திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருச்செங்காட்டங்குடி
திருவாரூர் - திருமருகல் சாலையில், 'செங்காட்டங்குடி' என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக வந்து, திருமருகல் கால்நடை மருந்தகத்தைத் தாண்டி, பாதை வழியே 3 A.e. சென்றால் தலத்தை அடையலாம்.
திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சிறுத்தொண்டர் நாயனார் அருள் பெற்ற தலம். கணபதி இறைவனை வழிபட்டதால் கணபதீச்சரம் என்று கோயிலுக்குப் பெயர். விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆகியோருக்கும் அருள்புரிந்த தலம். பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளனர். (வாதாபி கணபதி)
இக்கோயிலுக்கு மந்திர புரீசம், கணபதீச்சரம், சக்திபுரீசம், இந்திரபுரிசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம் எனப் பல பெயர்களுண்டு.
இறைவன் - உத்தராபதீஸ்வரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீஸ்வரர்.
இறைவி - சூளிகாம்பாள் (குழலம்மை) .
தலமரம் - ஆத்தி.
தீர்த்தம் - தீர்த்தக்குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.
இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது. அவை -
சத்தியதீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திரதீர்த்தம், யமதீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன.
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். ஊரின் நடுவில் கோயில் உள்ளது.
இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - கிழக்கு நோக்கியது. கோயில் வாயிலில் உள்ள திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். குளக்கரையில் 'மங்களவிநாயகர்' எழுந்தருளியுள்ளார். ராஜகோபுரத்தின் உட்பக்கம் ஆத்திமரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம் - கவசமிட்ட கொடிமரம் தாண்டி, உட்பிராகாரத்தில் பிட்சாடனர் கல்லில் வடித்துள்ள கோலத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும், அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். தலமரம் 'ஆத்தி' உள்ளது. பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபிகணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி, அவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுடையவை - இம் மண்டபத்தில் உள்ளன. நடராஜ சபை உள்ளது. நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
திண்டி, முண்டி எனும் துவாரபாலகர்களைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் - கணபதீச்சரமுடையார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனி கொண்டுள்ளார். இவருக்கு நாடொறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகதலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) . துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசர் சந்நிதி எதிரிலுள்ளது.
கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த ஐதீகவிழா நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர் உத்ராபதீஸ்வரர் திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் 'வேண்டும் விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். உற்சவக்காலங்களில் iF உலாவரும் நாதர் உத்தராபதியாரே. (வடநாட்டுப்பைரவ கோலத்தில் வந்த பெருமான்) உத்தராபதியார் திருமேனி உருவான விதம் பற்றிச் சொல்லப்படும் வரலாறு-
ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் புரிநத் செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாள்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்தராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார்.
கொல்லர்கள் உத்தராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்ப்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்கக் கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர்.
இறைவன் சிவயோகியார் வடிவில் வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள் "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது வேண்டுமானால் உற்றுகிறோம்" என்றனர்.
சிவயோகியார், "நல்லது. அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர் கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சி தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு) நாடொறு ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனம் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும். மக்கட்பேறில்லாதவர்கள் உத்தராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.
கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் 1) செங்காடுடைய நாயனார் 2) கணபதீச்சரமுடைய மகாதேவர் 3) கணபதீஸ்வரமுடையார் எனவும், தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்றும்
குறிப்பிடப்படுகிறது.
இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கோயிலாகும். உத்தராபதியாருக்கு ஆனி உத்திரம், மார்கழித் திருவாதிரையில், பங்குனி பரணியில் அபிஷேகம் நடைபெறுகிறது. நடராஜர், அபிஷேகங்கள், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தீபம், மார்கழியில் பாவை விழா, சிவராத்திரி முதலிய விசேஷ வழிபாடுகளம் உற்சவங்களும் நடைபெறுகின்றன.
"பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைநாள் பயப்பூரச்
சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே." (சம்பந்தர்)
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தேமன்னி
இருந்தமணி விளக்கதனை நின்றபூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்தோள்வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்
திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. (அப்பர்)
-"இயற்றுஞ்சீர்
ஆச்சிரமேவுஞ் செங்காட்டங்குடியின் அங்கணப
தீச்சரம் வாழுஞ் சந்திரசேகரனே." (அருட்பா)
சூதாவி நீலநிகர் முலைவிழிவல் லபையணைந்து தொண்டர்செய்தி
ஓதாமுன் பொன்னிநதி கொணர்ந்துசிவன் பாதத்தை உன்னிச்செய்தி
தீதாவி செவிகவருந் தீங்குழலோன் விழியளித்துச் செல்வநல்கும்
வாதாவி மதக்களிற்றின் பதயுகத்தா மரையுளத்தில் வைத்து வாழ்வாம்.
சீர்தந்த நவப்பொருளா யெண்வடிவா யேழிசையாய்த் திகழாதாரஞ்
சார்தந்த வாறாக யைந்தெழுத்தாய் நான்மறையாய்ச் சாத்துகாதிப்
பேர்தந்த முக்குணமா யிருசுடரா யருமுதலாய்ப் பெருகா நின்ற
கார்தந்த ஆத்திவனக் கணபதீச் சரத்தானைக் கருத்துள் வைப்பாம்.
கங்காட்டுங் கரங்களத்துக் கறைகாட்டும் பிறைமவுலிக் கடவுள் மாலோ
டங்காட்டு நான்முகனை ஐங்கரனை அறுமுகனை அளித்தபேதை
சங்காட்டும் புனற்கரஞ்சேர்க் காவேரி வளங்காட்டுந் தமிழ்நன் னாட்டிற்
செங்காட்டங் குடிவாய்த்த திருக்குழலி உபயபதஞ் சென்னி சேர்ப்பாம்
பனியுண்ணா தகல்விசும்பிற் பரிதிதேர் தடுத்தமலை பதித்த கும்ப
முனியுண்ணா கடலினெழு விடந்தொடர முண்டகன்மால் முறையிட்டோட
நனியுண்ணா துயிரளித்து நரமதலைக் கறிவேட்டு நல்லோ ரின்றித்
தனியுண்ணா வைரவனார் சிலம்பார்க்க நடந்தமலர் சரணஞ் சார்வாம்.
கடிக்கமலஞ் சூழ்புவியில் மறையவராம்
வாதாவிக் கடிந்து மன்னாற்
படிக்கமல மறவடியார்க் கனம்படைத்தோர்
சீராளற் பயந்த நங்கை
பிடிக்கமலங் காதரிந்து சமைத்தகறி
வயிரவராம் பெருமாற்கீந்தே
அடிக்கமலங் குடிபெறுநற் பரஞ்சோதி
சிறுத்தொண்டர்க் கன்புசெய்வாம்.
மருங்காட்டு மறவாளர் விரும்பு முடற் சீராளன் மலர்க்காலாதி
ஒருங்காட்டுந் தலைக்கறிசெய் சந்தனத்தார் சரண மெலா வுலகுங் கூட்டி
நெருங்காட்டு திங்கள்விழா வொலிகூரு முகிலூரு நெடிய கன்னற்
கருங்காட்டுச் செங்காட்டு வெண்காட்டு நங்கைபதக் கமலஞ் சேர்வாம்
காரேழுந் தடுத்சிறு கண்ணனெனக் காசினியோ ரேவரும் போற்றப்
பாரேழும் படைத்தளிக்கும் ஒருமுதற்குப் பசிதீர்க்கு மருந்தாய் நின்றே
நீரேழு கலங்கிடின நிலையலையான் றுணியுமென நிகர்த்துஞ் செல்வக்
சீராளப் பிள்ளையிரு சிறுசதங்கை பதமெமது சென்னி சேர்ப்பாம். (தலபுராணம்)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்
திருச்செங்காட்டங்குடி - திருக்கண்ணபுரம் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம் 609 704