“சுக்லாம்பரதரம்” ச்லோகம் எதற்கும் ஆரம்பத்தில் சொல்கிறோமே, அதிலே ஒரு வேடிக்கை! என்ன வென்றால், அதில் பிள்ளையாருடைய பெயர் எதுவுமே வரவில்லை! கணபதி, கணேசர், விநாயகர், விக்நேச்வரர் என்ற மாதரி அவருக்கே ஏற்பட்ட பெயரோ பெற்றோரைவைத்து ஏற்பட்ட சிவாத்மஜன், கௌரீஸுதன் என்ற மாதிரிப் பெயரோ, அவருடைய வாஹனம், ஆயுதம், இஷ்டமான வஸ்து ஆகியவைகளை வைத்து ஏற்பட்ட மூஷிக வாஹனர், பாசஹஸ்தர், மோதக ப்ரியர் முதலான ஏதாவதொரு பெயரோ, அவரது ரூப லஷணங்களைக் குறிக்கிற பெயர்களான கஜமுகர், ஏகதந்தர், லம்போதரர் (தொங்கும் தொந்திக்காரர்) முதலானதுகளில் ஏதாவதொன்றோ, அல்லது அவரது லீலைகளை வைத்து ஏற்பட்ட ஏராளமான பெயர்களில் எது ஒன்றுமோ ‘ சுக்லாம் பரதர’ ச்லோகத்தில் வரவில்லை. சொல்லிப்பாருங்கள்.
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் |
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்சயே ||
“சுக்லாம்பரதர”: வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர். ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூடத்தான் வெள்ளை கட்டிக்கொள்வார்கள். வித்யாஸமாக மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற ஸ்வாமிகளைப் பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி என்றெல்லாம் சொன்னால் அது அவர்களைத்தான் ஸ்பெஷலாகக் குறிக்கிறது என்பதுபோல, ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரை மாத்திரம் குறிப்பிட்டுவிடவில்லை.
அடுத்ததாக, “விஷ்ணு.” இதற்காகத்தான் நான் இந்த ச்லோகத்தைச் சொல்லவந்தேன். மாமா பேரையே மருமகனுக்குச் சொல்லியிருக்கிறது. அத்தனை அந்நியோந்நியம்! ‘விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும் இருக்கிறாரென்பதால் ‘விஷ்ணு’ என்று சொல்லியிருந்தாலும்; அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே நமக்கு அவருடைய மாமா நினைவுதானே வருகிறது?
“சசிவர்ண”: நிலா மாதிரி நிறமுடையவர். ஈச்வரனும், ஸரஸ்வதியும்கூடத்தான் அப்படிப் பால்நிலா மாதிரி இருப்பவர்கள்.
“சதுர்புஜ”: நாலு கை உள்ளவர். அநேகமாக எல்லா ஸ்வாமிக்குமே நாலு கைதானிருக்கிறது. அதனால் இதிலும் இவருக்கென்று ஸ்பெஷலாக அடையாளம் கிடைத்துவிடவில்லை.
“ப்ரஸந்ந வதந”: நல்ல மலர்ந்த முகமுள்ளவர் பின்னே, எந்த ஸ்வாமியாவது அழுமூஞ்சியாக இருக்குமா என்ன? காளி, வீரபத்ரர், நரஸிம்ஹ மூர்த்தி மாதிரி உக்ரமாக இருக்கப்பட்ட சில ஸ்வாமிகளைத் தவிர மற்ற எல்லா ஸ்வாமியும் பக்தர்களிடம் அநுக்ரஹத்தோடு ஆனந்தம் நிறைந்த முகத்தோடு இருப்பதைதான் இத்தனை ஆயிரம் விக்ரஹங்களிலும் பார்க்கிறோம். அவர்களையெல்லாம்விட இன்னம் ஆனந்தம் சொட்டிக் கொண்டிருக்கும்படியாகப் பரந்த, விசாலமான ஆனைமுகத்தோடு இவர் இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இப்படி சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,சதுர்புஜம், ப்ரஸந்ந வதநம் என்று வருகின்ற ஐந்து வார்த்தைகளில் எதுவுமே பிள்ளையாரொருவரை மட்டுந்தான் குறிக்கிறது என்று சொல்வதற்கு இடமில்லாமலிருக்கிறது.
(இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும்)
அப்புறம், ‘த்யாயேத்’ என்பதற்கு ‘த்யானிக்க வேண்டும்’ என்று அர்த்தம்.
எதற்காக த்யானிக்க வேண்டும்? “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே, இங்கே தான், ஒரு நாமாவாகச் சொல்லாவிடிடாலும், பிள்ளையாருக்கென்றே ஏற்பட்ட விசேஷ லக்ஷணம் தெரிகிறது. எடுத்த கார்யம் விக்னமில்லாமல் நடக்க வேண்டுமென்றால் அதற்கென்று பிரார்த்திக்கப்பட்டவேண்டிய ஸ்வாமி பிள்ளையார்தான். அதனால்தான் எந்தக் கார்யத்தையும் ஆரம்பிக்கிறபோதே அவருக்குப் பூஜை பண்ணிவிடுவது; இந்த ஒரு ச்லோகமாவது சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்டுவிடுவது.
ச்லோகம் சொல்லிக்கொள்ளக்கூடிய வயஸுக்கு முந்தியே ஒரு சின்னக் குழந்தையிடம்கூட, ‘அப்பா! பிள்ளையாரை நினைச்சுக்கோ! அப்போதான் எந்தக் கஷ்டமும் வராமலிருக்கும்’ என்று சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். அதனால், ச்லோகம் கற்றுக் கொள்கிற வயஸு வந்தபோது, இப்படி ‘ஸர்வ விக்நோபசாந்தயே’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டாலே போதும், ‘இடைஞ்சல் வராமலிருப்பதற்காக இந்த ஸ்வாமிக்கு ஸ்தோத்ரம் சொல்லணுமா? அப்படியானல் அவர் பிள்ளையாரகத்தானிருப்பார்’ என்று அந்தக் குழந்தைகூடப் புரிந்துகொண்டுவிடும்.
‘விஷ்ணு’ என்றே இந்த ச்லோகத்தில் இருப்பதிலிருந்து பிள்ளையாருடைய உறவு முறைகளில் மாமாவின் அருமை தெரிகிறது.
அதை வைத்துத்தான், சற்றுமுன் சொன்ன ச்லோகத்தில் “ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய”-எவருக்கு மாமா லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவோ- என்று ஆரம்பிக்கிறது. (மலையாளத்தில் ‘மருமக்கத்தாயம்’ என்று மருமான் வழி, மருமான் வழியாக ஸொத்து போகும் முறை ஞாபகம் வருகிறது.)