தனித்துறவியும், பீடகுருவும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

படிப்பு விஷயத்திலும் இது – அதாவது சிஷ்யர்களின் தரமே குருவின் தரத்தையும் நிர்ணயிக்கிறது என்ற உண்மை – குரு பீடங்களுக்கும் பொருந்தத்தான் செய்கிறது. வெறுமே ஒரு ஸந்நியாஸி இருந்தால் அவனுக்கு அவனுடைய ஸமயதத்வ ஸம்ப்ரதாயத்தைப் பற்றிய அறிவு மட்டும் இருந்தால் போதும். அப்புறம் இதையும் கடந்து அவன் ஆத்மாவே ஆத்மா என்று ஞானியாகவோ, ஈச்வரன் விட்ட வழி என்று பக்திமானாகவோ ஆகிவிடவேண்டும். ஆனால் குருபீடம், மடாலயம் என்பதில் உட்கார்ந்திருக்கும் ஸந்நியாஸியின் விஷயம் இப்படி இல்லை. சாஸ்த்ர விஷயமாக அவர்களைக் கேள்வி கேட்கிற சிஷ்யர்களுக்கு பதில் சொல்லி விளக்க வேண்டிய கடமை, வித்வஸ் ஸதஸ்கள் நடத்திச் சிக்கலான சாஸ்த்ர ஸமாசாரங்களுக்கு தீர்வு காணவேண்டிய கடமை ஆகியன மடாலயத் தலைவர்களுக்கு இருக்கிறது. ஆனபடியால் இவர்களே சாஸ்த்ரங்களில் ஆழ்ந்த கல்வி பெற்றவர்களாயிருக்க வேண்டும்.

சாஸ்த்ர விஷயமாக ஆலோசனையும் புத்திமதியும் கேட்கிற சிஷ்யர்கள் நிறைய இருக்கிறபோதுதான் இப்படிப் பட்ட மடாதிபதிகளுக்கு, ‘நாம் நல்ல சாஸ்த்ர ஞானம் ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும். பண்டித ஸதஸ்கள் நடத்தி சாஸ்த்ரங்களை அலசி முடிவுகள் காணவேண்டும்’ என்ற ஆர்வமிருக்கும். இப்படி ஆலோசனை கேட்பதற்கு சிஷ்யர்களுக்கும் சாஸ்த்ரக் கல்வி இருந்தால்தான் முடியும். சாஸ்த்ர அறிவு இல்லாத சிஷ்யர்களுக்கு அதில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதான ஸந்தேஹங்களே ஏற்படுவதற்கில்லையே! இப்படி ஸந்தேஹம் ஏற்படும்போதுதானே சிஷ்யர்கள் தங்கள் குருவாக இருக்கிற மடாலயத் தலைவரிடம் யோசனை கேட்கப் போவது? வரவர சிஷ்யர்களிடம், அதாவது பொதுவாகவே நமது ஹிந்து ஜன ஸமூஹத்திடம் சாஸ்த்ர ஞானம் குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் எவ்வளவுக்கு வித்யையில் ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கே குருபீடங்களும் ஞானமுள்ளதாயிருக்கும்.

இதை நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது; தற்போது மக்கள் சாஸ்த்ரியப் படிப்பில் குறைந்துகொண்டே வருவதால் அந்த நிலைக்கு குருபீடங்களும் இறங்கிவிடுகிற ஆபத்தான ஸ்திதியில் இருக்கிறோம். தற்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சாஸ்த்ரங்களைக் காப்பாற்றித் தர வேண்டிய குருபீடங்களே அதில் தரம் குறைந்துபோகுமானால் அதைவிட நம் மதத்துக்குப் பெரிய ஆபத்து என்ன? அதனால் உங்களுக்காகவே நீங்கள் சாஸ்த்ர அறிவு பெற வேண்டுமென்பதோடு, எங்களை நாங்கள் வாஸ்தவமாக இருக்க வேண்டியபடி உருவாக்குவதற்காகவும், நீங்கள் முடிந்த மட்டும் சாஸ்திரங்களை அப்யாஸம் செய்ய வேண்டும். அதாவது, ‘குரு பீடங்களிலுள்ள குருமார்களை சாஸ்த்ர ரக்ஷணத்தில் ஊக்கமுள்ளவர்களாக விளங்கச் செய்வது நம் பொறுப்பு’ என்ற உணர்வோடு, அதை முன்னிட்டும் நீங்கள் உங்கள் சாஸ்த்ர ஞானத்தை வ்ருத்தி செய்துகொள்ள வேண்டும்.

இப்படி இல்லாதபோது என்ன ஆகிறது? “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை” என்கிறாற்போல நான் ஏதோ இரண்டு விஷயம் சொல்லிவிட்டால் என்னைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொள்கிறீர்கள். ஒரு என்ஜினீயருக்கு என்ஜினீயரிங் தெரிந்திருக்க வேண்டும், ஒரு டாக்டருக்கு வைத்ய சாஸ்த்ரம் தெரிந்திருக்கவேண்டும் என்கிற மாதிரி ஒரு குருபீடத் தலைவருக்கு சாஸ்த்ரங்கள் தெரிந்துதான் இருக்கவேண்டும். தெரியாவிட்டால்தான் தோஷம். ஏதோ கொஞ்சம் தெரிந்ததற்காகத் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

பழைய சாஸ்த்ர விஷயங்களோடு பல புது ஸயன்ஸ் விஷயங்கள், ஹிஸ்டரி, கல்வெட்டு, பாஷா சாஸ்த்ரம் என்று சிலதும் சொல்கிறேன். என்னிடம் இந்த எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வருகிறார்களல்லவா? அவர்கள் ஏதோ தங்கள் குறைகளைச் சொல்லிக்கொள்ள வருகிறார்கள். அப்போது நடுவிலே அவர்கள் வாயைக் கிளறி அவர்களுக்கு நிறைவாகத் தெரிந்த அவர்களுடைய ஸப்ஜெக்ட்களைப் பற்றிக் கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இப்படியாக அநேக ஸப்ஜெக்ட்களில் A,B,C தெரிந்து வைத்துக் கொண்டுதான் லெக்சர் அடிக்கிறேன். இதையே பார்த்து ப்ரமித்து “ஞான த்ருஷ்டி”, “ஸர்வஜ்ஞதை”, “கலைக்களஞ்சியம்” என்றெல்லாம் ஸ்தோத்ரம் செய்வதாக இருக்கிறது!

சிஷ்யர் கூட்டம் சிறந்த அறிவாளிகளாயிருந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல் குருவும் தன் வித்யா வ்யுத்பத்தியை (கல்வித் தேர்ச்சியை) உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தமுண்டு என்று காட்ட வந்தேன்.

சின்ன ஸ்கேலில் ஒரு குருகுலமாக ஆசார்யனும் மாணாக்கர்களும் மனஸ் ஒட்டி வாழ்கிறபோதுதான் சிறந்த ஆசார்யர்கள், சிறந்த மாணாக்கர்கள் இருவருமே தோன்றுவதற்கு அதிக இடமுண்டு என்பதுதான் மொத்தத்தில் நான் காட்ட வந்த விஷயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குரு பீடத்துக்கும் பொருந்தும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'அவச்யத் தீமை'க்கு ஆசார்யாள் பணி
Next