வங்க வித்வானை வென்ற வாலிபர் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குட்டிக்கவியின் கொள்ளுப் பேரரும் அவருடைய இயற் பெயரையே கொண்ட இன்னொரு வாஞ்ச்யேச்வரர்தான்*. (தாத்தாவேதான் பேரனாகப் பிறக்கிறார் என்ற கருத்தில் அவர் பேரையே இவனுக்கு வைப்பதால்தான் ‘பேரன்’ என்று சொல்வது!) கொள்ளுப் பேரரை வாஞ்ச்யேச்வர யஜ்வா என்பார்கள். ஸோம யாகம் செய்தவரானதால் ‘யஜ்வா’. கொள்ளுத் தாத்தாவைப் போலவே இவரும் பாண்டித்யம், ஸாஹித்ய ஆற்றல் எல்லாம் உள்ளவர். அவரைப் போலவே மஹா தீரர் என்பதுதான் நாம் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு முக்யமானது. ப்ரபிதாமஹரின் அச்சாக இவர் இருந்ததால் இவரைக் “குட்டிச் சாஸ்த்ரியார்” என்றே பொதுவில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இவர் தம்முடைய தைர்யத்தை முதலில் காட்டியது ராஜாவிடமல்ல; வேறொரு மஹா பண்டிதரிடமேயாகும். அப்போது அவருக்கு வயஸு பதினெட்டுதான்.

பெங்காலில் ‘நாடியா’ என்கிற நவத்வீபத்தில் விசேஷமாக உருவாக்கப்பட்ட நவீன தர்க்க சாஸ்த்ரத்தில் கரை கண்ட அந்த ஊர் வித்வான் ஒருவர் திருவிடைமருதூருக்கு வந்து அமரஸிம்ஹ மஹாராஜாவின் முன்னால் வாதம் நடத்தினார். அவருக்கு ஈடு கொடுக்கத் தஞ்சைச் சீமையில் யாருமே இல்லாமல் ஸதஸ் விக்கித்து அவமானப்பட்டு நின்ற போது யுவாவான குட்டி சாஸ்த்ரி பதில் கொடுத்து என்னவோ முனகினார். சிறுபிள்ளை என்று அலக்ஷ்யமாக பெங்கால் பண்டிதர் கையமர்த்த, இவருக்கு மானம் பொங்கிக்கொண்டு வந்தது. முனகலாக ஆரம்பித்தவர் கர்ஜனையாகவே முழங்க ஆரம்பித்தார். “காதாதரி” என்ற தலை சிறந்த நவீன தர்க்க புஸ்தகத்தில் சொல்லியுள்ள அறுபத்து நாலு வாதங்களையும் அலசினார். பெங்கால் பண்டிதரை முனகக்கூட முடியாமல் வாயடைத்து உட்காரச் செய்துவிட்டார்! இப்படித் தமிழ்நாட்டின் வித்வத் ஸமூஹத்துடைய மானத்தையே அவர் காப்பாறியதில்தான் அவருடைய தைர்யம் அங்குரார்ப்பணமாயிற்று.


* இவரைக் குறித்த விரிவான உரை இனிவரும் பகுதிகளில் ஒன்றில் வெளிவரலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நாட்டைக் காத்த கவி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சரபோஜிக்கு பணியாத சாஸ்த்ரியார்
Next