திருமீயச்சூர் இளங்கோயில்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருமீயச்சூர் இளங்கோயில்

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாக பிரியும் காரைக்கால் பாதையிற் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிதுதூரம் சென்றதும், கடைவீதியில் - கடைவீதிக்கு இணையாகப் பின்புறமாகப் பிரிந்து செல்லும் 'கம்பூர்' பாதையில் சென்று - ரயில்வே கேட்டைத் தாண்டி, சுமார் 2 A.e. சென்றால் மீயச்சூரை அடையலாம். சரளைகல்பாதை, கோயில்வரை வாகனங்கள் செல்லும். இக்கோயில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குரியது. மீயச்சூர் கோயிலுக்குள்ளேயே இளங்கோயில் உள்ளது. மீயச்சூர் கோயில் - சூரியன் வழிபட்டது. இக்கோயில் விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

இறைவன் - மேகநாதர், முயற்சிநாதர்

இறைவி - சௌந்தரநாயகி, லலிதாம்பாள்.

தலமரம் - வில்வம்.

தீர்த்தம் - சூரியதீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

மீயச்சூர் இளங்கோயில்

இறைவன் - சகலபுவனேஸ்வரர்.

இறைவி - மேகலாம்பிகை.

காளி வழிபட்ட சிறப்புடையது - சிறிய கோயில். சுவாமி சந்நிதிக்கு வடக்கில் உள்ளது.

அப்பர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய பெரிய கோயில். சந்நிதி வீதியில் முதலில் விநாயகர் கோயில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். பழைமையானது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்ளே சென்றதும் நந்தி பலிபீடம். இடப்பால் விஸ்வநாதர் சந்நிதி. வலப்பால் அம்பாள் சந்நிதி. சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது, வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் தரிசனம். உட் பிராகாரத்தில் நாகலிங்கப் பிரதிஷ்டைகள், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் வழிபட்ட லிங்கங்கள், விநாயகர், இந்திரன் எமன் அக்கினி பெயரிலான லிங்கங்கள் சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

கோஷ்டத்தில் உள்ள க்ஷேத்ர புவனேஸ்வரர் மூர்த்தம் சிறப்பாகவுள்ளது. இளங்கோயிலும், கோயிலும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இளங்கோயிலை வலமாக வருகின்றோம். சந்நிதியில் நேரே மூலவரையும் (சகல புவனேஸ்வரர்) வலப்பக்கத்தில் மேகலாம்பிகையையும் தரிசிக்கலாம். பிராகார வலமுடித்துப் படிகளேறிச் சென்றால் வலப்பால் உற்சவமூர்த்தங்களின் பாதுகாப்பறையும் நேரே மூலவர் தரிசனமும் காணக் கிடைக்கிறது. அம்பாள் - லலிதாம்பிகை அமர்ந்த திருக்கோலம். இளக்கோயிலில கோஷ்டத்தில் உள்ள சதுர்முக சண்டேசுவரர் திருமேனி தரிசிக்கத்தக்கது. ஆடிப்பெருக்கு, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை முதலிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மீயச்சூர் கோயில் செம்பியன்மாதேவி காலத் திருப்பணி பெற்றது.

(கோயில்களுல் - நன்னிலக் கோயில் - பெருங்கோயில்

கடம்பூர் கோயில் - கரக்கோயில்

விளநகர் கோயில் - ஞாழற்கோயில்

கருப்பறியலூர் கோயில் - கொகுடிக்கோயில்

மீயச்சூர் கோயில் - இளங்கோயில்

திருக்கச்சூர் கோயில் - ஆலக்கோயில்

கோச்செங்கட் சோழன் கட்டியவை - மாடக்கோயில் எனப் பெயர் பெறும்.)


"பொன்னேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்

மின்னேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்

தன்னேர் பிறரில்லானைத் தலையால் வணங்குவார்

அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே." (சம்பந்தர்)

"வேதத்தான் என்பர் வேள்வியுள்ளான் என்பர்

பூதத்தான் என்பர் புண்ணயின் தன்னையே

கீதத்தான் கிளறும் திருமியச்சூர்

ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே". (அப்பர்)

ஓகாளக்

"காயச்சூர் விட்டுக்கதிசேர வேட்டவர்சூழ்

மீயச்சூர் தண்ணென்னுமூ வெண்ணெருப்பே" - மாயக்

களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா

இளங்கோயில் ஞான இனிப்பே". (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மேகநாதர் திருக்கோயில்

திருமீயச்சூர் - அஞ்சல் - 609 405.

(வழி) பேரளம் - திருவாரூர் மாவட்டம்

நன்னிலம் மாவட்டம்.

































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is அம்பர்மாகாளம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திலதைப்பதி
Next