ப்ரதாப ஸிம்ஹனும் குட்டிக் கவியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்த்ர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். துரத்ருஷ்டவசமாக ப்ரதாப ஸிம்ஹன் கல்வி கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாஹம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, கோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று. முறையாக அறிந்த வித்வான்கள், கவிகள் ஆகியோருக்கும் ஆதரவு இல்லை.

இப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிக் கவி ஒரு காவ்யம் எழுதப் புறப்பட்டது. இப்போது “குட்டி”யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். வெறுமனே ஆத்திரத்தைக் கொட்டித் திட்டித் தீர்ப்பதற்காக அவர் எழுதவில்லை. தம்முடைய எழுத்தின் மூலம் ப்ரதாப ஸிம்ஹனுக்கு புத்தி புகட்டி நல்வழிப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்துடனேயே எழுதினார். அவன் அவனைப் பொறுத்தமட்டில் நல்லவன் தான். ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தகாதவர்களின் வலையில் விழுந்து அவர்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்ததால்தான் ப்ரஜைகளையெல்லாம் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான்.

இவனை எப்படிக் வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக் காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே – மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே – அப்படி ஒரு காவ்யம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதைச் “சலோக்தி” என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு ‘அந்யாபதேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே ம்ருகங்கள் மாதிரி கூடக் கேலியாகக் சித்திரிக்கிறார்கள். குட்டிக் கவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டுவிட்டார்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மன்னரும் குழந்தையும் பரஸ்பரப் பாராட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எருமைத்துதி
Next