திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திலதைப்பதி
செதலபதி - சிதலைப்பதி
திலதர்ப்பணபுரி என்னும் பெயரே திலதைப்பதி என்றாயிற்று. இப்பெயரும் இன்று மக்கள் வழக்கில் உருச்சிதைந்து "செதலபதி" என்று வழங்குகிறது. "செதலபதி" என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது.
ஊர் - திலதர்ப்பணபுரி - கோயில் - மதிமுத்தம் - கோயில் உள்ள இடம் "கோயிற்பத்து ஆகும்.
அரிசிலாற்றின் கரையில் உள்ளதலம். பிதிர்களுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம், தர்பபணம் முதலிய கடமைகளைச் செய்வதற்குரிய தலம்.
1) மயிலாடுதுறை - திருவாரூர்ச் சாலையில் பூந்தோட்டம் வந்து,
அரிசிலாற்றுப் பாலங் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம் நாச்சியார் கோயில் சாலையில் சென்று கூத்தனூரை அடைந்து, ஊர்த்தொடக்கத்தில் உள்ள மரத்தினடியில் பேருந்தை நிறுத்திவிட்டு வலப்புறமாகச் செல்லும் அரிசிலாற்றின் கரைமீது நடந்து செல்லவேண்டும். 2 A.e. நடந்தபின்பு இடப்புறமாக வரும் இறக்கத்தில் இறங்கி, மண் பாதையில் சிறிதுதூரம் நடந்து "செதலபதி" ஊரையடைந்து, ஊர்க்கோடியில் வலப்புறமாகச் செல்லும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். (இத்தலத்திற்குப் பேருந்து செல்லாது. ஆற்றின் கரைமீது நடந்தே செல்லவேண்டும். கோயில் சாவி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள செட்டியார் வீட்டில் இருக்கிறது. யாத்திரையாகச் செல்வோர் முன்பே கடிதம் எழுதிவிட்டு, அக்காலத்தில் சென்றால்தான் தரிசிக்க முடியும். இல்லையெனில் நாம் செல்லும் நேரத்தில் செட்டியார் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தால் சிரமப்பட்டுச் சென்றும் தரிசிக்க முடியாமற்போய்விடும். கோயிற்குருக்கள் பக்கத்து ஊரிலிருந்து வந்து பூஜை செய்துவிட்டுப் போகிறார்.)
இராமலட்சுமணர்கள் தம் தந்தையாகிய தசரதனக்கும் சடாயுவுக்கும் திலர்ப்பணம் (திலம் - எள்) செய்த தலமெனத் தலபுராணம் சொல்கிறது. இச்சிற்பம் கோயிலில் பிராகாரத்தில் உள்ளது. சூரியன் சந்திரன் யானை சிங்கம் இராமர் இலக்குவன் ஆகியோர் வழிபட்ட தலம்.
இறைவன் - முத்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்.
இறைவி - சுவர்ணவல்லி, பொற்கொடிநாயகி.
தலமரம் - மந்தாரை.
தீர்த்தம் - சந்திர தீர்த்தம் (வெளியே பக்கத்தில் உள்ளது) அரிசிலாறு.
சம்பந்தர் பாடல் பெற்றது.
சிறிய கோயில் - கிழக்கு நோக்கிய சந்நிதி. இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயில். உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி, உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் அம்பாள் சந்நிதி. பிராகாரத்தில் விநாயகர், இராம இலக்குவர்கள் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர், தேவியாருடன் பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். கோயிலுக்கு எதிரில் உள்ள சிறிய சந்நிதியைத் தவறாமல் தரிசிக்க வேண்டும். இது ஆதி விநாயகர் சந்நிதி எனப் படுகிறது. இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால், மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, அதிசயமான அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.
கோயிலுக்கு வெளியே பக்கத்தில் (பின்புறத்தில்) அழகீசர் கோயில் - அழக நாதர் சந்நிதி ஒன்றுள்ளது. சிவலிங்கத் திருமேனி. நகரத்தார் திருப்பணியும், பராமரிப்பும் பெற்றுள்ள இக்கோயிலில் நாடொறும் ஒருவேளை பூஜையே.
கூத்தனூரில் உள்ள துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி கோயில்கள் தரிசிக்கதக்கன. சரஸ்வதிக்குத் தனிக் கோயில் இங்கிருப்பது விசேஷமானது. இக்கோயிலை (சரஸ்வதி கோயிலை) க் கட்டியவர் ஒட்டக் கூத்தரின் பேரர் ஒவாக்கூத்தர் என்பது கல்வெட்டுச் செய்தி. யாழ்ப்பாணம், திரு.சி.நாகலிங்கப் பிள்ளை என்பவர் திலதைப்பதிப்புரணாம் பாடியுள்ளார். இந்நூல் 1941ல் தேவ கோட்டை மெ.றாம. லெட்சுமணன் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது.
"விண்ணர் வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலா வின்ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்தருள் பேண நின்றம்மதி முத்தமே." (சம்பந்தர்)
தலபுராணம் - ஆதி விநாயகர் துதி
"அங்குமாய் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்
துக்மா முகமுந்தூய துதிக்கரம் தானுமின்றிப்
பங்கயப் பழன வேலித் திலதையாம் பதியின் மேவும்
புங்வன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி".
முத்தீசுவரர் துதி
"மலரயன் முகுந்தன் பூமின் மாதுமை வணங்கி யேத்தத்
திலதருப் பணப் பேர் கொண்ட திருத்தலம அதனின் மன்னி
இலகு முத்திராக்க மேனியீசனை யெம்மான் தன்னைக்
குலவு முத்தீச னென்னுங் குழகனை யேத்தி வாழ்வாம்."
சுவர்ண வல்லி துதி
"சுரும்பயர் குழல்கள் போற்றி சுந்தர வதனம் போற்றி
அரும்பு புன்முறவல் போற்றி ஆரணற் கருள் செயம்மை
கரும்புறு பழனவேலித் திலதைக் காஞ்சன மாவல்லி
சிரம்பெறு பதும நேருஞ் சேவடி போற்றி போற்றி."
-"வளங்கோவை
நாடுந் திலத நயப்புலவர் நாடோறும்
பாடுந் திலதைப் பதி நிதியே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. முத்திஸ்வரர் திருக்கோயில்
திலதைப்பதி பூந்தோட்டம் அஞ்சல் - 609 503
நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.