க்ருஹஸ்தர்களுக்கு ஏன்? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உபாகர்மாவும் உத்ஸர்ஜனமும் கல்வி ஸம்பந்தமானவை என்றால், இவை வித்யாப்யாஸம் செய்யும் ப்ரஹ்மசாரிக்கு மாத்திரம்தானே இருக்கவேண்டும்? இதை எப்படி க்ருஹஸ்தர்களுக்கும் சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது?

(இக்கேள்விக்குப் பதில் :) ப்ராம்மணனுக்கு சாஸ்த்ரபடியான கடமை அத்யயனம் செய்தபின் (தான் படித்தபின்) அத்யாபனம் செய்வதாகும் (தான் படித்ததைப் பிறத்தியாருக்குச் சொல்லிக் கொடுப்பதாகும்). ஒவ்வொரு ப்ராம்மணனும் இப்படி ஒரு சிஷ்யனுக்காவது சொல்லிக் கொடுக்கும்போது, ஒவ்வொரு டெர்மையும் வேதோக்தமான உபக்ரமண, உத்ஸர்ஜன கர்மாக்களோடு செய்து பரிசுத்தி செய்யவேண்டியதாகிறது. க்ருஹஸ்தனான பின் இவன் யாருக்கும் அத்யாபனம் பண்ணவில்லை என்றாலுங்கூட இவனுக்கே படித்தது மறந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காக அவற்றை இப்படி இரண்டு டெர்மாகப் பிரித்து ஆதியில் கற்றுக்கொண்டது போலவே மறுபடி மறுபடி நெட்டுரு போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதற்காகவும் உபாகர்மாவும் உத்ஸர்ஜனமும் ஒரு க்ருஹஸ்தன் பண்ண வேண்டியதுதான்.

தர்ம சாஸ்த்ரங்களில் க்ருஹஸ்த தர்மங்களை விவரிக்கிற பகுதியில்தான் உபாகர்மா (உத்ஸர்ஜனம் ஆகியவை) பற்றிச் சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மசர்ய தர்மங்களைப் பற்றிய பகுதியில் அல்ல.

கல்வி என்பதை ஈச்வர ப்ரீதியான ஒரு தபஸாகவே நினைத்த காலமானதால் ப்ரஹ்மோபதேசத்துடன் ஆரம்பித்து, அநேக வ்ரதங்களை அவ்வப்போது அநுஷ்டித்தே அதைப் பூர்த்தி செய்தார்கள்*. பூர்த்தி செய்வதற்கு ஸமாவர்த்தனம் என்று ஒரு சடங்கு உண்டு. அது ஆனபின்தான் ப்ரஹ்மசாரி கல்யாணம் செய்துகொண்டு க்ருஹஸ்தாச்ரமம் ஏற்பது. “உபாகர்மாவை ஸமாவர்த்தனமானவன் இன்ன முறையில் செய்யணும்; ஆகாதவன் இன்ன முறையில் செய்யணும்” என்று சில ஸ்ம்ருதிகளில் பிரித்துச் சொல்வதாலேயே இது ஸமாவர்த்தனம் செய்துவிட்ட க்ருஹஸ்தனுக்கும் உரியது என்று தெரிகிறது. கற்றுக் கொண்டது மறந்து போகாமலிருப்பதறகாக – இதை “தாரணம்” என்று சொல்லியிருக்கிறது – க்ருஹஸ்தனும் ஒரு ஸ்டூடண்டாகவே அத்யயனாதிகளைப் பண்ணிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று (ஸ்ம்ருதிகளை இயற்றியுள்ள) ரிஷிகளில் சிலர் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்கள்.


*இரண்டாம் பகுதியில் ‘பிரம்மச்சரியம்’ என்ற உரையில் ‘பிரம்மச்சர்ய ஆசிரமம்‘ எனும் பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கல்வித் திட்டத்தில் கால அளவைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  விடுமுறை நாட்கள்
Next