தர்மம் – ப்ரஹ்மம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தர்மம், ப்ரஹ்மம் என்று இரண்டு. தர்மம் இஹலோகத்தில் ஒழுங்காக வாழப்பண்ணுவது. ப்ரஹ்மம் பரலோக விஷயம். தர்மத்தின் வழியாக, தர்மத்துக்கான கர்மத்தின் வழியாகத்தான் ஒரு ஸாமான்ய ஜீவன் ப்ரஹ்ம விசாரத்துக்கும் போகமுடியும். தர்மம் என்ன என்று விசாரித்து, அறிந்து, அநுஷ்டிக்கவே பூர்வ மீமாம்ஸையாகிற கர்ம மார்க்க சாஸ்த்ரமும், ப்ரம்மத்தைப் பற்றி விசாரித்தறிந்து அநுபவிக்கவே உத்தர மீமாம்ஸையாகிற வேதாந்தமும் உள்ளன. அக்கால வித்யாசாலைகளில் வேதாந்தம் நிறையச் சொல்லிக் கொடுத்தாலும் அது அடிப்படையாக அதிலே ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகவே பெரும்பாலாருக்கு வைக்கப்பட்டது. அதிலேயே அப்போதே ஈடுபட்டுவிட வேண்டுமென்று வைக்கவில்லை. இஹலோக வாழ்க்கையை நன்றாக நடத்தி – அதாவது தர்மத்தின் வழியிலே நடத்தி – உரிய பக்குவம் பெற்ற பின்னரே ஒருத்தன் பூர்வத்தில் அறிவு ரீதியில் தெரிந்துகொண்ட ஆத்ம சாஸ்த்ரத்தில் பூர்ணமாக ப்ரவேசிக்கும்படியாகத்தான் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தின் வித்யாப்யாஸமும், பிறகு க்ருஹஸ்தாச்ரமத்தின் வாழ்க்கை க்ரமமும் உருவாக்கப்பட்டன. நாரதர் ஸாமான்ய ஜீவனாக இல்லாமல் அஸாதாரணமாக இருந்தவராதலால் அவருக்கு தார்மிகமான வாழ்க்கையோடு நின்றுவிடுவதில் வித்யாப்யாஸம் முடித்தபோதே குறை ஏற்பட்டு, ப்ரஹ்மஞானத்துக்கான ஏக்கம் உண்டாயிற்று. க்ருஹஸ்தாச்ரமத்துக்குப் போகாமல் ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ப்ரஹ்மஞான நிலைக்குப் போய்விட்டார்.

நாரதர் கதை இருக்கட்டும். ஸாதாரணமான ஒரு மநுஷ்யனை அதர்மத்தில் போக விடாமல் தர்மத்தில் செலுத்தி நல்ல தெய்வபக்தியும் அத்யாத்ம விஷயங்களில் அடிப்படையாக ஒரு பற்றும் கொள்ளும்படி ஆதிகாலக்கல்வி முறை அமைக்கப்பட்டது. அது எப்படி காலக்ரமத்தில் விஸ்தாரமாக வளர்ந்தது என்று சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பூர்வகாலக் கலைகளும் ஸயன்ஸ்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வைதிகமாகவே ஸகல வித்யைகளும்
Next