நம்முடைய பண்டைய நூல்களைப் பார்த்தால் இப்படி குருகுலம் நடத்திய குருமார்கள் எத்தனை உசந்த குணவான்களாக, அன்புள்ளம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது.
ஒரு லாபத்தையும் எதிர்பார்க்காமல், வேத வித்யை எதிர் காலத்துக்குப் போய் லோகம் க்ஷேமமடைய வேண்டுமென்பதற்காகவே, யாரோ ஊரான் வீட்டுப் பிள்ளையைத் தன்னோடு வருஷக்கணக்காக வைத்துக்கொண்டு, அவனிடம் தொண்டை தண்ணி வற்ற “மாரடித்த” குருமார்கள் இப்படி வம்ச பரம்பரையாக நம் தேசத்திலிருந்து வந்திருப்பதுதான் நமக்குள்ள எத்தனையோ பெருமைகளில் சிகரமாகவுள்ள பெருமையாக தெரிகிறது.
தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற எண்ணமேயில்லாமல், “நான் தங்கள் சிஷ்யனாக வந்துவிட்டேன்” என்று மனஸார ஒருத்தன் வந்துவிட்டால் அவனுக்குத் தாங்கள் கற்றறிந்த ஸகலத்தையும் கற்பித்திருக்கிறார்கள். ப்ருஹதாரண்யக (உபநிஷ)த்திலே (6-2) கௌதமருக்கு ப்ரவாஹணன் என்ற ராஜா உபதேசம் செய்யுமிடத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
இதே மாதிரி சிஷ்யனும், ‘வித்யைதான் வேண்டும், அதற்குப் பதில் எத்தனை பொருள் கொடுத்தாலும் வேண்டாம்’ என்று உதறித் தள்ளியதையும் இதே கதையின் இன்னொரு version வரும் சாந்தோக்ய (உபநிஷ)த்தில் (5-3) பார்க்கிறோம்: “கௌதம பகவானே! பூலோகச் செல்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்” என்கிறான் ராஜா ப்ரவாஹணன். “அதொன்றும் எனக்கு வேண்டாம். எனக்குத் தெரியாததாக உனக்குத் தெரிந்துள்ள வித்யைதான் வேண்டும்” என்கிறார் கௌதம ரிஷி. ‘பகவான்’ என்றே அழைக்கப்பட்ட ஒரு ரிஷி, வர்ணத்தில் தனக்குப் பின்னே வருகிற ஒரு க்ஷத்ரியனிடம் வித்யை வேண்டுகிறாரென்பதிலிருந்து உண்மையை அறிவதில் அக்கால ப்ராமணர்கள் எப்படி அஹங்காரமில்லாமல், அடக்கத்தோடு ஆர்வமாயிருந்தார்களென்பதும் தெரிகிறது.
“நிறைகுடம் தளும்பாது” என்பது இங்கே இன்னொரு விதத்திலும் தெரிகிறது.
கௌதமருடைய பிள்ளை ச்வேதகேது கொஞ்சம் தலைகனம் உள்ளவன். தலைகனத்துப் போனால் உள்ளே எப்படி வித்யை இறங்கும்? இவனுடைய அறியாமையை இவனே உணர்கிற மாதிரி தகப்பனாராகப்பட்டவர் இவனைக் கேள்வி கேட்டுப் பரீக்ஷித்து, இவனுடைய அஹங்காரம் அடிபட்டுப் போன பின், இன்றைக்கும் லோகம் பூரா கொண்டாடும் ஜீவ ப்ரம்ம அபேதத்தைச் சொல்வதான மஹாவாக்யத்தை இவனுக்கு உபதேசிக்கிறார். இது பின்னாடி வரும் கதை. இதற்கு முன்னாடி இவன்தான் முதலில் ப்ரவாஹணனிடம் போகிறான். அந்த ராஜா கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் போனவுடன் இவனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது. தகப்பனாரிடம் வந்து, “எவனோ க்ஷத்ரியன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற நீசன் என்னை இப்படியெல்லாம் கேள்வி கேட்டுவிட்டான்” என்று படபடக்கிறான். இதுதான் குறைகுடத்தின் லக்ஷணம் – “ரொம்ப லக்ஷணம்!” என்கிறோமே அப்படிப்பட்ட “லக்ஷணம்!” இதைக் கேட்ட நிறைகுடமான தகப்பனாரோ, “அடடா, இந்த விஷயங்களை நாம தெரிஞ்சுக்கணுமே” என்ற ஆர்வத்தோடும், அடக்கத்தோடும் போய் ராஜாவிடம் உபதேசம் கேட்கிறார்.
இதே கௌதமரிடம் இன்னொரு ஸந்தர்பத்தில் ஐந்து பெரிய வைதிக அநுஷ்டான சீலர்கள் “வைச்வாநர ஆத்மா” என்பது பற்றிக் கேட்டுக் கொள்வதற்காக வருகிறார்கள். (இதிலிருந்து பெரிய பெரிய ச்ரௌதிகளும் எப்படி வித்யைக்காகத் தேடித்தேடிப் போனார்கள் என்பது தெரிகிறது.) அப்போது அவர், “இவர்கள் கேட்பது நமக்குத் தெரிந்த மாதிரி எதையாவது கதைக்கப்படாது” என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, திறந்த வெள்ளை மனஸோடு தமக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டு, கேகய ராஜாவான அச்வபதியிடம் அவர்களை அனுப்பி வைக்கிறார். இப்போது நம் நாளிலோ வேடிக்கையாகச் சொல்கிறார்கள் – “ப்ரொஃபஸர் என்றாலே, வாஸ்தவத்தில் ‘ஸப்ஜெக்ட்’ தெரிந்தவரல்ல, அப்படி ‘ப்ரொஃபஸ்’ பண்ணிக் கொள்பவர், அதாவது தெரிந்ததாகச் சொல்லிக் கொள்கிறவர்தான்”, என்று!
இன்னொரு உபநிஷத்திலும்*, இப்படியே வருகிறது. அதோடு வேறு பல உசந்த உண்மைகளும் தெரியவருகிறது. ஸுகேசர், ஸத்யகாமர் முதலான ஐந்து பெரியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ப்ரம்மத்தையே தேடித்தேடி அதிலேயே ஊறிவிடுகிற “ப்ரஹ்ம பரர்கள், ப்ரஹ்ம நிஷ்டர்கள்” என்று சொல்லியிருக்கிறது. இந்த மஹா பெரியவர்களும் சில தத்வங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நிஜமான வித்யாபிமானத்தோடு, ரொம்பவும் பணிவாக ஸமித்துக்களை எடுத்துக்கொண்டு பிப்பலாதர் என்கிற மஹானிடம் வந்து, அந்த உபஹாரத்தை (ஸமித்து என்னும் கையுறையை) ஸமர்ப்பணம் பண்ணி, தங்களுக்கு உபதேசிக்கும்படியாக விஞ்ஞாபித்துக் கொள்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களையுங்கூட இன்னும் பரிசோதித்துப் பார்க்கணும், அதனால் எல்லா ஜனங்களுக்கும் பாடம் புகட்டணும் (வேத வித்யா பாடம் ஒருபக்கம் இருக்கட்டும், அதோடு வாழ்க்கையுதாரணப் பாடமும் புகட்டணும்) என்று பிப்பலாதர் நினைக்கிறார். “இன்னமும் ஒரு வருஷம் சுத்த ப்ரஹ்மசர்யத்தோடு தபஸ் பண்ணிவிட்டு நல்ல ச்ரத்தையோடு திரும்பி வாருங்கள். நீங்கள் கேட்பதற்கு பதில் சொல்கிறேன். தயங்காமல் என்ன கேள்வி வேணுமானாலும் கேளுங்கள் (“யதா காமம்” “இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும்” என்று உபநிஷத்திலிருக்கிறது). எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்கிறேன்” என்கிறார். இது இவருடைய விநயம்.
முதலில் ஒரு வருஷ தபஸ் விதித்தது அவர்களுடைய விநயத்துக்கு டெஸ்ட். குரு என்று ஒருவரிடம் போனால் அவர் எது சொன்னாலும் நல்லதுதான், சரிதான் என்று நம்பி அப்படி செய்யவேண்டும். இந்த நம்பிக்கைக்குத்தான் ச்ரத்தை என்று பெயர்.
*பிரச்னோபநிஷத்