திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவெண்டுறை
வண்டுதுறை
மக்கள் வழக்கில் 'வண்டுதுறை' என்று வழங்குகிறது.
1. மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன
2. மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன.
3. திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடிக்குப் போகும் சாலையில் 'வீராக்கி' என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். நல்ல சாலை.
பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனின் திருமேனியின் இடையில் துறைத்துச் சென்று அவரை மட்டும் வலம் வந்தமையால், அம்பிகை சாபம் தர, வண்டு உருவில் இருந்து இங்கு வழிபட்டார் என்பது வரலாறு. கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்பதாகப் பண்டை நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கேட்கவில்லை. வித்யாதரர், பிரமன், துருவன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம்.
இறைவன் - மதுவனேஸ்வரர், பிரமரேஸ்வரர், பிரமபுரீசர், வெண்டுறைநாதர்.
இறைவி - சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள், வேல்நெடுங்கண்ணி.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - பிரமதீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
இராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் வடபால் தாமரைக் குளம் உள்ளது. வாயிலைக் கடந்து சென்றால் கொடிமரமில்லை - பீடம் மட்டுமுள்ளது. பலிபீடம் நந்தி உள்ளன.
பிராகாரத்தில் 'மதாபோத கணபதி' சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் உள. சுற்று மதிலுடன் தரை தளவரிசையிடப்பட்டு வலம் வருவதற்கு வசதியாகவுள்ளது.
இங்குப் பிட்சாடனர் மூலத் திருமேனி, பிராகாரத்தில் உள்ளது. தரிசிக்கத்தக்கதும் விசேஷமானதுமாகும். கருவறை முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம். நேரே மூலவர் தரிசனம் அழகிய சிவலிங்கத் திருமேனி. நடராஜ சபையுள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றிய நிலையில்) , பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.
"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போதியலும் முடிமேற் புனலோடரவம் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம்ட வெண்டுறையே". (சம்பந்தர்)
-"தென்கூட்டிப்
போய் வண்டுறை தடமும் பூம்பொழிலும சூழ்ந்தமர்
ஆய் வெண்டுறை மாசிலாமணியே". (அருட்பா)