திருமால் செய்த கோணங்கி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி விவாஹ ஸம்பந்தமில்லாவிட்டாலும், பிள்ளையாருக்கு மாமா மஹாவிஷ்ணுவிடம் ரொம்ப நெருக்கமுண்டு.

குழந்தைகளுக்குக் கோணங்கி காட்டினால் போதும், அதனிடம் எதையும் ஸாதித்துக்கொண்டு விடலாமென்றேன் அல்லவா? இப்படி மாமாக்காரரான மஹாவிஷ்ணு செய்த கோணங்கியாட்டம்தான் இப்போது விக்னேச்வர வழி பாட்டில் ரொம்பவும் முக்யமாயிருக்கிறது. பிள்ளையாரென்றால் உடனே தோப்புக்கரணத்தைத்தான் நினைத்துக்கொள்கிறோம். மற்ற ஸ்வாமிகள் மாதிரி இவர் ரொம்பச்ரமம் தருகிற ஸ்வாமி இல்லை என்று சொன்னேன். பெருமாளென்றால் அங்க ப்ரதஷ்ணம்; ‘முழங்கால் முறிச்சான்’ மலை ஏறிப்போகணும்; அலகு செடில் குத்திக் கொள்வது என்றெல்லாம் கூட உண்டு. ஈச்வரனுக்கோ ஒரே பசியும் பட்டினியுமாய் உபவாஸமிருக்க வேண்டும். இப்படியெல்லாமில்லாமல், ஸ்வல்ப ,ச்ரமமே தருகிறவர் பிள்ளையார்தான். அதுவுங்கூட வேடிக்கையாக, குழந்தை விளையாட்டு மாதிரி, அல்லது குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுகிற மாதிரித்தானிருக்கும். நெற்றியில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது இரண்டையுந்தான் சொல்கிறேன். ஒருத்தர் தோப்புக்கரணம் போட்டால் குழந்தையே முதற்கொண்டு அதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டு, தன் ஸ்வபாவப்படி தானும் அப்படி ‘இமிடேட்’ பண்ணும்.

இந்தத் தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணுதான். அவர் ஒரு ஸமயம் ஸஹோதரியைப் பார்ப்பதற்காகவும், தமக்கு ரொம்பவும் ஆபத்மான பரமேச்வரனோடு ஸல்லாபிப்பதற்காகவும், மருமான் கணேசரைக் கொஞ்சி விளையாடுவதற்காகவும் கைலாஸத்துக்கு வந்திருந்தார். அப்போது தம்முடைய சக்கரத்தைச் சுட்டிக் குழந்தைக்கு வேடிக்கை காட்டினார். உடனே குழந்தை தும்பிக்கையை நீட்டிச் சக்கரத்தைப் பிடிங்கிக்கொண்டு லபக்கென்று வாய்க்குள் போட்டு நன்றாக அடக்கிக் கொண்டுவிட்டது. மஹாவிஷ்ணு நயமாகவும் பயமாகவும் எத்தனை பண்ணியும் அது சக்கரத்தை வெளியே போடமாட்டேனென்று அடம் பண்ணி விளையாடிற்று. அப்போது தான் மஹாவிஷ்ணு யுக்தி பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டார். அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும். ‘ப்ரஸன்னவதன’க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரிக்கிறபோது வாயில் அடக்கிக் கொண்ட சக்ரமும் குபுக்கென்று வெளியிலே வந்து விழந்தது. சடக்கென்று அதை மஹாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார்.

மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது ஸம்ஸ்கிருதத்தில் “தோர்ப்பி: கர்ணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “தோர்பி:” என்றால் “கைகளால்.” “கர்ணம்” என்பது காது என்று தெரிந்ததே. கையால் கைதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பி(ஹ்) கர்ண’மே தோப்பிக்கரணம், தோப்புக்கரணம் என்றெல்லாம் ஆகிவிட்டது. குட்டிக்கரணம் என்கிற மாதிரி இங்கே கரணம் இல்லை கர்ணம் என்று சொல்லவேண்டும்

முதலில் யாரோ மநுஷாள் இதை ஆரம்பிக்காமல் மஹாவிஷ்ணுவே ஆரம்பித்தார் என்பதற்கும் ‘தோர்பி(ஹ்) கர்ணம்’ என்ற வார்த்தையிலேயே ‘எவிடென்ஸ்’ (சான்று) இருக்கிறது. அதைப் புரிய வைப்பதற்கு கொஞ்சம் ஸ்ம்ஸ்க்ருத இலக்கணம் சொல்லித் தரணும்.

தமிழ், இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ஒருமை, பன்மை, ஸிங்குலர்-ப்ளூரல் என்று இரண்டுதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட எல்லாம் பன்மை, ப்ளூரல் என்று வைத்துவிடுகிறோம். ஸ்ம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஏகவசனம், த்வி வசனம், பஹுவசனம் என்று மூன்று இருக்கின்றன. ஏகவசனம் என்பது ஒருமை. த்விவசனம் என்பது தமிழிலும் இங்கிலீஷிலும் இல்லாதது. அதை ‘இருமை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு பேர் அல்லது இரண்டு வஸ்துவை மட்டும் அது குறிக்கும். இரண்டுக்கு மேலே போகிற எல்லாம் பஹு வசனம். சிவம்-சக்தி, பரமாத்மா-ஜீவாத்மா, பகவான்-பக்தன், ஸதி-பதி, குரு-சிஷ்யன் என்றிப்படியும், ஒரு மநுஷ்ய ஜீவனை எடுத்துக்கொண்டால் அவனுக்கு இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால் என்றெல்லாமும் இருப்பதாலோ என்னவோ இரண்டு என்பதற்குத் தனி ஸ்தானம் தந்து ‘த்வி வசனம்’ என்ற ஒன்றை வைத்திருக்கிறது.

மநுஷ்யர்களால் தோப்புக்கரணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால்,’கைகளால் காதைப் பிடிப்பது’ என்பதில் ‘கைகளால்’ என்பதற்கு த்வி வசன வார்த்தைதான் இருக்கவேண்டும். ஏனென்றால் மநுஷ்யனுக்கு இருப்பது இரண்டு கைதானே? ‘தோஸ்’ என்பது கை. முதல் வேற்றுமை ஒருமையில் ஒரு கையை ‘தோ’ என்க வேண்டும். ‘கைகளால் ‘ என்பது மூன்றாம் வேற்றுமை ‘ஒரு கையால்’ என்பதற்கு தோஷா என்று சொல்லவேண்டும். ‘இரண்டு கைகளால்’ என்பதற்க்கு ‘தோர்ப்யாம். மநுஷ்யர்களான நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை ‘தோர்ப்யாம் கர்ணம்’ என்று தான் சொல்ல வேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட ‘தோப்பாங்கரணம்’ என்றுதான் ஆகியிருக்குமே தவிர, இப்போது நாம் சொல்வதுபோல ‘தோப்பிக்கரணம்’ என்றோ, ‘தோப்புக்கரணம்’ என்றோ ஆகியிருக்காது. “தோர்பி:” என்று மூல ரூபத்தில் இருந்தால்தான் அது சிதைந்து ‘தோப்பி’, ‘தோப்பு’ என்று ஆகியிருக்கும். “தோர்பி:” என்பதோ இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக் குறிக்கும் பஹுவசனமாயிருக்கிறது. தோஷா ஒரு கையால்; தோர்ப்யாம் – இரண்டு கைகளால்; தோர்பி(ஹ்) -இரண்டு மேற்பட்ட கைகளால் விஷ்ணுவுக்கு எத்தனை கை? நாலு கை. இரண்டுக்கு மேற்பட்ட நாலு கைகளால் அவர் காதைப் பிடித்துக் கொண்டதால் தான் தெளிவாக பஹுவசனத்தில் “தோர்பி(ஹ்) – என்று சொல்லி, அது ‘தோப்பி’ என்று ஆகிவிட்டிருக்கிறது.

மாமா-மருமான் உறவைச் சொல்ல வந்தேன். பிள்ளையாருக்குப் பிடித்த, எல்லாப் பிள்ளைகளுக்குமே பிடித்த, தோப்பிக்கரணத்தை அவரது மாமா மஹாவிஷ்ணுதான் ‘இனாகுரேட்’ பண்ணியிருக்கிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is திருமாளும் அம்பிகையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சுக்லாம்பரதரம்
Next