சிவபுரம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

சிவபுரம்

1) கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில், "பட்டாமணி ஐயர் ஸ்டாப்" இடத்திற்குப் பக்கத்தில் பிரியும் (சிவபுரி) கிளைப் பாதையில் (மண் பாதையில்) சென்று, வழியில் மலையப்பநல்லூர் ஆலமரத்துப் பிள்ளையாரை வணங்கியவாறே 2 A.e. சென்றால் சிவுரபத்தை அடையலாம். கோயில் வாயில்வரை காரில், பேருந்தில் செல்லாம்.

2) கும்பகோணம் - திருவாரூர், கும்பகோணம் - மன்னார்குடிச் சாலையில் சாக்கோட்டை சென்று -வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அருகில் பிரியும் சாலையில் 2 A.e. சென்று சிவபுரம் அடையலாம்.

திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்த தலம். குபேரன் இராவணன் பட்டினத்தார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.

'குபேரபுரம்', 'பூகையிலாயம்', 'சண்பகாரண்யம்', என்பன தலத்தின் வேறு பெயர்கள். இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. பழைமையான கோயில்.

இறைவன் - சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்.

இறைவி - ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.

தலமரம் - சண்பகம் (இப்போதில்லை)

தீர்த்தம் - சந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.

சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற பதி.

ஐந்து நிலைகளையுடைய பழமையான ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சி தருகின்றது. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சந்நிதி - கிழக்கு நோக்கியது. முன்னால் விசாலமான கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரன் உருவங்கள் உள்ளன. விசாலமான பிராகாரம்.

கோஷ்ட மூர்த்தமாக நடன விநாயகரும், பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும் அடுத்து இலிங்கோற்பவரும், பிரமனும், துர்க்கையும் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து வழிபட்ட சிற்பம் - (சிவ லிங்கம், வெண்பன்றி வாயில் மலருடன், திருமால்) - உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்தூத திருத்தாண்டகத்தில் "பாரவன்காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்" என்று பாடியுள்ளார்.

வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. தீர்த்தக் கிணற்று நீர் சுவையாக உள்ளது. மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி. மகாவிஷ்ணு பூசித்தது, வழிபடுங்கால் உள்ளத்தில் ஒருவித மனநிறைவு உண்டாகின்றது. முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். நகரத்தார் இக்கோயிலை அற்புதமாகக் கற்கோயிலாகக் கட்டியுள்ளனர்.

கார்த்திகைச் சோமவாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது. இங்குள்ள நடராஜர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர்ச் சிவாலயத்தின் பாதுகபாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வேறொரு நடராஜத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளவித்து வழிபட்டு வரப்பெறகின்றது. நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

இங்குள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடமாலை சாத்தி - தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால் - வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

குபேரன் பூசித்த வரலாறு வருமாரு,

ஒருமுறை இராவணன், துய்மையற்றவனாய் இறைவன் வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் வடக்குப் பிராகாரத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த சுலோகத்தைப் படித்தான் மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமாவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து - ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து - மன்னன் வாள் கொண்டு அரியும்போது - குழந்தை, அன்னை சிங்கார வல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினான். இறைவன் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக் குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமான் முடியில் ரத்தத்துளி இருப்பதைக் காணலாம்.

தாயாக வந்த இந்திராணியும் - தந்தையாக வந்த இந்திரனும் - குழ்தையாக வந்த அக்னியும், கிழக்குப் பிராகாரத்தில் சிவலிங்கத் திருமேனி தாங்கி இருப்பதாகவும் கூறுவர்.

(ஆதாரம் - கோயில் வரலாறு)


"சுருதிகள் பலநல மதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு

உருவிய லுலகவை புகழ்தர வழி யழுகுமெயுறு பொறியழி

அருதவ முயல்பவர் தனதடியடை வகை நிலையரனுறை பதி

திருவயர் சிவபுர நினைபவர் திகழ்குலனில னிடைநிகழுமே." (சம்பந்தர்)


'பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண்

பயிர் வளர்க்குந் துளியவன்காண் துளியினின்ற

நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான்காண்

நிலவேந்தர் பரிசாகநினைவுற் றோங்கும்

பேரவன்காண் பிறைஎயிற்று வெள்ளைப் பன்றி

பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்

சிரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்

சிவனவன்காண் சிவபுரத்துஎம் செல்வன்தானே." (அப்பர்)


"ஓழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி."

(திருவாசகம் - போற்திருவக)


-தரிசனத்தெக்

காலஞ்சிவ புரத்தைக் காதலித்தோர் தங்கமுதி

யேலுஞ் சிவபுரத்தில் எம் மானே. (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சிவகுருநாதசுவாமி திருக்கோயில்

சிவபுரம் - சாக்கோட்டை அஞ்சல் - 612401

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is அரிசிற்கரைப்புத்தூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கலயநல்லூர்
Next