திருக்கடவூர் மயானம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்கடவூர் மயானம் (
திருமயானம்)

திருமெய்ஞ்ஞானம்

மக்கள் இத்தலத்தை 'திருமெய்ஞ்ஞானம்' 'திருமயானம்' என்று வழங்குகின்றனர். திருக்கடவூருக்கு நேர்கிழக்கில் 2 A.e. தொலைவில் உள்ளது. கோயில்வரை பேருந்து, கார் செல்லும். மயிலாடுதுறை - வேப்பஞ்சேரி நகரப்பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. கோயிலைச் சுற்றிச் சில வீடுகளே உள்ளன. சிவபெருமான் பிரமனை நீறாக்கி, மீண்டும் உயிர்ப்பித்து, அவருக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலம். பிரமன் வழிபட்ட தலம். பழைமையான கோவில். போதிய பராமரிப்பு இல்லை. கோயிலுள் உள்ள மூர்த்திகளும் மிகப் பழைமையானவை. ஒரு சில பழுதடைந்தும் உள்ளன.

இறைவன் - பிரமபுரீசுவரர்.

இறைவி - மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி. பழைய நூலில் 'அமலக்குய மின்னம்மை' என்று குறிக்கப்பட்டுள்ளது.

தீர்த்தம் - காசி தீர்த்தம்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

இத் தீர்த்தத்திலிருந்துதான் நாடொறும் திருக்கடவூர்ப் பெருமானுக்குத் திருமஞ்சனத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. ராஜகோபுரமில்ல. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டும் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசசபையும். மறுகோடியில் பைரவர் சந்நிதியும் உள்ளன. வில்வமரம் உள்ளது. விநாயகரை வணங்கி வாயிலைக் கடந்து உள்மண்டபத்தினை யடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானையுடன் சிங்காரவேலம், வில்லேந்திய கோலத்தில் தரிசனம் தருகின்றார்.

சிங்காரவேலர் சந்நிதியில் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை அழிந்த நிலையிலுள்ளன. நேரே பார்த்தால் மூலவர் தரிசனம். பழைமையான மூர்த்தி. சதுர ஆவுடையார்

மேற்கு நோக்கியது. தரிசிக்கும்போது தக்க பராமரிப்பு இன்மையை உணர்ந்து உள்ளம் துன்புறுகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீசுவரர், கல்யாணசுந்தரர் முதலிய மூர்ததங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

"கடவூர் தீர்த்தக்கிணறு" எனப்படும் "காசி தீர்த்தம்" கோயிலுக்குப் பக்கத்தில் - தென்புறத்தில், சற்றுத் தொலைவில் வயல்களின் மத்தியில் நாற்புறச் சுவர்கள் சூழ நடுவில் கிணறு வடிவில் உள்ளது. இங்கிருந்து கடவூருக்குத் தண்ணீர் வண்டியில் கொண்டு போகப்படுகிறது. மார்க்கண்டேயருக்காக, பங்குனிமாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றது. இந்த ஐதீகப்படி, பங்குனி அசுவினி நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

சுவாமியின் கருவறையுள் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சஷ்டிவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தலப்பதிகம் சலவைக் கல்லிற் பெறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் கோயில் எதிரில் உள்ளது. கிழக்கு நோக்கியது. மூன்று நிலைகளையுடைய முன்கோபுரம் உள்ளது. துவாரபாலகியர் உருவங்கள் சிதைந்துள்ளன. அம்பாள் நின்ற கோலம். அபயவரதத்துடன், கூடிய நான்கு திருக்கரங்கள்.

"பாசமான களைவார் பரிவார்க் கமுத மனையார்

ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்

காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே." (சம்பந்தர்)

"குழைகொள் காதினர் கோவண ஆடையர்

உழையர்தாங் கடவூரின் மயானத்தார்

பழையதம் அடியார் செய்த பாவமும்

பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே". (அப்பர்)

"நறைசேர் மலர் ஐங்கணையானை நயனத்தீயாற் பொடிசெய்த

இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லையென்னாது அருள்செய்வார்

பறையார் முழுவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில்கடவூர்ப்

பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமானடிகளே."

(சுந்தரர்)

"உய்யும் மருந்து இதனை உண்மின் என உற்றார்

கையைப் பிடித்தெதிரே காட்டியக்கால் - பைய

எழுந்து இருமியான் வேண்டேன் என்னாமுன் நெங்சே !

செழுந்திரு மயானமே சேர்."

(ஐயடிகள் காடவர்கோன்)

-வன்மையிலாச்

சொற் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும்

நற்கடவூர் வீரட்ட நாயகனே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பிரமபுரீசுவரர் திருக்கோயில்

திருக்கடையூர் மயானம்

திருக்கடையூர் அஞ்சல் - 609 311

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.



























 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கடவூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வேட்டக்குடி
Next