திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருநறையூர்சித்தீச்சரம்
திருநறையூர்
ஊர்ப் பெயர் - திருநறையூர் - கோயில் சித்தீச்சரம்.
கும்பகோணம் - நாச்சியார் கோயில் சாலையில் வந்து நாச்சியார் கோயிலின் முற்பகுதியாகிய திருநறையூரில் இறங்கிக் கோயிலையடையலாம். சாலையோரத்தில் இறங்கனால் வீதியின் கோடியிலுள்ள கோயிலைக் காணலாம். (நாச்சியார் கோயில், திருநறையூர் இரண்டும் ஒன்றொடொன்று இணைந்ததாகும். முற்பகுதி திருநறையூர்.
பிற்பகுதி நாச்சியார் கோயில்) . கோயில் வரை பேருந்து செல்லும்.
பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயன் ஆகியோர் வழிபட்டது. துர்வாசமுனிவரால் பறவை உருவச்சாபம் பெற்ற மனிதன் (நரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு 'நரவுரம்' என்றும் பெயர். பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும் சொல்லப்படுகிறது. சுகந்தவனம் என்பது வேறொரு பேர்.
இறைவன் - சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்.
இறைவி - சௌந்தரநாயகி, அழகம்மை.
தலமரம் - பவளமல்லிகை.
தீர்த்தம் - சூலதீர்த்தம் (கோயிலின் வடபால் உள்ளது)
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
மேற்கு நோக்கிய பெரிய கோயில். சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - ஏராளமான சிற்பங்கள். உள்ளே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் சந்நிதிகளில்லை. முன்மண்டபத் (வெளவால் நெத்தி) தில் இடப்பால் அம்பாள் சந்நிதி. நேரே மூலவர் தரிசனம். உள்வலத்தில் நவக்கிரகங்கள், நடராஜசபை, பைரவர், வீரபைரவர் சந்நிதிகள்.
மூலவர் மிக்க அழகான மூர்த்தி - கருவறையின் பின்புறத்தில் லிங்கோற்பவருக்குப் பக்கத்தில் நரன் (மனிதன்) வழிபடும் சிற்பம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, பிட்சாடனர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். பிற விழாக்கள் ஏதுமில்லை.
முதலாம் இராஜஇராஜன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் வரையிலான மன்னர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக் கல்வெட்டுக்களில் இத்தலம் 'க்ஷத்திரிய சிகாமணி வளாநட்டு, திருநறையூர் நாட்டுத் திருநறையூர்' என்றும் குறிக்கபட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர்" என்றும், "பஞ்சவன் மாதேவியான சதுர்வாதி மங்கலத்துத் திருநறையூர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுக்களிலிருந்து (1) பிட்சாடனருக்கு நிவேதனம் செய்யப் பொன் தந்தது (2) நாளன்றுக்குச் சிவயோகியார் ஒருவருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக் கருப்பூர் உடையான் என்பவர் நிலம்விட்டது (3) கோயிலில் விளக்கெரிக்க நிலங்கள் வழங்கியது போன்ற செய்திகள் தெரியவருகின்றன. பக்கத்தில் வைணவத் தலமான நாச்சியார் கோயில் உள்ளது.
"நீடவல்ல நிமிர் புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளிநெஞ்சே." (சம்பந்தர்)
"நீரும் மலரு (ம்) நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவமும் உடையானிடமாம்
வாரும் மருவி மணி பொன் கொழித்துச்
சேருந் நறையூர்ச் சித்தீச்சரமே." (சுந்தரர்)
-ஏணுடன்கா
ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
நாட்டும் பெருநரையூர் நம்பனே" (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
திருநறையூர் - நாச்சியார் கோயில் அஞ்சல்
குடந்தை வட்டம் - தஞ்சை மாவட்டம் 612 102