திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருப்பயற்றூர்
திருப்பயத்தங்குடி
மக்கள் 'திருப்பயத்தங்குடி' என்றழைக்கின்றனர்
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துச் சாலையில் கங்களாஞ்சேரியை அடைந்து, அதையடுத்து வலப்பக்கமாகப் பிரிந்து செல்லும் நாகூர் சாலையில் சென்று, மேலப்பூதனூர் அடைந்து அங்கிருந்து பிரியும் திருமருகல் சாலையில் சென்றால் திருப்பயத்தங்குடியை அடையலாம். (இத்தலத்தையடுத்து செங்காட்டங்குடியும் அடுத்து திருமருகலும் உள்ளது.) ஊர் சாலையோரத்தில் உள்ளது, திருவிற்குடிக்கு இத்தலம் பக்கமே. பைரவ மகரிஷி வழிபட்ட தலம்.
சுங்கம் கொடுக்க அஞ்சிய வணிகன் ஒருவன், சுங்கமில்லாத பயறு மூட்டைகளாகத் தன் மிளகுப் பொதிகளை மாற்றித் தருமாறு வேண்ட, அவனுக்கு இறைவன் பயறு மூட்டைகளாக மாற்றித் தந்து அருளியதால் பயற்றுநாதர் என்று பெயர் பெற்றார் என்பது செவி வழிச் செய்தி.
இறைவன் - முக்தபுரீஸ்வரர், திருப்பயற்றுநாதர்.
இறைவி - நேத்ராம்பிகை, காவியங்கண்ணி.
தீர்த்தம் - கருணா தீர்த்தம் (கோயில் முன்பு உள்ளது. (இதனைப் பிரம தீர்த்தம் என்றும் கூறுவர்)
தலமரம் - சிலந்தி மரம்
(இம்மரத்தின் மலர் மஞ்சள் நிறத்தில் சிலந்திப் பூச்சி வடிவில் இருக்கும் சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு. இலை, புன்னையிலை போல இருக்கும். இம்மரம் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் உள்ளது.)
அப்பர் பாடல் பெற்றது.
கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம், தண்டபாணி சந்நிதி வடபால் தனியே உள்ளது. வாகன மண்டபமுளது. தலவிநாயகர் - சித்தி விநாயகர். மகாமண்டபத்தில் நடராஜசபை. அடுத்து நால்வர், வீரமாகாளி, அகத்தியர், பிரதோஷநாயகர், சுப்பிரமணியர், விநாயகர், உற்சவத்திருமேனிகள் உள்ளன.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. இங்குள்ள பெரிய மண்டபத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி சிறப்பாகவுள்ளது. சுவாமி - மூலவர் - ஆவுடையார் நாற்கோண வடிவம். பழமையான திருமேனி.
இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி அம்பிகையை வழிபட்டால் கண்நோய் நீங்கும் என்றொரு செய்தி சாசனத்தின் மூலம் தெரிய வருகிறது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராட்சமாலை, மற்றொரு வலக்கையில் தாமரை,
இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள்.
அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகைச் சோமவாரங்கள் சுவாமிக்கு விசேஷம்.
"தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுலகு உடனுமாகி
எந்தை யெம்பிரான் என்றென்று உள்குவார் உள்ளத்தென்றும்
சிந்தையும் சிவமுமாவர் திருப்பயற் றூரனாரே." (அப்பர்)
-"கோமுண்
மயற்றூர் பறிந்த மனத்துள் விளைந்த
பயற்றூர் திசை அம்பரனே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. முக்தபுரீஸ்வரர் திருக்கோயில்
திருப்பயத்தங்குடி - அஞ்சல்
(வழி) கங்களாஞ்சேரி s.o. -609 701.
நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.