திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
குடந்தைக்காரோணம்
சோமமேசர் திருக்கோயில்
கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ள கோயில். மக்ள் 'சோமேசர் கோயில்' என்று வழங்குகின்றனர். மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும். இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று.
(மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள 'காசி விசுவேசம்' என்னும் கோயிலைக் குடந்தைக் காரோணம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில் இராமன், இராவணனைக்கொல்ல ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஸது பெயர் பெற்றாலுங்கூட, திருஞானசம்பந்தர் பாடலில்
"தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே"
என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.)
வியாழன், சந்திரன் விழிபட்டதலம். அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. (சிக்கம் - உறி) எனவே சிக்கேசம் என்றும் பெயர்.
இறைவன் - சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.
இறைவி - சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
தீர்த்தம் - சோம தீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
பழைய ராஜகோபுரம் கிழக்ஞீநோக்கியது. ஐந்து நிலை. உட்சென்றால் வலப்பால் மங்களநாயகி சந்நிதியுள்ளது. பெரிய மூர்த்தம் - நின்றநிலை. பக்கத்தில் மாலீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியுள்ளது. இச்சந்நிதிக்கு முன்னால் கல்யாணசுந்தர விநாயகர் காட்சி தருகிறார்.
உள்கோபுரம் மூன்றுநிலை, வாயில் கடந்து உள்ளே சென்றால் வலப்பால் தேனார் மொழியாள் (அம்பாள்) சந்நிதி. குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப்பதிகத்தைக் கல்லிற் பொறித்துச் சுவரில் பதித்துள்ளார்.கோடி பஞ்சாக்கரக் கோயில் உள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வயானை ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
வாயிலில் திருமுறைக் கோயில் உள்ளது. அடுத்து விநாயகர், சேக்கிழார், நால்வர் திருமேனிகள், நடராசசபை, மூலவர் சோமேசர் - சிவலிங்க மூர்த்தம் குட்டையான சிறிய பாணம்.
"மூப்பூர்நலிய நெதியார் விதியாய் முன்னே யனல்வாளி
கோப்பார் பார்த்தனிலை கண்டருளுங் குழகர்குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலனடையா வண்ணம் காரோணத்தாரே" (சம்பந்தர்)
-வாழ்க்கோட்டத்
தேரோண மட்டுந் திகழ் குடந்தை மட்டுமன்றிக்
காரோண மட்டங் கமழ் மலரே. (அருட்பா)
அஞ்சல் முகவரி-
அருள்மிகு. சோமசர் திருக்கோயில்
கும்பகோணம் - அஞ்சல் - 612 001
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.