திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவர சுவாமி திருக்கோயில்)
கும்பகோணத்தின் (குடந்தையின்) கீழ்த்திசையில் அமைந்துள்ள கோயில். அமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம். நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கும்பகோணத்திற்குப் பேருந்து வசதிகள் நிரம்பவுள்ளன. திருக்கோயில், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. நாகராசன் சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம். இங்குள்ள காவிரித்துறைக்கு, 'பகவத் படித்துறை' என்று பெயர் சொல்லப்படுகிறது. 'கோயிற் பெருத்தது கும்பகோணம்' என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன.
இறைவன் - நாகேஸ்வரர், நாகநாதர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரிய நாயகி.
பெரிய கோயில். அப்பர் பாடல் பெற்ற தலம்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பால் நந்தவனம். சிங்கமுக தீர்த்தக்கணிறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. வலப்பால் பிருகந்நாயகி சந்நிதி. தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே சென்றால் இடப்பால் பதினாறுகால் மண்டபமும் வலப்பால் நடராசசபையும் உள்ளன. இங்குள்ள நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது, இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற, 2 குதிரைகளும் நான்கு யானகைளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அழகாகவுள்ளது. பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்கு சிவகாமி தாளம் போடும் பாவனையும் மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன, சுவரில் ஒருபுறம் சரபமூர்த்தி, மறபுறம் சிவலிங்கம், நந்தி, விநாயகர், அம்பாள், முருகன், நால்வர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. கொடிமரம் வணங்கியுட் சென்று வாகன மண்டபம் கடந்து வலம் வரும்போது 'பாடிவெட்டி மாரியம்மன் சந்நிதி' உள்ளது. பிரளயகாலருத்ரர் சந்நிதி, வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. வில்வ மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள திருமேனியைப் பகவத்ரிஷி என்று பெயரிட்டு அழைக்கின்றனர், இங்குள்ள விஷ்ணு துர்க்கை சந்நிதி விசேஷமானது. வெள்ளிக்கவச தரிசனம் மன நிறைவு தருகிறது. வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.
வலம் முடித்து முன் மண்டபங்கடந்து 'சிவசிவ ஒலி மண்டபமும்' நவக்கிரக சந்நிதியும் கண்டு, தொழுதவாறே சென்றால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் - அழகான திருமேனி - உயரமான ஆவுடையார் -மிகவும் குட்டையான பாணம். பிறைசூடி, நாகாபரணம் கொண்டு தரும் தரிசனம் மிகவும் பொலிவாகவுள்ளது. கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரி, - ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலைமீதூன்றி நிற்கும்நிலை. பிரம்மா, முதலிய சந்நிதிகள் உள.
அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பள்ளியைற உள்ளது. அம்பாளின் பக்கத்தில் உள்ளது ஆடிப்பூர அம்மன் சந்நிதி. இத் திருமேனி அபயத்துடன் கூடிய நின்ற திருக்கோலம். நாடொறும் ஐந்து கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத திட்டத்தின் கீழ் திருப்பணிகள் 29 -11 - 85ல் தொடங்கப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன.
'பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான், புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சிங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிக்ள அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல GF திரட்டிய அருஞ்செயலை இன்றும் கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம் நெகிழ்கின்றது.
"சொன்மலிந்த மறை நான்காறங்கமாகிச்
சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதிபோலும்
கன்மைந்த கயிலைமலை வாணர் போலும்
கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர்போலும்
மன்மலிந்த மணிவரைத் திண்தோளர்போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர்போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர்போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே." (அப்பர்)
"கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நா அடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக்கிட" (ஐயடிகள் காடவர்கோன்)
-மாணுற்றோர்
காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே. (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. நாகேசுவரசுவாமி திருக்கோயில்
கும்பகோணம் - அஞ்சல் - 612 001
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.