூசுபடுத்தியவனோடு தன்னை ஒப்பிட்டால் பகவானாகத்தானிருக்கட்டும், அவர் மநுஷ்யம் மாதிரிதானே நன்றாக ‘ஆக்ட்’ பண்ணினார், அதனால், வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?
இன்னொரு குறை : இந்த்ராதி தேவர்கள் ராவணனின் ஹிம்ஸையைத் தாங்கமாட்டாமல் ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டதன் மேல்தான் மஹாவிஷ்ணு ராமாவதாரம் பண்ணினது. ராவணனின் புத்ரன் மேகநாதனே இந்த்ரனை ஜயித்து “இந்த்ரஜித்” என்று பேர் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட ராவணனைத் தாமே ஜயித்தும், இந்த்ரஜித்தைத் தாம் ஜயிக்கவேண்டுமென்று இல்லாமல் தம்பி லக்ஷ்மணனை விட்டே ஜயித்தும் விஜயராகவனானவர் ராமர். இப்படி ஸமூலம் ராக்ஷஸ ஸம்ஹாரம் பண்ணிவிட்டுப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்கிறபோது, தம்மிடம் தோற்றுப் போனவனிடம் தோற்றுப்போன இந்த்ரனுக்கே தம்மை ‘கம்பேர்’ பண்ணினால் குறையாகத்தானே இருக்கும்?
வால்மீகி பாத்திரங்களின் குணத்தை Compare பண்ணி இப்படிச் சொல்லவில்லை. பட்டாபிஷேக வைபவத்திலிருந்த ஆனந்த கோலாகலத்தைப் பார்த்ததும் தேவலோகத்தில் நடந்த இந்த்ர பட்டாபிஷேகத்தின் விமர்சைக்கு இதை ஒப்பிடலாம் என்று நினைத்தார். எட்டு வஸுக்கள் மாதிரியே இங்கேயும் ஸரியாக எட்டு ரிஷிகள் அபிஷேகம் பண்ணினவுடன், “வஸவோ வாஸவம் யதா” என்று உத்ஸாஹத்தில் எழுதிவிட்டார்*.
இதனால் பகவானுக்கு உள்ளுக்குள்ளே ஏற்பட்ட குறை, அப்புறம் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாக்ஷாத் அந்த இந்த்ரனே, “தோற்றேன்” என்று இவர் காலில் வந்து விழுந்து இவருக்கு ‘கோவிந்த’ பட்டம் தந்து அபிஷேகம் பண்ணின போதுதான் தீர்ந்தது. ராமபட்டாபிஷேகத்தில் உண்டான குறை கோவிந்த பட்டாபிஷேகத்தினால்தான் தீர்ந்தது. இதைத்தான் ஆண்டாள் suggestive -ஆக (குறிப்பால் உணர்த்துமுகமாக) “குறைவொன்றுமில்லாத கோவிந்தா” என்று சொன்னாள்.
‘குறைவேயில்லாத’ என்றால் பரிபூர்ண வஸ்து என்று அர்த்தம். ‘பூர்ணம் ப்ரஹ்ம ஸநாதனம்’, ‘பூர்ணாவதாரம்’ என்று க்ருஷ்ண பரமாத்மாவைச் சொல்வது இதனால்தான்.
*வஸிஸ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயனர், ஸுஜன்யர், கெளதமர், விஜயர் என்ற எட்டு ரிஷிகள்.