திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருக்கடவூர் ( திருக்கடையூர்)
மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதியுண்டு.
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத் தருளிய தலம்.
"கறுவி வீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலஞ் சாத்திச்
சிறுவனுக்கு ஆயுள் ஈந்த சேவகப் பெருமான் மேய
அறை புனற் பழன மூதூர்" (திருவிளையாடற் புராணம் )
திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன வேறு பெயர்கள். அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை வழிபட்ட தலம். பிரமனக்கு உபதேசம் செய்த இடம். குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் வாழ்ந்து, தொண்டாற்றி முத்தியடைந்த தலம். உள்ளமுருகப் பாராயணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி பாடப்பட்ட அற்புதப் பதி. அன்னை அபிராமியின் அருள் தலம். யமபயம் போக்கவல்ல பதி. மிகப்பெரிய கோயில். தருமையாதீனத் திருக்கோயில்.
இறைவன் - அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
இறைவி - அபிராமி.
தலமரம் - வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், சிவகங்கை.
மூவர் பாடல் பெற்றது.
இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில், எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது. பிள்ளையார் - கள்ளவாரணப் பிள்ளையார்.
மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108 -ஆவது தலமாகும். (107-ஆவது தலம் திருக்கடவூர் மயானம்) மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு. இச்செடி (பிஞ்சிலம்) கோயிலுள் உள்ளது. இதனால் இத்தலத்திற்குப் 'பிஞ்சிலாரண்யம்' என்றும் பெயர். தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர். சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. (இது பற்றிய விளக்கத்தைத் திருக்கடவூர் மயானத் தலக்குறிப்பில் காண்க)
(மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம் மணல்மேடு ஆகும்) .
பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம். ம்ருத்யுஞ்ச ஹோமம்.
உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி (மணிவிழா) , சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவேயாகும். இச்சாந்திகளை வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம் மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.
இத்திருக்கோயிலில் நவக்கிரக சந்நிதி இல்லை. அளப்பரிய சிறப்புக்களுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோயில் எழுநிலைகளுடைய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. ராஜகோபுரத்தில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் தரிசனம். பலிபீடம். இதைச் சுற்றி நான்கு சிறிய நந்திகள் உள்ளன. கோபுர வாயில் நுழைந்து பிராகாரத்தில் வலம் வரும்போது மார்க்கண்டேஸ்வரர், நாகநாதேஸ்வரர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பாற்கடல் கடைந்தது, மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்தது முதலான வரலாறுகள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.
அடுத்து 'பஞ்சலிங்கங்கள்' சந்தானாசாரியார்கள், குங்கிலியக்கலய நாயனார், சந்திரபூஷணராஜா, அமைச்சர், குங்கிலியம் கொண்டுவந்த வணிகர், வீரபத்திரர். பிராமி முதலான அம்பிகைகளின் திருமேனிகள் அசுவினி தேவர் முதலானோரின் சந்நிதிகள் வரிசையாகவுள்ளன. இங்குத் தலமரமாகிய 'பிஞ்சிலம்' செடி உள்ளது. பக்கத்தில் தர்மராஜா (எமன், உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது. தொடர்ந்து அறுபத்து மூவர் திருமேனிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், உற்சவமூர்த்தி, பள்ளியறை இவற்றைக் கண்டு தொழுதவாறே, வாயிற்படிகளேறிச் சென்றால் மண்டபத்தை அடையலாம். இங்கு உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சந்திரசேகரரைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம்.
இடப்பால் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் காட்சி தருகிறார். காலசம்ஹாரமூர்த்தி - அற்புதமான திருமேனி. மேலே வெள்ளிப் பிரபை, பக்கத்தில் உள்ள வெள்ளிப்பேழையில் 'உடையவர்' மரகதலிங்கம் உள்ளது. நாடொறும் காலசந்தி, சாயரட்சை வழிபாடு இதற்கு நடைபெறுகின்றது.
இம்மூர்த்தியின் திருவடிக்கீழ், மார்க்கண்டேயர் கைகூப்பிய நிலையில் இருப்பது. எமன் உதைப்பெற்றுக் கீழே வீழ்ந்து கிடப்பது ஆகிய இக்காட்சி - பீடத்தினடியில் வெள்ளித் தகட்டால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தீபாராதனைக் காலத்தில் இதைத் தரிசிக்கலாம்.
பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற
(எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷ§, பெருவிழாவில் 5,6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷிணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§ ஆருத்ரா, உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§ ஆருத்ரா உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றது.
மூலவர் மேற்கு நோக்கிய சந்நிதி. அற்புதமான அழகுத் திருமேனி. மனநிறைவான தரிசனம். சித்திரையில் பெருவிழா பதினெட்டு நாள்கள் நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கொண்டு தரிசிக்கத் தக்கது. மாதாந்திர விசேஷகால பூஜைகளும் வழக்கம் போல நடைபெறுகின்றன. சோம வாரங்களில் சுவாமிக்கும், அமாவாச பௌர்ணமி நாள்களில் அம்பாளுக்கும், சனிக்கிழமைகளில் காலசம்ஹார மூர்த்திகளும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. 'அபிராமி' - பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. அழகுருவாய - அம்பிகை. ரம்யம் - அழகு. ரம்யத்தை உடையவள் - ராமி. (அழகுடையவள்) அபி -மேலான. எனவே 'அபிராமி' என்ற சொல்லுக்கு 'மேலான அழகுடையவள்' என்பது பொருள்.
தன்னையே துதித்து, தன் பெயரையே பெயராக்கிக் கொண்ட பக்தன் ஒருவனக்கு அருள்புரிந்த - அபிராம்பட்டருக் கரள் செய்த அதன் வழி உலகுக்கு அபிராமி அந்தாதி கிடைக்கச் செய்த அபிராமி சந்நிதியில் நின்று அப்பெருமாட்டியைத் தரிசிப்பதே ஒருவகை ரம்யந்தான்.
வெளவால் நெத்தி மண்டபம். முன்னால், சுதையில் துவார பாலகியர் உருவங்கள், அபிராமி அந்தாதிப் பாடல்கள் கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. வாயில் கடந்து உட்சென்று அம்பிகைமுன் நிற்கும்போது நம்மையே மறக்கின்றோம். நின்ற திருக்கோலம். வலப்பால் உற்சவத் திருமேனி. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், வெள்ளிக் கவசத்தில் ஒளிரும் ஒண்கொடி கண்ணுக்குப் பெரு விருந்தாகிறாள்.
'அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியை' உளமாரத் துதித்து வேண்டுகிறோம். அம்பாள் சந்நிதியை வலம்வர வசதியுள்ளது.
'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி' யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது. பக்கத்தில் உள்ள பிற தலங்கள் திருஆக்கூரும் திருத்தலைச்சங்காடும் ஆகும்.
"பண்பொலி நான்மறை பாடியாடிப் பலவூர்கள் போய்
உண்பலி கொண்டுழல் வானும் வானின்ஒளி மல்கிய
கண்பொலி நெற்றி வெண்திங்களானும் கடவூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டானத்தரன் அல்லனே". (சம்பந்தர்)
"பெரும் புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும் பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரடடனாரே". (அப்பர்)
"பொடியார் மேனியனே புரிநூலொருபால் பொருந்த
வடியர் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்துஎம்
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர்துணை நீயலதே". (சுந்தரர்)
"என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின்குறையே யன்றி யார் குறைகாண் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே"
(அபிராமி அந்தாதி)
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
-"மாறகற்றி
நண்கடையூர் பற்பலவும் நன்றி மறவா தேத்துந்
தென்கடையுர் ஆனந்தத் தேறலே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்.
திருக்கடையூர் - அஞ்சல் - 609 311
மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.