திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
கடிக்குளம்
கற்பகநாதர் குளம்
மக்கள் கற்பகநாதர் குளம் என்று வழங்குகின்றனர். (அஞ்சல் துறையிலும் கற்பகநாதர் குளம் என்றே வழங்குகிறது) கடிக்குளம் - கோயிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர். இதுவே ஊர்க்குப் பெயராயிற்று.
1) திருத்துறைப் பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் இத்தலத்தை (கோயிலை) அடையலாம். திருத்துறைப்பூண்டியிலிருந்து 17 A.e. தொலைவு.
2) முத்துப்பேட்டையிலிருந்து வேதாரண்யம் சாலையிலும் வரலாம். பட்டுக்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்ற தலம். எனவே இங்குள்ள கற்பகவிநாயகர், மாங்கனிப் பின்ளையார் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
இறைவன் - கற்பகநாதர், கற்பகேஸ்வரர்.
இறைவி - சௌந்தரநாயகி, பாலசௌந்தரி.
தலமரம் - பலா.
தீர்த்தம் - விநாயகதீர்த்தம் - இதுவே கடிக்குளம் எனப்படுவது. (கடி - மணம். மணம் மிக்க குளம்)
தலவிநாயகர் - கற்பகவிநாயகர், மாங்கனிப் பிள்ளையார்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
சிறிய ஊர் - கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியுள்ளது. வடபால் தீர்த்தம் உளது. கோபுர வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் - சிறிய மூர்த்தி. எட்டுப்பட்டைகளுடன் எழிலாகக் காடசி தருகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இவ்வூருக்குப் பக்கத்தில் 2 A.e. தொலைவில் 'துளசியாம் பட்டினம்' என்னம் ஊர் உள்ளது. அங்கு ஒளவையாருக்கு தனிக்கோயில் உள்ளது. அது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் தந்தையான துளசா மகாராஜாவால் கட்டப்பட்டது. ஒளவையாரை முருகன் சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று கேட்டு அருள்புரிந்த தலம் இது என்பது சொல்லப்படுகிறது. இங்குச் செல்வோர் அருள்மிகு. கோதண்ட ராமமசாமி கோயிலையும் தரிசிக்க வேண்டும். இப்பெருமான் மீது கடலூர் வித்வான் திரு. தே. ஆ. சீனிவாசாரியார். "திருக்கடிக்குளம் கோதண்ட ராமசாமிபதிகம்" பாடியுள்ளார்.
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மகாராஷ்டிர மன்னர்கள் இத்தலத்திற்குப் பல நிபந்தங்கள் அளித்துள்ள செய்திகள் கல்வெட்டக்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன. இத்தலத்திற்குப் பக்கத்தில் இடும்பாவனமள்ளது.
"பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர்
புலியுரி அதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணன் எனவரு
குரைகழல் சிலம் பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்
துறையும் கற்பத்தைத்தம்
முடிகொள் சாய்த்தடி விழ்தரும் அடியரை
முன்வினை மூடாவே". (சம்பந்தர்)
-"தொல்லைப்
படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
கடிக்குளத்து அன்பர் களிப்பே" (அருட்பா)
அஞ்சல் முகவரி-
அருள்மிகு. கற்பகநாதர் சுவாமி கோயில்
கற்பகநாதர்குளம் - அஞ்ல்
குன்னலூர். s.o. - 614 703
திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.