இன்ஸ்டிட்யூஷன் (ஸ்தாபனம்) என்று பலபேர் சேர்கிற போது அது கலந்தாங்கட்டியாகத் தானிருக்கும். அப்படியிருந்தாலும் அது இன்டிவிஜுவலிடம் (தனி மனிதனிடம்) தெரிவதுபோல தோஷமாகத் தெரியாது. தனியாக ஏதாவது ஒரு பூவை மட்டும் வைத்து மாலை கட்டினால் அதிலே நடுவிலே எங்கேயாவது ஒரு தழை, அல்லது துர்நாற்றமெடுக்கும் துருக்க ஜாமந்திப் பூ மாதிரி ஒன்றே ஒன்று சேர்ந்திருந்தால்கூட உடனே காட்டிக் கொடுத்து விடும். அதைத் தூக்கிப் போட்டுவிடுவோம். இதுவே பலவித புஷ்பங்களும் சேர்ந்த கதம்ப மாலையாக இருந்தால் அதிலே இந்த வாஸனைப் புஷ்பங்களுக்கு ஸமமாகத் தழையும் துருக்க ஜாமந்தியும் இருந்தாலும் தெரியாது. கத்திரிக்காய் ஒரே விதையாயிருக்கிறது. அவரைக்காய் ஒரே முற்றலாயிருக்கிறது என்றால், “தனியாகச் சமைக்க வேண்டாம், அவியலிலே போட்டுவிடுங்கள்” என்பார்கள். தனியாக ஒரு பண்டமிருந்து அது கொஞ்சம் மூளியாகிவிட்டால்கூட ப்ரயோஜனமில்லையென்று தூக்கிப்போட்டு விடுகிறோம். ஆனால் இந்தமாதிரி ஓட்டை உடைசல், கண்ணாடிச் சில்லுகள், வீணாய்போன ப்ளாஸ்டிக் துண்டுகள் துணிக் கிழிசல்கள் முதலியவற்றை வைத்தே கண்ணைக் கவருகிறமாதிரி டிஸைன்கள், பொம்மைத்தேர் முதலானதுகள் கூடப் பண்ணுவதாக அவ்வப்போது பேப்பரில் பார்க்கிறோமல்லவா?
இப்படித்தான் நம்மிலும் ஆகாதது போகாததுகளை எல்லாம் வைத்தே ஆர்கனைஸேஷன், இன்ஸ்டிட்யூஷன் என்று ஏற்படுத்தி ப்ரமிக்கப் பண்ணிவிடலாம். நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை – உங்களுக்கே தெரியும், இப்போது ப்ரமாதமாக எத்தனையோ ஸங்கங்கள் இருக்கின்றனவே, அவற்றிலே தனியாக ஆள் ஆளாக எடுத்துப் பார்த்தால் எத்தனை பேரை சுத்தம் என்று சொல்லமுடியும் என்பது ஸந்தேஹந்தான். பலபேர் சேர்ந்து இருக்கும் போது தோஷங்களைப் பூசி மெழுகிவிட முடியும்.
பசங்களுக்கு புத்தி மட்டும் வளர வேண்டுமென்றில்லாமல் காரெக்டரும் (குணநலனும்) வளரணும் என்றால் அது சுத்தமான இன்டிவிஜுவல் குருமார்களால் நடக்கிற அளவுக்கு இன்ஸ்டிட்யூஷனில் ஒருநாளும் முடியாது. இன்ஸ்டிட்யூஷனில் அறிவைத்தான் பரீக்ஷித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது. சிஷ்யனைக் கூடவே வைத்துக் கொண்டு, அவனைப் பணிவிடை செய்ய வைத்து, அவனுக்கு ஆஹாரம் போட்டு வளர்க்கும்போதுதான், கூடவே குணத்தையும் வளர்க்க முடியும்.
ஸ்கூலில் அட்மிஷன்போது முடிவது வெறுமே புத்தியைப் பரீக்ஷித்துப் பார்ப்பதுதான். குணத்தைப் பரீக்ஷித்து, அதை எப்படி அபிவ்ருத்தி பண்ணணும் என்று பார்க்கவும், திருத்த முடியாத சரக்கு என்றால் பாடம் கிடையாது என்று தள்ளிவிடவும் இதில் இடமில்லை. நம் பண்டைய முறையிலோ குணத்தோடு சேராத கல்வி கல்வியே இல்லை. கீதையை முடிக்கும்போது பகவான், “ந அதபஸ்காய, ந அபக்தாய, ந அசுச்ரூஷவே” என்பதாக, அதாவது தீவிர தாபமில்லாதவனுக்கும், பக்தி இல்லாதவனுக்கும், பணிவிடை செய்யாதவனுக்கும் போதிக்கவே கூடாது என்கிறார். ஒரு வருஷமாவது கூட வைத்துக்கொண்டு வாஸம் பண்ணி சிஷ்யன் குணத்தைப் பற்றி த்ருப்தி அடைந்தாலொழிய பெரிய விஷயங்களைக் கற்பிக்கக்கூடாதென்று சாஸ்த்ரம் (“நாஸம் வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்“) . இதுகளுக்கெல்லாம் ஸ்கூலில் இடமில்லை. அதனாலேதான் அறிவை மட்டும் வளர்ப்பதாகவும், புத்தி ஸாமார்த்தியத்தை மாத்திரம் கொண்டு நல்லதற்கில்லாதவைகளையே தினந்தினம் வ்ருத்தி செய்து லோகத்தைக் கெடுப்பதாகவும் ஏற்பட்டிருக்கிறது.
(ஒரு வருஷம் டெஸ்ட் பண்ணிவிட்டுப் பாடம் ஆரம்பிக்கணுமென்று சொன்னதில் இன்னொன்று ஞாபகம் வருகிறது. ஒரு வருஷம் ஆனபிற்பாடு பையனைத் திருப்பியும் அனுப்பாமல், வித்யாப்யாஸமும் ஆரம்பிக்காமல், “படிப்புக்கு யோக்யதையில்லாவிட்டாலும் நன்றாக மாடு மாதிரி உழைக்கிறான். அதனால் வேலை வாங்கலாம்” என்றே ஒரு ஆசாரியன் தன்கூட வைத்துக் கொள்ளலாமல்லவா? இப்படி வித்யாதானத்துக்காக இல்லாமல், ஸ்வய காரியத்துக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தை உத்தேசித்தோ ஒருவர் தன்னிடம் படிக்கவந்த பையனுக்கு ஒரு வருஷமாகியும் வித்யோபதேசம் பண்ணாமலிருந்தால் அந்தப் பையனின் பாபமெல்லாம் இவரைச் சேர்ந்துவிடும் என்று சாஸ்த்ரத்தில் இருக்கிறது. சிஷ்யனாக ஆன பிற்பாடு ஒருவன் பண்ணும் பாபம் (அவனை நல்வழிப்படுத்தத் தவறிய) குருவைச் சேரும் என்று சொல்லியிருப்பது மட்டுமின்றி, இப்படிச் சில ஸந்தர்ப்பங்களில் ஒருத்தனை சிஷ்யனாக எடுத்துக்கொள்ளாமலிருப்பதாலேயும் அந்தப் பாபம் ஸம்பவிக்கும் என்று சொல்லியிருக்கிறது! குருவாக இருப்பதில் இத்தனை பொறுப்புக்கள்!
சில பெரிய ரிஷிகள் ரொம்பவும் உத்தமமான மாணவனின் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பல வருஷங்கள் போதிக்காமலிருந்ததாகவும் அபூர்வமாகச் சில கதைகள் இருக்கின்றன.
இன்ஸ்டிட்யூஷனாக இல்லாமல் இன்டிவிஜுவல் லெவலிலேயே வித்யாப்யாஸம் நடப்பதென்பதுதான் மாணவனுக்கு மட்டுமில்லாமல் வாத்யாருக்கும் நல்லது. அவர் தனியாக நின்றே சோபிக்க வேண்டுமென்னும் போதுதான் தன்னை அப்பழுக்கற்றவராக்கிக் கொள்ளவேண்டுமென்பது அத்யாவச்யமாய்விடுகிறது.