குரு – தெய்வ ‘கோவிந்த’ : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குரு - தெய்வ "கோவிந்த"

கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. முன்பு மஹாவிஷ்ணுவுக்கு ப்ரீதியான நாமாக்கள் என்று பன்னிரண்டைச் சொன்னேன் அல்லவா! அவற்றில் ‘கோவிந்த’ என்பது ஒன்றாக வருகிறது. இது தவிர மூன்றே மூன்று நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு ரொம்பவும் விசேஷமானவை என்று எடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆசமனம் பண்ணிவிட்டு, அப்புறம் அந்தப் பன்னிரண்டு நாமாக்களைச் சொல்லிக் கன்னம், கண், மூக்கு, காது, புஜம், ஹ்ருதயம், சிரஸ் முதலியவைகளைத் தொட்டால் தேஹசுத்தி உண்டாகிறது. எந்தக் கர்மாவானாலும் முதலில இப்படிச் செய்து சரீரத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்கிறபோது சொல்கிற நாமாக்கள், “அச்யுத. அனந்த. கோவிந்த” என்கிறவையே.

இப்படியாக, விசேஷமான பன்னிரண்டு நாமாக்கள், அதனிலும் விசேஷமான மூன்று நாமாக்கள் இரண்டிலும் வருகிற ஒரே ஒரு நாமம் ‘கோவிந்த’ என்பதுதான்.

கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர.

அச்யுத – அனந்த – கோவிந்த.

மூன்றிலே ஒரு நாமாவாக இருக்கப்பட்ட ‘கோவிந்த’ என்பதை ‘பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்’ என்று மூன்று தரம் ஆசார்யாள் சொல்லிச் சொல்லி ஸந்தோஷப்பட்டிருக்கிறார். ஒன்றை ஸத்யப்ப்ரமாணமாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று தரம் திருப்பிச் சொல்வார்கள்.

இப்படி ஆசார்யாள் சொன்னது மட்டுமில்லாமல், ஆண்டாளும் மூன்று இடங்களில் கோவிந்த நாமாவை ப்ராயோகித்திருக்கிறாள், அவளுடைய ‘திருப்பாவை’யிலே. ‘திருப்பாவை’யின் கடைசியான முப்பதாவது பாட்டு அதற்கு பலச்ருதி. அதை விட்டுவிட்டால் அதற்கு முந்திய மூன்று பாட்டுக்களிலும் ‘கோவிந்தா!’ என்றே பகவானைக் கூப்பிட்டிருக்கிறாள். இருபத்தேழாவது பாட்டில் ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!’ என்கிறார். இருபத்தெட்டாவதில்தான் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்பது. இருபத்தொன்பதாவது பாட்டில் ‘இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!’ என்கிறாள்.

மூன்றில் ஒன்று

கோவிந்த நாமாவுக்கு இருக்கப்பட்ட அநேகச் சிறப்புக்களில் இன்னொன்று நம் ஆசார்யாளுக்கு அதுதான் ரொம்பவும் பிடித்தது -favourite- என்பது! ‘பஜ கோவிந்த’த்திலிருந்து இது தெரிகிறது. ‘பஜகோவிந்தம்’ என்பது அவருடைய ‘சிவானந்தலஹரி’, ‘ஸெளந்தர்ய லஹரி’, அல்லது இந்த ‘ஷட்பதீ’ ஸ்தோத்ரம் போல ஒரு ஸ்வாமியை ஸ்தோத்திரிக்கும் ப்ரார்த்தனை இல்லை. அதிலே ஜெனரலாக ஒரு மநுஷ்யன் இருக்கவேண்டிய வாழ்முறையையும், தத்வ உபதேசங்களையும், விவேக வைராக்யங்களையும்தான் சொல்லியிருக்கிறார். அது வைஷ்ணவர், சைவர் என்ற பேதமில்லாமல் ஸகல ஜனங்களுக்குமானது. இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பராமாத்மாவை பஜியுங்கள்’ என்று பொதுப்பெயரைச் சொல்லாமல் ‘கோவிந்தனை பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயரில் அவருக்கு ரொம்பவும் பிடித்தம் என்று தானே அர்த்தம் தெரிகிறது?

லோகத்தில் உள்ள உபதேச க்ரந்தங்களுக்கெல்லாம் உச்சியில் உள்ள கீதையை அர்ஜுனனுக்குச் சொன்னதால் க்ருஷ்ணருக்கு ‘ஜகத்குரு’ என்ற பட்டம் உண்டு. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ச்லோகம் சொல்கிறோம். அதற்கு அப்புறம் நம் பகவத்பாதாளுக்குத்தான் ஜகத்குரு பட்டம் ஏற்பட்டது. ஜகத்குருவாயினும் ஆசார்யாளுக்கு, சிஷ்யபாவத்தில் இருந்துகொண்டு தம்முடைய குருவை ஸ்துதிப்பதிலேயே ஸந்தோஷம். அவருடைய குருவின் பேர் என்ன என்றால் கோவிந்த பகவத் பாதர் என்பதே. அதனால் குரு – தெய்வம் இரண்டின் பெயராகவும் உள்ள ‘கோவிந்த’ என்னும்போது க்ருஷ்ண பரமாத்மாவை மட்டுமின்றி தம் குருவையும் ஆசார்யாள் நினைத்துக்கொண்டார் என்பதற்கு internal evidence (உட்சான்று) -ஆக ‘விவேக சூடாமணி’யின் ஆரம்ப ச்லோகத்தில்,

கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம் என்று சொல்லியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'குறையன்றுமில்லாத கோவிந்தா'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பவக்கடல் கடையும் பகவத் மத்து
Next