திருநாகேச்சுரம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருநாகேச்சுரம்

திருநாகேஸ்வரம்

கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ளது. நகரப்பேருந்து அடிக்கடி செல்கிறது. சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.

ராகு கிரகத்திற்குரிய தலம. ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் முதலிய நாகராஜாக்களும் கௌதமர் நந்தி நளன் பராசரர், பகீரதன் முதலியோரும் வழிபட்டது. சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள். பெரிய கோயில் - நான்கு கோபுர வாயில்கள்.

(காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்) .

இறைவன் - நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.

இறைவி - கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.

தலமரம் - சண்பகம்.

தீர்த்தம் - சூரியதீர்த்தம் (மூன்றாம் பிராகாரத்தில் உள்ளது)

தலவிநாயகர் - சண்பக விநாயகர்.

மூவர் பாடல் பெற்றது.

பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம். சூரியதீர்த்தத்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி.

இரண்டாம் பிராகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. நடராசசபை எதிரே நால்வர் சந்நிதியும் உள்ளன. அம்பாள் சந்நிதி இரண்டு உள்ளது.

1) சுவாமிக்கு அருகிலுள்ளது - 'பிறையணிநுதலாள்' சந்நிதி.

2) கிரிகுஜாம்பிகை சந்நிதி தனிக்கோயிலாகச் சிறப்புடன் விளஙகுகிறது. சுதைஉருவம், தை மாதத்தில மட்டும் புனுகு சட்டம் சார்த்தப் படுகிறது.

கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. (1) சேக்கிழார் உள்மண்டபத்தையும், (2) அச்சுதப்ப நாயக்கரிடம் மந்திரியாக இருந்த கோவிந்த தீக்ஷிதர் வெளிமண்டபத்தையும் கட்டியதாகக் கூறுவர். கார்த்திகையில் பெருவிழா. வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூசை நடைபெறுகிறது. இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது. அண்மையில் உள்ளது ஒப்பிலியப்பன் கோயில். திருநாகேச்சுரம் சுவாமிநாத முதலியார் நாகேச்சுரப் பதிற்றுப்பத்தந்தாதி பாடியுள்ளார். நாகநாத வெண்பா எனும் நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது. இப்போது அது கிடைக்கவில்லை.

"பொன்னேர் தரு மேனியனே புரியும்

மின்னேர் சடையாய் விரை காவிரியின்

நன்னீர் வயல் நாகேச்சர நகரின்

மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே". (சம்பந்தர்)

"நல்லர் நல்லதோர் நாகங் கொண்டாட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கு மருந்துகள்

பல்லிலோடு கையேந்திப் பலிதிரி

செல்வர் போற்றிரு நாகேச்சரவரே" (அப்பர்)

"பாலனது ஆருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த

காலனை வீடுவித்துக் கருத்தாக்கியது என்னை கொலாம்

கோலமலர்க் குவளை கழுநீர் வயல்சூழ் கிடங்கில்

சேலொடு வாளைகள் பாய் திருநாகேச் சரத்தரனே". (சுந்தரர்)

-சீரோங்கும்

யோகீச்சுரர் நின்று வந்து வணங்குதிரு

நாகீச்சுர மோங்கு நங்கனிவே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நாகநாதசுவாமி திருக்கோயில்

திருநாகேஸ்வரம் - அஞ்சல்

கும்பகோணம் RMS - கும்பகோணம் வட்டம்

தஞ்சை மாவட்டம் - 612 204.












 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is குடந்தைக்காரோணம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவிடைமருதூர்
Next