குரு பத்னி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனால் ஸத்யகாமருடைய பத்னிக்குத்தான் அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. அவள் அவரிடம் போய், “இந்தப் பிள்ளை நல்ல ப்ரம்மசர்யத்தோடு, தபஸ்ஸோடு இத்தனை வருஷம் உம்முடைய அக்னிகளைப் போஷித்து வந்திருக்கிறான். நீரானால் அவனுக்குப் பாடமே சொல்லித் தரக் காணோம். இந்த அக்னிகள் உம்மை சபிக்காமலிருக்க வேண்டுமானால் இந்த ஸாதுப் பிள்ளைக்கு இப்போதிலிருந்தாவது பாடம் ஆரம்பியும்” என்று சண்டைக்கு வந்துவிட்டாள்.

சண்டை என்றாலும் அதிலேயும் ரஸம் இருக்கிறது. அவள் சொன்னதிலிருந்து அநேக ரஸமான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். முதலில், குரு பத்னி என்பவள் எப்படி குருவைவிடவும் சீஷப்பிள்ளைகளிடம் வாஞ்சையோடு இருந்தாள், அகத்தைவிட்டு வந்த குழந்தைகளுக்கு எப்படி அம்மாவாக இருந்தாள் என்று தெரிகிறது.

தர்ம பத்னிகளில் உள்ள இரண்டு தினுஸில் ஒன்றும் இங்கே தெரிகிறது. பத்னியின் தர்மம் புருஷன் சொல்வது தர்மமா அதர்மமா என்றே பார்க்காமல் அதன்படி செய்ய வேண்டுமென்று கருதும் பதிவ்ரதைகள் ஒரு தினுஸு. நளாயினி இப்படித்தான் அழுகிச் சொட்டும் புருஷனை அவனுடைய இச்சா பூர்த்திக்காகத் தகாத இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போனாள். இன்னொரு தினுஸு, பதியானவன் தர்மத்திலிருந்து தப்பிவிடக்கூடாதே என்ற விசாரத்தில் அவனுக்கே தர்மங்களை நினைப்பூட்டுவதுதான் பத்னியின் கடமை என்று கருதும் பதிவ்ரதைள். இப்படித்தான் ஸீதை ராமரிடம், அவர் அவளை விட்டுக் காட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, “எந்தக் கஷ்ட நஷ்டத்திலும் பதியை விட்டுப் பிரியாமலிருப்பதுதானே ஸ்த்ரீ தர்மம்? இந்த தர்மத்தை உங்களுடைய தாயாருக்கு எடுத்துக் காட்டித்தானே அவர் உங்களோடு காட்டுக்கு வராமல் உங்கள் அப்பாவின் பக்கத்தில் இருக்கும்படிப் பண்ணியிருக்கிறீர்கள்? அப்படியிருக்க எனக்கு மட்டும் அந்த தர்மம் இல்லையா என்ன? என்னைக் காட்டுக்கு வராமல் இங்கேயே இருக்க வேண்டுமென்று நீங்கள் சொல்வது எப்படி நியாயம்?” என்று நிரம்ப வாதம் பண்ணிமுடிவில் ராமரையும் ஸம்மதிக்கச் செய்தாள்.

“அக்னி கோபித்துக் கொண்டுவிடும்” என்று ஸத்யாகாம ரிஷியின் பத்னி அவரிடம் சொன்னது, “உம்மாச்சி கண்ணைக் குத்திவிடும்” என்று குழந்தைகளை நாம் பயமுறுத்துகிற மாதிரி இல்லை. வாஸ்தவமாகவே ரிஷிகளின் க்ருஹங்களில் திவ்ய சக்திகள் உயிருள்ள ஸாந்நித்யத்தோடு இருந்ததால் அவர்கள் தர்ம விருத்தமாகப் போனால் அவை அவர்களிடம் கோபம் கொள்ளத்தான் செய்யும். ‘உபகோஸலன் உபதேசமாகாமல் இப்படிப் பல வருஷங்களாக இருக்கிறானே’ என்று அவனுக்காகக் கவலைப்பட்டாற்போலவே, ‘இப்படிப் பதி உபதேசிக்காமலிருக்கிறாரே! இவரை அந்தப் பிள்ளை காத்து வளர்க்கிற இவருடைய அக்னியே சபித்துவிடாமலிருக்க வேண்டுமே!’ என்றும் வாஸ்தவமாகவே அந்த அம்மாள் கவலைப்பட்டிருக்கிறாள்.

அக்னிகள் அந்த ஆச்ரமத்தில் ரொம்பவும் ஜீவசக்தியோடு ஸாந்நித்யமாகத்தான் இருந்தன என்பதும் மேலே போகிற கதையில் தெரிகிறது.

அவள் அப்படிச் சொல்லியும் ரிஷி பாட்டுக்கு, இன்னும் சோதித்துப் பார்ப்போமென்கிறாற்போல், வெளியே போய் விட்டார்.

‘குரு பத்னி சொல்லியும் குரு கேட்கவில்லையே! இப்படி நம் நிமித்தமாக அவர்களுக்குள் அபிப்ராய பேதம் வேறே ஏற்பட்டுவிட்டதே’ என்றெல்லாம் உபகோஸலனுக்கு வேதனையாகிவிட்டது. அவனுக்குச் சாப்பாடே இறங்கவில்லை.

“ஏண்டா கொழந்தே, சாப்பிடாமலிருக்கே?” என்று குருபத்னி விசாரமாகக் கேட்டாள்.

“மனோ வ்யாதிதான். சாப்பாடு கேட்கமாட்டேன் என்கிறது” என்றான் பையன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சோதித்துத் துலக்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தெய்வசக்திகள் போதித்தாலும் குருபக்தி குறையாதது
Next