ஒரு இன்ஸ்டிட்யூஷனுக்குத் தலைவன் என்ற பெயரை வைத்துக்கொண்டு, ஆசார்யன் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டிருக்கிற நானேதான் சொல்கிறேன்: இன்ஸ்டிட்யூஷன் பலமில்லாமல் இன்டிவிஜுவலாக நிற்கிறபோதுதான் ஒருத்தன் சுத்தனாக இருப்பதற்கும், ஆவதற்கும் அதிக அவச்யமும் ஹேதுவும் உள்ளன. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்கள்தான் நம் மதத்தியிலேயே இன்ஸ்டிட்யூஷன் என்பதை வலுவாக ஏற்படுத்தி, ஸ்தாபன ரீதியில் நம் மதஸ்தர்கள் ஒரு கட்டுக்கோப்பில் வந்து அதனால் மதம் எந்நாளும் ஜீவசக்தி குன்றாமலிருக்க வழிசெய்தாரென்று ஸ்தோத்ரம் செய்யும் நானேதான் இதையும் சொல்கிறேன்.
ஸ்தோத்ரமும் நியாயம்தான். ஏனென்றால் இன்டிவிஜுவலின் ஆச்ரமம், அவற்றில் கையடக்கமான சிஷ்யர்கள் என்று சிலர் மாத்திரம் பரம சுத்தர்களாக இருந்துவிட்டால் பாக்கி ஏராளமான ஜனஸமூஹம் என்ன ஆவது?
ஜனஸங்கியை குறைச்சலாக இருந்து, அவரவரும் தங்கள் சாஸ்த்ர வழிகளைப் பின்பற்றிக்கொண்டு, அந்தச் சில சுத்தர்களை ஐடியலாகக்கொண்டு அடக்கத்துடன் வாழ்ந்த மட்டும் எல்லாம் ஸரியாகவே இருந்தது. ஆனால் காலக்ரமத்தில் ஜனஸங்கியை ஜாஸ்தியாக ஆக, ‘க்வான்டிடி’ அதிகமானால் ‘க்வாலிடி’ குறைய வேண்டியதுதான் என்ற முறைப்படி ‘ஐடியலாக’ இருக்கவேண்டிய வகுப்பாரின் தரம் நீர்த்துப்போக ஆரம்பித்தது.
இதைப் பயன்படுத்திக்கொண்டு புறச் சமயங்களான பௌத்த – ஜைன மதங்கள் ஸமூஹத்தில் ஒரு விரிசலையே ஏற்படுத்தின. தங்களை ஆர்கனைஸேஷனலாக (ஸ்தாபன ரீதியில்) நன்றாகக் கட்டுக்கோப்பு பண்ணிக் கொண்டால்தான் தங்களுடைய எதிர்ப்புக் கார்யம், வளர்ச்சி இரண்டையுமே சக்திகரமாக ஸாதித்துக் கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டு, அப்படியே க்ரியாம்சையிலும் அந்த மதஸ்தர்கள் காட்ட ஆரம்பித்தனர். ராஜாக்கள் ஆதரவையும் பெற்று அந்த மதங்கள் வ்ருத்தி அடைந்தன.
அப்படிப்பட்ட காலத்தில் – இந்தப் போக்கை எதிர்த்துச் சமாளிப்பதற்காக நம் மதத்தில் இருந்தவர்களை நெல்லிக்காய மூட்டையாகச் சிதறிப் போகாமல் புளிப்பானையாக நன்றாகக் கிட்டித்து, ஒட்டிக்கொண்டு இருக்குமாறு செய்தேயாக வேண்டியிருந்தது. இதற்காகத்தான் அவர்களை ஸ்தாபன ரீதியில் ஒரு கட்டுக்கோப்பில் கொண்டுவரும் ஸாதிப்பை நம் ஆசார்யாள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதை இன்றைக்கும் லோகமே ஆச்சர்யப்படுமாறு தேசம் பூராவுக்குமான அடிப்படையில் பண்ணினார். அதனால் எத்தனை ஸ்தோத்ரம் பண்ணினாலும் ந்யாயந்தான்.
ஆனால் இதுவும் “necessary evil” என்ற வகையைச் சேர்ந்ததுதான் – அதாவது ஒரு பெரிய தீமையை விலக்குவதற்கு அத்யாவச்யமாகச் செய்ய வேண்டியிருக்கிற சின்ன தீமை என்றுதான் சொல்லவேண்டும். ஸ்தாபன பலம் இருக்கிறது என்றால் பாடசாலையாகத் தானிருக்கட்டும், மடாலயமாகத் தானிருக்கட்டும், அதிலே ஆசார்ய புருஷனாக இருப்பவன் தன்னுடைய ஆத்மபலம் நன்றாக உறுதி வாய்ந்ததாக இருக்க வேண்டுமென்பதில் அவ்வளவு விழிப்பாக இல்லாமல் ஊக்கம் குன்றிப்போக இடமுண்டு. ஆள்பலம், பணபலம், நிறைய ஸொத்து பலம் எல்லாமே ஆத்மபலத்தை வ்ருத்தி செய்து கொள்வதற்கு disincentive கள்தான் (ஊக்கக்குலைவு செய்பவைதான்). இதனால்தான் ஆதியில் தனித்தனியாக இருந்து கொண்டு ஆசார்யர்கள் குருகுலம் நடத்தி வந்தார்கள்.
பௌத்த – ஜைனர்கள் தோன்றிய பிறகுதான் வித்யாசாலை என்பதாகப் பல ஆசிரியர்கள் சேர்ந்து ஒரே ஸ்தாபனத்தில் இருந்துகொண்டு பலதரப்பட்ட மாணவர்களுக்கும் பாடம் சொல்லித் தருவது என்ற வழக்கம் விசேஷமாக, விஸ்தாரமாக ஏற்பட்டது. நாலந்தா, தக்ஷசிலா யுனிவர்ஸிடிகள் அப்போது ஏற்பட்டவைதான்.