கம்பருக்கு வருகிறேன்.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் அதுவா, இதுவா என்று கம்பருடைய காலத்தைப் பற்றி உள்ள ஆராய்ச்சிகள் இப்போது நமக்கு வேண்டாம். அவர் நாளில் ஆட்சி பண்ணினது விக்ரம சோழனா, குலோத்துங்கனா? குலோத்துங்கன் என்றால் எத்தனாவது குலோத்துங்கன் என்ற விவாதம் வேண்டாம். கதைதான் வேண்டும். கதையானாலும் அதிலே அவருடைய குணப் பண்புக்கு விதை இருக்கிறது என்று மதித்துக் கேட்பதுதான் நமக்கு வேண்டியது.
போஜனும், காளிதாஸனும் மாதிரிதான் குலோத்துங்க சோழனும் கம்பரும் அத்யந்தமாயிருந்திருக்கிறார்கள். அதனாலே கம்பர் அவனிடம் ரொம்ப ஸ்வாதீனமாகப் பேசுவார்.
பெரிய ராஜ்யத்தைத் தன் ஆதீனத்தின் கீழே வைத்திருக்கிறோம் என்பதை ஒரு நாள் குலோத்துங்கன் ரொம்பப் பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.
உடனே கம்பர் ஸ்வாதீனத்தின் பேரில், “ராஜ்யமே உன் ஆதீனத்திலிருக்கிற தென்றாலும், நீ என் ஆதீனத்தில்தானே இருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டார். ப்ரியத்தின் பேரிலே, மனஸிலே எந்த அதிகார, அஹங்காரமும் இல்லாமல்தான் இப்படிச் சொன்னார்.
ஈச்வரனையே பக்த பராதீனன் என்பது – “இறைவரோ தொண்டருள்ளத்(து) ஒடுக்கம்” என்பது – ஈச்வரனுக்குத் தானே பெருமை? அப்படி பெரிய புவியரசனும் கவியரசரான தமக்கு அடக்கமென்பது அவன் பெருமையை – கலையை மதிக்கும் அவனுடைய ராஸிக்யப் பெருமையை – காட்டுவது தான் என்று நினைத்து வெள்ளையுள்ளத்தோடு கம்பர் சொன்னார்.
அதிகாரத்திலுள்ள ஒருவர் ரொம்பவும் ஜாக்ரதையாகயிருந்தாலொழிய அந்த ஸ்தானத்தின் போதை எப்போதாவது ஒரு போது தலைக்கேறத்தான் செய்யும். இப்போது குலோத்துங்கனுக்கு அப்படித்தான் ஆயிற்று. ‘ராஜாவான தனக்கு மேலே என்று இந்தப் பாட்டுக்காரன் சொல்லிக் கொள்வதா?’ என்று அஸாத்ய கோபம் வந்தது.
அதில் ஸ்நேஹம் தான் பரம விரோதமாக மாறுமென்று முன்னேயே சொன்னேனல்லவா? இந்தக் கதையிலும் அப்படி ஆயிற்று.