தண்டலை நீள்நெறி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

தண்டலை நீள்நெறி

தண்டலைச்சேரி,

மக்கள் தற்போது 'தண்டலைச் சேரி' என்றும் 'தண்டலச்சேரி' என்றும் வழங்குகின்றனர். திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 A.e. தொலைவு. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருபோர் கோயில் வாயிலில் இறங்கலாம்.

இத்தலத்திற்குப் பக்கத்தில் 'மணலி' புகைவண்டி நிலையம் உள்ளது.

அரிவாட்டாய நாயனார் முக்தி பெற்ற தலம். இந்நாயனார் பிறந்த ஊராகிய 'கணமங்கலம்' பக்கத்தில் உள்ளது. மக்கள் அதை 'கணமங்கலத்திடல்' என்றும், 'கண்ணந்தங்குடி' என்றும் வழங்குகின்றனர். இங்குள்ள பழைமையான சிவன் கோயில் அழிந்துவிட்டது. இதுவே கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். இக்கோயில் அழிந்துவிடவே, பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இப்போதுள்ள கற்கோயிலைக் கட்டித் தந்துள்ளார்கள். (கோயில் - நீள் நெறி - ஊர் - தண்டலை) கோயில் கற்றளி. விமானங்கள் சுதை வேலைப்பாடுடையவை.

இறைவன் - ஸ்திரபுத்தீஸ்வரர், நீள்நெறி நாதர்.

இறைவி - ஞானாம்பிகை.

தலமரம் - குருந்தை.

தீர்த்தம் - ஓமக தீர்த்தம், கோயிலின் பக்கத்தில் சாலையின் கீழ்ப்பால் உள்ளது. ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது.

சம்பந்தர் பாடியது.

முகப்பு வாயில் உள் நுழையும்போது இடப்பால் அதிகார நந்தி சந்நிதி உள்ளது. கொட மரமில்லை. பலிபீடம், நந்தி உள்ளன. கொடிமரத்து விநாயகர் உள்ளார். பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

கருவறை முன்மண்டபத்தில் கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார், நால்வர் மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. துவாரபாலகர்களைத் தொழுது, விநாயகரை வணங்கி உட்செல்லும் போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக்காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடராஜர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராஜ சபை வலப்பால் உள்ளது. சிவகாமி, மாணிக்கவாசகர், பதஞ்சலி, வியாக்ரபாதர் திருமேனிகள் உள்ளன.

மூலவர் - சிவலிங்கம் அழகான சிறிய திருமேனி. அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. சுவாமிக்கு வெள்ளியிலான நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளிக் கவசமும் பொன்னாலான செவ்வந்திப்பூ மாலையும் சார்த்தித் தரிசிக்கும் போது உண்டாகும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை சந்நிதி தனியாக விமானங் கட்டப் பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது - பிற்காலப் பணி. நாடொறும் நான்கு காலபூஜைகள் நடைபெறுகின்றன.

தை மாதத்தில் பெருவிழா 3 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. நடராஜர் அபிஷேகங்களும் மாதாந்திரக் கட்டளைகளும் நடைபெறுகின்றன. அரிவாட்டாய நாயனார் குருபூஜை 'அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரியமுறைப்டி நடத்தப்பெறுகிறது. படிக்காசுப் புலவர் இத்தலத்து இறைவன்மீது 'தண்டலையார் சதகம்' பாடியுள்ளார்.

பக்கத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள் திருச்சிற்றேமம். திருவாய்மூர், திருக்குவளை, திருக்களர் முதலியன. ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி அம்பாள் விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பெற்று, 7-11-1985ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

'விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே

சுரும்புந் தும்பியுஞ் சூழசடை யார்க்கிடம்

கரும்புஞ் செந்நெல்லுங் காய்கமுகின் வளம்

நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே' (சம்பந்தர்)

"பரிவுறு சிந்தை அன்பர் பரம்பொருளாகி யுள்ள

பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்

வரிவிடு விடேல் எனாமுன் வன்கழுத்தரிவாள் பூட்டி

அரிதலால் 'அரிவாட்டாயர்' ஆயினார் தூய நாமம்" (பெரியபுராணம்)

"அல்லமரும் குழலாளை வரகுண பாண்

டயராசர் அன்பால் ஈந்தார்

கல்லை தனில் மென்றுமிழ்ந்த உண் அமுதைத்

கண்ணப்பர் கனிவால் ஈந்தார்

சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும்

மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார்

நல்லது கண்டாற் பெரியோர் நாயகனுக் (கு)

என் (று) அதனை நல்குவாரே".

(படிக்காசுப் புலவர் - தண்டலையார் சதகம்)

-"கடிக்குளத்தின்

வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்

தண்டலைக்குள் நீணெறிச் சிந் தாமணியே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில்

தண்டலைச்சேரி கிராமம்

வேளூர் அஞ்சல் - 614 715.

(வழி) திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.




Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவெண்டுறை   கோட்டூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கடிக்குளம்
Next