விடுமுறை நாட்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி வைதிக வித்தையின் “அகாடெமிக் இயரி”ல் இரண்டு டெர்ம்கள். லீவுநாளே கிடையாதா என்றால், உண்டு. குழந்தைகளை எப்போது பார்த்தாலும் படிப்பு என்று கெடுபிடி பண்ணாமல் ரெஸ்ட் கொடுக்கும் அருள் உள்ளம் நம் பூர்விகர்களுக்கு இல்லாமலில்லை. அத்யயனமில்லாத இந்த லீவுநாட்களுக்கு அநத்யயன தினங்களென்று பெயர். ஒவ்வொரு மாஸமும் அமாவாஸ்யை, பௌர்ணமி, இரண்டு பக்ஷ அஷ்டமி – சதுர்ததசிகள் என்று ஆறு நாள் அநத்யயனம். இது தவிர ஒவ்வொரு வருஷமும் உபாகர்மம், உத்ஸர்ஜனம் என்ற ஒவ்வொரு கோர்ஸும் முடிந்தபின் மூன்று மூன்று நாட்கள் அநத்யயனம். இதோடு ‘சாதுர்மாஸீ’ என்றும் வருஷத்தில் நாலு நாள் லீவ்.

இதெல்லாம் பஞ்சாங்கக் கணக்குப்படி வருஷம் தோறும் தவறாமல் வரும் லீவு நாட்கள். அதனால் இவற்றுக்கு “நித்ய” அநத்யயனம் என்று பெயர். இது தவிர நாள் கணிக்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் ஒரு “நிமித்த”மாக லீவ் விடவேண்டிய “நைமித்திக” அநத்யயனங்களும் உண்டு. மழை அடிக்கிறது, புயல் அடிக்கிறது என்றால், காட்டிலே நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது என்றால், நாட்டுக்குத் தலை மறைவாக ஒளிந்துகொண்ட கொள்ளைக் கூட்டத்துக்காரர்கள் இங்கே காட்டிலேயும் குருகுலங்களை ஹிம்ஸிக்க வருகிறார்கள் என்றால் – அப்போதெல்லாம் லீவ் விட்டுவிடுவார்கள். இச்சமயங்களில் பாடத்தை நிறுத்திவிட வேண்டுமென்று மநுதர்ம சாஸ்த்ரத்தில் மநுஷ்ய மனஸை அநுதாபத்தோடு அறிந்துகொண்டு சொல்லியிருக்கிறது.

க்ரஹணம் என்பதும் வருஷத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் வருவதில்லை. அதுவும் “நைமித்திக” லீவ் நாளாகக் கருதப்பட்டது. (க்ரஹணத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கப்படாதே தவிர ஏற்கனவே பாடம் பண்ணிய மந்த்ரங்களை ஜபிக்கவேண்டும். மற்ற காலத்தில் செய்யும் ஜபத்தைவிட் க்ரஹண காலத்தில் செய்யும் ஜபத்துக்கு வீர்யம் ரொம்பவும் அதிகமாகும்.)

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is க்ருஹஸ்தர்களுக்கு ஏன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாணவனை அடிக்கலாமா?
Next