திருமாலும் அம்பிகையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹாவிஷ்ணு அம்பாளுக்கு உடன்பிறப்பு. ‘நாராயண ஸஹோதரி’ என்றே அம்பாளுக்குப் பெயர். தாக்ஷாயணி, பார்வதி, மீநாக்ஷி என்ற மாதிரி அம்பாள் அவதாரம் செய்ததில் எதிலும் மஹாவிஷ்ணு இப்படி ஸஹோதரராகப் பிறக்கவில்லை. க்ருஷ்ணாவதாரத்தின் போது மட்டுமே அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் ஸஹோதர – ஸஹோதரிகள் மாதிரிப் பிறந்தது. அதாவது க்ருஷ்ண பரமாத்மா தேவகீ வஸு தேவர்களுக்குப் புத்திரராக அவதாரம் செய்த அதே சமயத்தில், பிற்பாடு க்ருஷ்ணருக்கு வளர்ப்புப் பெற்றோராகவிருந்த நந்தகோபர் – யசோதா தம்பதிக்குப் புத்திரியாக அம்பிகை அவதாரம் பண்ணினாள். பகவான் அவதரித்தவுடன் லோகமெல்லாம் மயங்கிக் கிடந்தபோது வஸுதேவர் அவரைத் தூக்கிக் கொண்டுபோய், யசோதை பக்கத்தில் விட்டுவிட்டு அவளுக்குப் பிறந்திருந்த அம்பாளான குழந்தையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். பகவான் உத்திரவுப்படி இப்படிச் செய்தார். அப்புறம் கம்ஸன் நந்தகோபர் பெண்ணான அந்த அம்பாளவதாரத்தையே தன்னைக் கொல்லப் பிறந்த வஸுதேவரின் குழந்தை என்று நினைத்து, வதம் செய்யப் போனான். குழந்தையை அவன் கல் தரையில் அடிக்க ஒங்கியபோது அது சடக்கென்று ஆகாசத்திலே போய் அம்பாளாய் நின்றுகொண்டு, ‘அட முட்டாளே! உன்னைக் கொல்ல வந்திருக்கிறது வேறு ஆஸாமிடா!’ என்று சொல்லி அந்தர்தானமாகிவிட்டதாக பாகவதக் கதை போகிறது.

இதற்கெல்லாம் முன்னாலிருந்தே, அவதாரங்களுக்கெல்லாம் மூலமாக இருக்கப்பட்ட நாராயணன், பராசக்தி இவர்களையே ஸஹோதரர்களாகச் சொல்கிற வழக்கமிருந்திருக்கிறது. நாராயணனுக்கும் ஸரி, பராசக்திக்கும் ஸரி மாதா பிதாக்கள் கிடையாது. அவர்கள் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம ஸ்வருபமேதான். ஆனால் பொதுவிலே சிவன் லோக வியவஹாரம் முடிந்துபோன சாந்த நிலைக்கு மூர்த்தியாக இருக்கிறாரென்றால் இவர்களோ லோக வியவஹாரத்தைத் தங்களுடைய மாயா சக்தியால் நடத்தி லீலையில் ரமிப்பவர்களாக இருக்கிறார்கள். இரண்டுமில்லை, மூன்றுமில்லை, ஒன்றுதான். அதையே வ்யாவஹாரிகம் (விவகார நிலை) தொடாத பரமசாந்த பாவத்தில் சொல்லும் போது சிவன் என்றும், வ்யவஹாரக் கூத்திலே கொண்டாட்டம் போடும்போது புருஷ ரூபத்தில் பாவித்தால் நாரயணன் என்றும், ஸ்த்ரீ ரூபத்தில் பாவித்தால் பராசக்தி என்றும் சொல்கிறோம். ஒரே மாதிரியான கார்யத்தையும், ரூபம், குணம் முதலானதுகளையும் கொண்டிருப்பதால் விஷ்ணுவையும் அம்பாளையும் உடன் பிறந்தவர்களாகச் சொல்கிறோம். ஸஹோதரர்கள்தானே ஒரு மாதிரி இருப்பார்கள்? அதனால்.

மருமகனே மாப்பிள்ளையுமாக, அதாவது ஒருத்தனே இரண்டு அர்த்தத்திலும் “மருமவப் பிள்ளை”யாக இருப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி மஹாவிஷ்ணுவுக்கு ஸஹோதரியின் பிள்ளையாதலால் மருகனாக இருப்பது மட்டுமில்லை; அவர் கல்யாணம் பண்ணிக்கொண்ட வல்லீ தேவஸேனைகளும் பூர்வத்தில் மஹாவிஷ்ணுவின் புத்திரிகளாக உத்பவித்து அப்புறந்தான் ஒருத்தி வேடராஜாவிடமும் இன்னொருத்தி தேவராஜாவிடமும் போய்ச் சேர்ந்து வளர்ந்தார்களென்று கதை. அதாவது முருகன் மஹாவிஷ்ணுக்கு இரண்டு அர்த்தத்திலும் மருமகன். அதாவது இவருக்கு அவர் மாமா, மாமனார் இரண்டுமாக வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மாமா மஹிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருமாள் செய்த கோணங்கி
Next