பழங்காலக் கல்விப் பெருநிலையங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தக்ஷசிலா பஞ்சாபில் இருப்பது. புத்தர் காலத்துக்கு மிகவும் முந்தி உபநிஷத நாட்களிலிருந்தே புகழ்பெற்ற க்ஷேத்ரமாக அது இருந்திருக்கிறது. அக்காலத்தில் அந்த ப்ரதேசத்துக்கு காந்தார தேசம் என்று பெயர். காந்தாரி அந்த நாட்டு ராஜகுமாரியாகப் பிறந்தவள். பாண்டவர்களின் கொள்ளுப் பேரனான ஜனமேஜயன் ஸர்ப்பயாகம் பண்ணினதும், அவனுக்கு முன்னால் மஹாபாரதம் முதல் முதலாக “அரங்கேற்ற”மானதும் இங்கேதான். இது அந்த ஊருக்கு உள்ள மஹாபாரத ஸம்பந்தம். ராமாயண ஸம்பந்தம் இதைவிட அதிகமாக அதற்கு உண்டு. பரதனின் பிள்ளையாக தக்ஷன் ஸ்தாபித்த ஊரானதாதலால்தான் அதற்குத் தக்ஷசிலம் என்ற பெயரே ஏற்பட்டது. இப்படி வைதிக மத ஸம்பந்தமுள்ளதாயிருந்த அந்த ஊர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஃபாஹியன் இந்தியாவிலே சுற்றுப் பிரயாணம் செய்து குறிப்புகள் எழுதியபோது பௌத்தர்களின் சைத்ய, விஹாரங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கிறது. அப்புறம் ஹுணர் என்ற அந்நிய நாட்டு ம்லேச்சர்கள் அந்த ஊரைச் சூறையாடிச் சிதைத்து விட்டனர். ஃபாஹியனுக்கு இருநூறு வருஷத்துக்கு அப்புறம் ஹுவான் த்ஸாங் வந்து சுற்றுப்பிரயாணம் செய்தபோது தக்ஷசிலம் ஒரே ‘ரூயின்ஸ்’ (இடிபாடுகள்) மயமாயிருந்ததாக எழுதி வைத்திருக்கிறார்.

பௌத்தர்களின் பெரிய வித்யா ஸ்தானமாக அது இருந்தபோது ஒரே ஸர்வகலாசாலையின் கீழ் பல துறைகளாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ‘ஸெட்-அப்’பில் இல்லை என்றும், அநேகச் சின்னச் சின்ன வித்யாசாலைகள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்ததாக மட்டுமே இருந்தது என்று தெரியவருகிறது.

ஒரு ஸென்ட்ரல் ‘ஸெட்-அப்’பில் இல்லாவிட்டாலும் இங்கே வேதவித்யை உள்படப் பதினாறு சப்ஜெக்ட்களில் பாடம் நடத்தியிருக்கிறார்கள். சாணக்யர் போன்றவர்கள் கூட அங்கே வித்யாப்யாஸம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கால யுனிவர்ஸிடி ஸெட்-அப்பிலேயே இருந்தது நாலந்தா வித்யாசாலைதான். அங்கேதான் ‘ரூயின்’ஸைப் பார்க்கும்போது பெரிய பெரிய லெக்சர் ஹால்கள், ஹாஸ்டல்கள் ஆகியன இருந்தது தெரியவருகிறது. இது பழைய காலத்தில் மகதம் எனப்பட்ட இன்றைய பிஹாரில் இருக்கிறது. புத்த விஹாரங்கள் நிறைய ஏற்பட்டது மகத தேசத்தில்தான். விஹாரம், விஹார் என்பதே பிஹார் என்றாயிற்று. அதைத் தப்பாக பீஹார் என்கிறோம்! பட்னா என்கிற பாடலிபுத்ரத்துக்கு ஸமீபத்தில் புத்தர் வாழ்க்கையோடு ஸம்பந்தப்பட்ட ராஜக்ருஹம் (ராஜ்கிர்) இருக்கிறது, அதற்குப் பக்கத்தில் நாலந்தா இருக்கிறது. பௌத்த தத்வதர்சிகளில் முக்யம் வாய்ந்த ஒருவரான நாகார்ஜுனர் இந்த இடத்தை ஸர்வகலாசாலை, அல்லது விச்வ வித்யாலயம், அல்லது தமிழில் பல்கலைக் கழகம் என்கிற ரீதியில் பெரிய கல்விச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்தார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நரஸிம்ஹ பாலாதித்யரின் காலத்தில் நாலந்தா விச்வ வித்யாலயம் பூர்ண வளர்ச்சியைப் பெற்றதாகத் தெரிகிறது. பௌத்த சாஸ்த்ரங்கள் மட்டுமின்றி, ஓரளவு வேத வித்யையும் மற்றும் விஸ்தாரமாகவே கணிதம், ஜ்யோதிஷம், தர்க்கம், ஸங்கீதம், வைத்யசாஸ்த்ரம் ஆகியனவும் இங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பத்தாயிரம் பேர் ரெஸிடென்ஷியலாகத் தங்கிப் படித்தார்களென்று தெரிகிறது. ஆசியாவிலுள்ள வெளி தேசங்களிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கூட நல்ல அறிவுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்காக இங்கே வந்தார்கள் என்று தெரிந்து கொள்ள நமக்கு மிகவும் பெருமையாயிருக்கிறது. ஆனாலும், தக்ஷசிலத்தில் அக்கால இன்ஜீனீயரிங் முதலான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை போதித்ததுபோல இங்கே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் அட்மிஷன் இருந்தாலும், குறிப்பாக பிக்ஷுமார்களை உண்டாக்குவதே நாலந்தா கலாசாலையின் நோக்கமாயிருந்ததால் காரிய ரீதியில் மிகவும் லௌகீக ஸம்பந்தமுண்டாக்குவதான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை இங்கே பாடதிட்டத்தில் சேர்க்கவில்லை என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் ஜ்யோதிஷம் ஒரு ஸப்ஜெக்டாக இருந்ததால் இங்கே வான மண்டலத்தை தீர்க்க த்ருஷ்டிக் கருவிகளால் ஆராய்வதற்காக ஒரு சிறந்த ‘ஆப்ஸர்வேடரி’ இருந்திருக்கிறது. ஒன்பது மாடிகளுள்ள ஒரு பெரிய லைப்ரரியும் இருந்திருக்கிறது.

கஜனி முஹமது, கோரி முஹமது முதலானவர்கள் படையெடுத்து நம் கலாசாரத்துக்குப் பெரிய ஹானி உண்டாக்கி, அப்புறம் துருக்கர்களின் Slave Dynasty (அடிமைவம்ச) ஆட்சி பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டபோது நாலந்தா யுனிவர்ஸிடி, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நசித்துப் போய்விட்டது. எட்டு நூற்றாண்டுகள் இப்படி ஒரு யுனிவர்ஸிடி நடைபெற்றதென்பதே மிகவும் பெருமைக்குகந்த விஷயம்.

நாலந்தா யுனிவர்ஸிடி பூர்ணரூபம் பெற்ற ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்நூறு வருஷங்கள் அப்புறம், வங்காளத்தில் பால வம்சத்தவர் ஆட்சியில் ஏற்பட்டது விக்ரமசிலம். கங்கைக்கரையில் ஒரு குன்றின்மேல் தர்மபாலன் என்ற அரசின் பௌத்த மடாலயமும் அதைச் சேர்ந்ததாக இந்த வித்யாசாலையும் ஸ்தாபித்தான். திபெத்திலிருந்தே பிக்ஷுக்கள் நிறைய வந்து இங்கே கல்வி கற்றிருக்கிறார்கள். இங்கிருந்து பிக்ஷுக்கள் திபெத்துக்குப் போயும் பௌத்தமதப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். அநேக பௌத்த நூல்கள், குறிப்பாக தாந்த்ரிகமானவை (தந்த்ர சாஸ்த்ரத்தைக் குறித்தவை) பிற்காலத்தில் இந்தியாவில் கிடைக்காமல் திபெத்திலிருந்தே நாம் பெறும்படியாக இருந்தது. இப்போதுங்கூட இப்படிப் பல பழைய புஸ்தகங்கள் திபெத் மடாலயங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை அங்கே போய்ச் சேர்ந்ததற்கு நாலந்தா – விக்ரமசிலா யுனிவர்ஸிடிகளால் ஏற்பட்ட பரிவர்த்தனைதான் காரணம்.

ஹிந்து சாஸ்த்ரங்களிலும், ஹிந்து மதப் பூர்விகர்களின் இதர கலைகள் ஸயன்ஸ்கள் ஆகியவற்றிலும் விஸ்தாரமாக போதனை தரும் இடங்களாகவும் பல ஆதி காலத்திலிருந்து இருந்திருக்கின்றன. இவற்றில் வடக்கே காசியும், தெற்கே காஞ்சியும் முக்யமானவை. மேற்கே காந்தி பிறந்த கத்தியவாரில் வலபீ சிறந்த வித்யா பூமியாக இருந்திருக்கிறது. விக்ரமாதித்யனின் உஜ்ஜயினி மத்ய பாரதத்திலே பெரிய centre of learning -ஆக இருந்திருக்கிறது. வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தியம் சொன்னேன். கிழக்கு, பாக்கி. அங்கே ஹிந்து மதத்தோடு ஸம்மந்தப்பட்ட வித்யாபூமியாக வங்காளத்தில் நவத்வீபம் இருந்தது. ‘நடியா’ என்று சொல்கிற இடம். பூர்வத்தில் ஹிந்து தர்சனங்கள் எல்லாமே அங்கே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் துருக்கர் செய்த உத்பாதத்தில் நாலந்தாவையும் விக்ரம சிலாவையும் போல நவத்வீபமும் நசித்ததென்றாலும், மறுபடியும் அது பதினைந்தாம் நூற்றாண்டில் தலைதூக்கிற்று. ஆனால் பூர்வத்தில் ஸகல வித்யைகளுக்கும் அது இருப்பிடமாயிருந்திருக்க, மறுபடி அது புத்துயிர் பெற்றபோது தர்க்க சாஸ்த்ரத்துக்கு மாத்திரமே ப்ரஸித்தி அடைந்தது.

ஆனால் வைதிகத்தோடு சேர்த்து வித்யை சொல்லிக் கொடுத்த இந்த எல்லா இடங்களிலுமே யுனிவர்ஸிடி அமைப்பில் கல்வி அளிக்காமல் அநேக தனித்தனி குருகுலங்கள் ஒரு இடத்தில் சேர்ந்து கற்றுக்கொடுப்பதாகத்தான் இருந்தது.

இப்படிச் சொல்வதால், இந்த அமைப்பு ஹிந்து மதத்தோடு சேர்ந்த கல்வியில் அடியோடு இருந்ததில்லை என்று அர்த்தமாகாது. பௌத்த – ஜைன மதங்கள் ஏற்படுவதற்கு முன்னுங்கூட அங்கங்கே சில பெரிய குருகுலங்கள் இருந்திருக்கத்தான் செய்தன. வேதமத ஆதாரமான பதிநாலு வித்யைகளில் புதுப்புது வ்யாக்யான நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் சேர்ந்துகொண்டே போயிருந்திருக்கும்; காவ்ய நாடகாதிகளும் ஏராளமாக விருத்தியாகிக் கொண்டே இருந்திருக்கும்; புதுப்புது சாஸ்த்ரங்கள், ஸயன்ஸ்கள், அலெக்ஸாண்டர் படையெடுப்பிலிருந்து அந்நிய தேசஸ்தர் தொடர்பால் புதிசு புதிசாகத் தெரிய வந்த விஷயங்கள் எல்லாமும் ஜெனரேஷனுக்கு ஜெனரேஷன் அதிகமாகிக் கொண்டேதான் போயிருக்கும். எனவே ஒரே குரு, அல்லது ஓரிரண்டு அஸிஸ்டென்ட்கள் மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் குரு போதாமல், இந்நாளில் உள்ள யுனிவர்ஸிடி மாதிரியான பெரிய அமைப்பில் அநேக குருக்கள் அநேக சிஷ்யர்களுக்கு ஒரே இடத்தில் சேர்ந்து சொல்லிக் கொடுப்பதென்பது பௌத்த, ஜைன மதஸ்தர்களிடம் மட்டுமின்றி வைதிக வழியிலிருந்தவர்களிடமும் கொஞ்சம் இருந்ததுதான். ஸப்ஜெக்ட்கள் விரிவடைந்தபோது எல்லாவற்றையும் ஒரே மாணவன் படிப்பதென்பதும் ஸாத்யமில்லாததால் ‘பேஸிக்’காக (அடிப்படையாகச்) சிலது மட்டும் எல்லா மாணவர்களுக்கும் எனவும், பாக்கியில் ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொன்று இஷ்டபாடம் (ஆப்ஷனல்) என்றும் பூர்வத்திலேயே கொஞ்சம் ஆகியிருக்க வேண்டும். இப்படித்தான் சிதம்பரத்தில் பதஞ்ஜலி மஹர்ஷியிடம் பாடம் கேட்க ஆயிரம் பேர் வந்து, பல தினுஸுப் பாடங்களைக் கேட்டபோது, அவர் ஆதிசேஷ அவதாரமாதலால், ஒரு திரையைப் போட்டுக் கொண்டு அதன் பின்னாடி சேஷஸ்வரூபத்தில் ஆயிரம் வாய்களை எடுத்துக்கொண்டு ஒரே ஸமயத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வாயால் பாடம் சொல்லிக் கொடுத்தாரென்று கதை இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'அவச்யத் தீமை'க்கு ஆசார்யாள் பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  புது மதங்களும் பெரிய கல்வி நிலையங்களும்
Next