பூர்வகாலக் கலைகளும் ஸயன்ஸ்களும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படிப் போகப் போக, உபாஸனா மார்க்கம்தான் வித்யை என்பதும் விரிவடைந்து, இப்போது நாம் சொல்கிற அர்த்தத்தில் அநேக ‘ஆர்ட்’களும் ஸயன்ஸ்களும் ஏற்பட்டு, இவையும் வித்யை என்று பெயர் பெற்று குருகுலங்களில் கற்பிக்கப்படலாயின. சாந்தோக்ய உபநிஷத்திலேயே இப்படிப்பட்ட வித்யைகளுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, ‘எத்தனை காலத்துக்கு முன்னேயே நம் பூர்விகர்கள் இத்தனை துறைகளில் தேர்ச்சி கண்டு, அவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தும் வந்திருக்கிறார்கள்!’ என்பதாக நமக்கு ஆச்சர்யமே உண்டாகிறது.

அநேக வித்யைகளைக் கற்றும் ஆத்ம ஞானத்துக்கு அப்யாஸம் பண்ணாததால் நிறைவு காணாமல் ஏதோ ஒரு ஏக்கம் பிடித்து க்லேசப்பட்டுக் கொண்டிருந்த நாரதர், தாம் படித்த வித்யைகளின் பேர்களை ஸநத்குமாரரிடம் சொல்வதாக அந்த உபநிஷத்தில் வருகிறது. நாலு வேதங்கள், ஐந்தாவது வேதமாக நாரதர் சொல்கிற இதிஹாஸ புராணங்கள் ஆகியவற்றோடு “வேதங்களின் வேதம்” என்று அவர் குறிப்பிடும் வ்யாகரணம், “பித்ர்யம்” என்பதான பித்ரு கர்மாக்களைப் பற்றிய கல்பம், “ராசி” என்பதான கணித சாஸ்த்ரம், “தைவம்” என்னும் சகுன சாஸ்த்ரம், “நிதி” என்கிற பொருளாதார சாஸ்த்ரம், “வாகோ வாக்யம்” என்கிற தர்க்க சாஸ்த்ரம், “ஏகாயனம்” என்கிற ராஜநீதி, “தேவ வித்யா” என்பதான நிருக்தம் (அதாவது வேதத்தின் அக்ஷரங்களுக்கு அர்த்தம் சொல்கிற Etymology), “ப்ரஹ்ம வித்யா” (வேதாந்தம் பூராவுக்கும் ஏற்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யா என்ற பேர் இந்த இடத்தில் வேதமந்த்ர சப்தங்களை வழுவற நிர்ணயித்துத் தரும் சிக்ஷா சாஸ்த்ரம் என்ற phonetics-ஐ மட்டும் குறிக்கும்) “பூதவித்யா” என்னும் ஜீவஜந்துக்களைப் பற்றியதான Biology, “க்ஷத்ரவித்யா” என்பதான க்ஷத்ரியர்களுக்குரிய யுத்த சாஸ்த்ரம், அஸ்ட்ரானமி அஸ்ட்ராலஜீ ஆகிய இரண்டும் சேர்ந்த “நக்ஷத்ர வித்யா”, விஷங்களை முறிக்க வழி சொல்லித்தரும் “ஸர்ப்ப வித்யா”, “தேவஜன வித்யா” (அதாவது உச்சாணி தேவர்களுக்கும் நம்மைப் போன்ற மநுஷ்ய ஜாதிக்கும் இடையிலேயுள்ள ‘தேவஜன”ங்களான கந்தர்வர்களுக்குரிய ஸங்கீத நாட்ய நாடக சில்ப சித்ரக் கலைகள்) என்றிப்படி அநேக “கோர்ஸ்”கள் படித்ததாக நாரதர் சொல்கிறார்*.

நாரதர் மஹாமேதை பொருந்தியவர். அதனால் அவரால் இத்தனை படிக்க முடிந்தது. அதோடு இத்தனை படிப்பாலும் ஆத்மானந்த நிறைவைப் பெற முடியவில்லை என்று தெரிந்துகொள்கிற விவேக விநயங்களும் அவருக்கு இருந்தது. அதனால்தான் ஸநத்குமாரரை ஆச்ரயித்து அவரிடமிருந்து ஆத்ம வித்யோபதேசம் பெற்றிருக்கிறார். ஈச்வர தத்வத்தைக் காட்டிக் கொடுக்கவே கல்வி ப்ரயோஜனப்படவேண்டும் என்பதும் இதிலேயே தெரிகிறது. அது இருக்கட்டும். ‘நான்’ சொல்ல வந்தது – இத்தனை கோர்ஸ்கள், இத்தனை ஸப்ஜெக்ட்கள் ஏற்பட்டுவிட்டனவென்றால் அப்போது குருகுலமும் விஸ்தாரமாகிக் கொண்டே போய் பல டீச்சர்கள் இருந்திருக்க வேண்டும். நாரதரைப் போல இல்லாமல் இவற்றிலே ஒரு சில ஸப்ஜெக்ட்களை மட்டும் படிக்கும் மாணவர்களைக் கொண்ட தனித்தனியான பல க்ளாஸ்கள் அமைந்த பெரிய வித்யாசாலைகள் உண்டாயிருக்கவேண்டும். காட்டிலே ரிஷிகள் நடத்திய இப்படிப்பட்ட Forest University-களின் அடிப்படையிலேதான் டாகூர் சாந்தி நிகேதனம் அமைத்தது.

நாரதருக்கு ஏற்பட்ட குறை பொதுவாக அந்தக் கால வித்யார்த்திகள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்காது. ஈச்வர ஸம்பந்தம், ஆத்ம ஸம்பந்தம் உள்ளதாகவே அந்நாள் கல்வி இருந்தாலும் ஒரு ஸாமான்ய ஜீவனை வித்யாப்யாஸ காலத்திலேயே ஒரேயடியாக அவனுக்கு எட்டாத ஞானமார்க்கத்தில் பிடித்துத் தள்ளிவிடவில்லை. அறிவு ரீதியில் ப்ரம்ம வித்யையையும் சொல்லிக்கொடுத்தாலும் அதை அப்பொழுதே அவன் அநுபவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று நிர்பந்தப் படுத்தவில்லை. படிப்பு முடிந்த பிறகு அவன் கல்யாணம் கார்த்திகை பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகளைப் பெற்று இல்லற வாழ்க்கையை நன்றாய் நடத்திப் பழைய கர்மாக்களைத் தீர்த்துக்கொண்டும் தனக்கான கர்மாவைப் பண்ணியும் சித்த பரிபாகம் (பரிபக்குவம்) அடைந்து, அப்புறம்தான் ஸந்நியாஸி ஆகி ஆத்மவிசாரம் செய்ய வேண்டுமென்பதே வேத சாஸ்த்ர வழி. இதற்கு அநுகூலம் பண்ணும்படியாகவே கல்விமுறை இருந்தது.


*‘தேவஜன வித்யா’ என்பதை இரண்டாகப் பிரித்து, தேவ வித்யா என்பது காந்தர்வக்கலைகள், ஜன வித்யா என்பது வைத்ய சாஸ்த்ரம் என்று கொள்ளும் கருத்தும் உள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குருதக்ஷினை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்மம் - ப்ரஹ்மம்
Next