நட்பு பகையாவதன் நுட்பம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

காரணம் என்னவென்றால் – அவ்வளவாக நெருங்கிய பழக்கமில்லாதவர்கள் நமக்குப் பிடிக்காததாக ஏதாவது செய்துவிட்டாலோ, சொல்லிவிட்டாலோ, ‘நம் மனஸு இவர்களுக்குப் புரிய வேண்டுமென்பதில்லை. அதனாலே அதற்கு எப்படி ஹிதமாக நடந்துக்கணும் என்று தெரியாமல் இவர்கள் வேறு தினுஸாக நடந்துகொள்கிறார்கள். இதைப் பெரிய குற்றமாக எடுத்துக்கொள்வதற்கில்லை’ என்று நம் மனஸே கொஞ்சம் ஸமாதானம் பண்ணிக்கொண்டுவிடும். நமக்குப் பிடிக்காததைப் பழக்கமில்லாதவர் பண்ணினாலும் குற்றமாகத்தான் தெரியும், கோபம்தான் வரும். ஆனாலும் பெரிய குற்றமாகத் தெரியாது, ஸஹிக்கமுடியாத கோபம் வராது. நமக்கு ரொம்பவும் பழக்கமானவர் பிடிக்காததைப் பண்ணும்போதுதான், ‘நம் மனஸ் நன்றாகத் தெரிந்தும் அதை க்லேசப்படுத்தும்படியாக இப்படிப் பண்ணுகிறார்களே! இவர்கள் நம் எண்ணத்தை மதிக்காமல் இந்த மாதிரி செய்வதா, செய்வதா?” என்று மஹா கோபம் வந்து, அவர்கள் மன்னிக்க முடியாத குற்றம் பண்ணினதாகத் தோன்றிவிடுகிறது.

இப்படித்தான் தன்னைக் கம்பர் மதிக்கவில்லை என்று சோழ ராஜாவுக்கும், தன் மனஸைத்தான் அவன் புரிந்து கொள்ளவில்லை என்று கம்பருக்கும் தாங்கமுடியாத ஆற்றாமை உண்டாகி, வார்தை வலுத்தது.

காளிதாஸன் கதை போலவே சோழராஜாவும் “நீ என் ராஜ்யத்தைவிட்டுப் போ!” என்று கம்பரிடம் சொல்லிவிட்டான்.

“‘பெரிய ராஜ்யம் எனக்கு அடக்கம்’ என்று நான் சொன்னதற்கு, ‘நீ எனக்கு அடக்கம்’ என்று சொன்னாயே! இப்போது பார், நீதான் என் ஆக்ஞைக்கு அடங்கி, எனக்கு அடக்கமான இந்த சோழ ஸாம்ராஜ்யத்தை விட்டுப் போகவேண்டும்” என்று சொல்லிவிட்டான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கம்பரும் குலோத்துங்கனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கம்பர் - காளிதாஸன் ஒப்பீடு
Next