இரும்பூளை

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

இரும்பூளை

ஆலங்குடி

மக்கள் வழக்கில் ஆலங்குடி என்ற வழங்குகிறது.

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் உள்ள ஊர். பேருந்து வசதி உள்ளது. பூளை என்னும் செடியைத் தலவிருட்சமாக உடையதாதலின் இரும்பூளை

எனப்பெயர் பெற்றது.

இறைவன் - காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயேஸ்வரர்.

இறைவி - ஏலவார்குழலி. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் இதைத் தட்சிணா மூர்த்தித் தலம் என்பர்.

தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக்காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு.

"ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை

ஆலங் குடியான் என்று ஆர்சொன்னார் - ஆலம்

குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்

மடியாரோ மண் மீதினில்."

இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. அழகான கோயில் சிற்பங்கள் அதிகம் உள்ளன.

உள்ளே நுழைந்ததும் மேலக்குடவரையில் "கலங்காமல் காத்த விநாயகர்" காட்சி தருகிறார். வணங்கி உள் நுழைந்தால் அம்பாளின் தெற்கு நோக்கிய சந்நிதி. இரண்டாம் வாயிலைக் கடந்தால் சூரியன் சந்நிதி உற்சவ சுந்தரர் தரிசனம். உள் பிராகாரத்தில் நால்வர், சூரியர், சோமேசர், குருமோட்சேஸ்வரர், சோமநாதர் சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதரும் விசாலாட்சி அகத்தியரும் உள்ளனர்.

ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடு கூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்தமாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களம் உள்ளன. சபாநாயகர் சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தட்சிணாமூர்த்தி சனகாதி நால்வருடன் காட்சி தருகின்றார்.

சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் தூவர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். 'ஞானகூபம்' என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன.

இத்தலத்தின் கிழக்கே 'பூளைவள ஆறு' பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுன) மகாலிங்கப் பெருமானுக்குப் பரிவாரமாக உள்ள தலங்களுள் இதுவும் ஒன்று. ஏனையவை - 1) திருவலஞ்சுழி (விநாயகர்) 2) திருவேரகம் (முருகன்) 3) திருவாவடுதுறை (நந்தி) 4) சூரியனார் கோயில் (நவக்கிரகம்) 5) சேய்ஞலூர் (சண்டேஸ்வரர்) 6) தில்லை (நடராஜர்) 7) சீர்காழி (பைரவர்) 8) திருவாரூர் (சோமாஸ் கந்தர்) என்பன. பஞ்ச ஆரண்யத்தலங்களுள் இதுவும் ஒன்று. குருபெயர்ச்சி ஆராதனை, சித்திரைப் பௌர்ணமி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தட்சிணாமூர்த்திக்குத் தேர்விழா நடைபெறுகிறது.


"நச்சித் தொழுவீர்காள் நமக்கிது சொல்லீர்

கச்சிப் பொலி காமக்கொடியுடன் கூடி

இச்சித்து இரும்பூளை இடங்கொண்ட ஈசன்

உச்சித்தலையில் பலி கொண்டுழல் ஊணே." (சம்பந்தர்)

"பொல்லாத பாவங்கள் கோடானகோடி இப்

புவிமிசையிலோர் வடிவமாம்

புலையனேனுனை மறந்தனு தினஞ்செய்து வரும்

பொல்லாத வினையெண்ணிலேன்

அல்லாரு மலமாயை கரமங்களணுகாத

அகள Gw பிரபஞ்சமாம்

அகளங்க சுத்த நித்யானந்த அநுபவம்

அணுவளவு (ம்) வந்ததில்லை

நல்லார் முன் அணுகாத யமதூதர் கொண்டு போய்

நரகிலே விடுவரென்று

நடுநடுங்கா நின்றதுள்ள முனைநம்பினேன்

நம்பினேன் வட கயிலையாய்

உல்லாச பரமகுரு நாதனே ஆலடியில்

உறைகின்ற பரதெய்வமே

ஒன்றாகி ஆனந்த உருவாகி என்னுயிர்க் (கு)

உயிரான பரமசிவமே". (தட்சிணாமூர்த்தி திருவருட்பா)

-"வாய்த்த

பெரும்பூகந் தெங்கிற்பிறங்க வளங் கொள்ளும்

இரும்பூளை மேவியிருந்தாய்". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

ஆலங்குடி - அஞ்சல் - 612 801

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.












Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருச்சேறை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவெண்டுறை   கோட்டூர்
Next