சரபோஜிக்கு பணியாத சாஸ்த்ரியார் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ராஜாவிடம் அவர் மானம் மரியாதைகளைத் துணிந்து காப்பாற்றிக் கொண்ட கதைக்கு வருகிறேன்.

அவருக்கு வயஸானபோது சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திவந்தார். அவர் தினமும் பக்கத்திலே ஒரத்தநாட்டுக்குக் குதிரையின் மேல் ஆளனுப்பி, அங்கே தாம் குடியேற்றியிருந்த ஸத் பிராம்மணர்கள் அன்றன்றும் வைதிக கர்மாக்களும் பூஜையும் முடித்து விட்டுத் தருகிற மந்த்ராட்சதையைக் ‘கலெக்ட்’ பண்ணிக்கொண்டு வரச் செய்து, அதைத் தம் சிரஸில் போட்டுக் கொண்ட பிறகே போஜனம் செய்வார். இந்த ப்ராம்மணோத்தமர்களில் குட்டி சாஸ்த்ரிகளும் ஒருவர்.

அவர் கொஞ்சங்கூட லோபமில்லாமல் தீர்க்கமாக அநுஷ்டானங்கள் பண்ணுகிறவர். ராஜாவின் குதிரைக்காரன் வந்துவிட்டானே என்பதற்காக “ஓட்ட” மாட்டார். (குதிரையைச் சொல்லவில்ல. அநுஷ்டானத்தை!) கவனமாக, நிறுத்தி நிதானமாக அநுஷ்டானங்களை முடித்தே அக்ஷதை தருவார். இதனால் மஹாராஜாவின் போஜனம் பல நாட்களில் ‘டிலே’ ஆயிற்று.

ஒரு ஸமயம் சரபோஜி அவரைப் பார்த்தபோது, “சாஸ்த்ரிகளே! அநுஷ்டானம் ரொம்ப நிதானமா நடக்கிறாப்பலே இருக்கே” என்று கேட்டுவிட்டார்.

சரபோஜி மதிப்புக்குரியவர். கலைகளுக்கு அளவில்லாத பணி செய்திருக்கிறவர். ஸரஸ்வதி மஹால் கலெக்ஷன் ஒன்று போதும் அவருடைய உயர்ந்த பணிக்கு! ஆனாலும் ராஜா என்பது எங்கேயாவது, எப்போதாவது துருத்திக் கொண்டு வருமாதலால் இப்படிச் சொன்னார்.

அவ்வளவுதான்! சாஸ்த்ரியாருக்குத் தாளவில்லை. ‘ஒரு ராஜாவுக்காக ப்ராம்மணானவன் வேத கார்யத்தையும் தேவ கார்யத்தையும் அவற்றுக்கான விதிமுறைகளை ‘ரிலாக்ஸ்’ செய்து பண்ணுவதா? ராஜாவுக்கே ஆசீர்வாதமாக அக்ஷதை அனுப்பி வைக்கிறவனாக வெளிப் பார்வைக்கு வைத்தாலும் அவனுக்கு ஊழியம் செய்கிற ஸேவகன் என்ற நிலையில்தானே நம்மை உள்ளுக்குள்ளே நினைப்பதாகத் தெரிகிறது?’ என்று குன்றி, மனம் வெதும்பினார்.

அன்றைக்கே ராவோடு ராவாக ஊரைக் காலி பண்ணிக் கொண்டு பெண்டாட்டியுடன் கூடக் கிளம்பிவிட்டார். நேரே அர்த்த ஜாமத்துக்குத் திருவையாறு வந்து சேர்ந்தார். அம்பாள் தர்மஸம்வர்த்தனியிடம் ஓடிப்போய் அப்படியே அவள் சரணத்தில் விழுந்து இப்படித் தம்முடைய ஸ்வதர்மத்துக்கு பங்கம் வரும் ஹேது நேர்ந்துவிட்டதற்காகக் கதறி முறையிட்டார். ஸதிபதிகள் அதோடு அப்படியே கிளம்பி, நின்ற இடத்தில் நிற்காமல் மஹாராஷ்ட்ராவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வங்க வித்வானை வென்ற வாலிபர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸ்நேஹத்திலும் சிறந்த சாஸ்த்ரியார்
Next