திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
அரிசிற்கரைப்புத்தூர்
அழகாபுத்தூர் , அளகாபுத்தூர்
கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயிலுக்குச் செல்லும் பேருந்துப் பாதையில் சென்றால் திருநறையூருக்கு முன்னாலேயே உள்ள இத்தலத்தையடையலாம். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப் பலகை அழகாபுத்தூர் என்றுள்ளது. மக்கள் அளகாபுத்தூர் என்று வழங்கின்றனர். தேவாரத்தில் அழகார்புத்தூர் என்று வருகின்றது. பெரிய புராணத்தில் இத்தலம் செருவிலிபுத்தூர் என்று குறிப்பிடப்பெறுகின்றது. இத்தலத்தையடுத்துத் திருநறையூர்ச் சித்தீச்சரம் உள்ளது. சாலையோரத் தலம். கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலம். புகழ்த்துணை நாயனார் முத்திப்பேறு பெற்ற தலம். ஊரின் தொடக்கத்திலேயே கோயில் பேருந்துச்சாலையோரத்தில் சற்றுத் தள்ளி வயலில் உள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்று அரிசிலாற்றின் கரையில் அழகாகக் காட்சியளிக்கிறது.
இறைவன் - சொர்ணபுரீஸ்வரர், படிக்காசளித்தநாதர்.
இறைவி - சௌந்தரநாயகி, அழகாம்பிகை.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - (கோயில் எதிரில் உள்ளது0.
மூவர் பாடல் பெற்ற தலம்.
மூன்று நிலைகளுடைய ராஜகோபுரம், உட்புறம் விசாலமாக உள்ளது. கோபுரவாயிலில் சூரியன் உருவங்கள் உள்ளன. வலப்பால் விநாயகர் சந்நிதியும் இடப்பால் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பால் உள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விந்தையான அமைப்பாகவுள்ளது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்துகொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.
அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள. முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் சுதைசிற்பமுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில இடப்பால் அம்பாள் சந்நிதி, மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவியார் இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற உண்மையானந்த முனிவர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
மூலவர் - சதுபபீடம். உயர்ந்தபாணம். நீண்ட உருத்திராக்க மாலையுடன் தரிசிக்கும் அழகு அனுபவித்துணரத்தக்கது. நாடொறும் மூன்றுகால வழிபாடுகள். கோச்செங்கட்சோழனின் கல்வெட்டில் இத்தலம் "குலோத்துங்க சோழ வளநாட்டு அழகார் திருப்பத்தூர் என்று குறிக்கப்பட்டுள்ளது.
"மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென்கரைமேற் புத்தூரே" (சம்பந்தர்)
"வேதனை மிகுவிணையின் மேவிய
கீதனைக் கிளருந் நறுங்கொன்றையம்
போதனைப் புனல் சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்து என்மனம் நையுமே". (அப்பர்)
"அகத்தடிமை செய்யும் அந்தணன்தான் அரி
சிற்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக்குடத்தையும் நம்முடி
மேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற்படியும்
வருமென்றொரு காசினை நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து உகந்தீர்
பொழிலார் திருப்பத்தூர் புனிதன்நீரே". (சுந்தரர்)
-"காட்டும்
"பரிசிற்கரைப்புற்றோர் பாங்குபெற ஓங்கும்
அரிசிற்கரைப் புத்தூரானே". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
அழகார்புத்தூர் - கிருஷ்ணாபுரம் - 612401
சாக்கோட்டை S.O. - (வழி) கும்பகோணம்
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.