எருமைத்துதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்த நூல் இப்போது இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு “மஹிஷ சதகம்” என்று பெயர் எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிறேதால்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

“மஹிஷி” என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்ட மஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’, ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிக் கவி மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ் ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ச்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பி வந்தார்.

அதன் ஸப்ஜெக்டைச் சுருக்கமாகச் சொன்னால், அஸத்தானவர்களைத் தன் ஸபையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட ஒரு எருமைக்கடாவை வைத்துக்கொண்டு அதனால் “உழுதுண்டு வாழ்வதே மேல்” என்பதுதான்! ‘உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் பின் செல்கி’றோமோ அந்த எருமையையே “தொழுது” ஸ்துதிப்பதாகத்தான் ச்லோகங்கள் செய்தார்!

அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

மஹாபண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்தையைக் காசுக்கு விற்கிறார். ஷட் – தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர் சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட் – தர்சனமாவது, சை! க்யாதி வாய்ந்த குட்டிக் கவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்து விட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான – எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்கியத்தின் பலன்தான்!” என்று ஒரு ச்லோகம்1.

இன்னொன்றில், “எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! ‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்திய மில்லையே’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதீ என்றெ சொல்லணுமாக்கும்” என்றார்2.

இவர் அனுப்ப அனுப்ப ச்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு- அவனும் உள்ளூற நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே, அதனால்-மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.


1 “வித்யாபண்யவிசேஷ”

2 “கர்ஷகர்ஷமஹர்நிசம்”

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ரதாப ஸிம்ஹனும் குட்டிகவியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நாட்டைக் காத்த கவி
Next