திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
பாதாளேச்சுரம்
பாமணி
மக்கள் வழக்கில் 'பாமணி' என்று விழங்குகிறது. மன்னார் குடிக்குப் பக்கத்தில் 2 கி.மீல் உள்ள ஊர். டவுன் பஸ் செல்லுகிறது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். பாம்பணி - சர்ப்பபுரம் என்பன இதன்வேறு பெயர்கள். பாம்பணி - என்பது மருவி இன்று பாமணி' யாயிற்று. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு (தனஞ்சய முனிவராய்) வழிபட்ட தலம். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. சுகலமுனிவர் வழிபட்டது. நகரத்தார் திருப்பணி பெற்றுக்கோயில் சிறப்பாகவுள்ளது. கர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம்.
இறைவன் - சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர்.
இறைவி - அமிர்தநாயகி.
தலமரம் - மா.
தீர்த்தம் - நாக தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .
சம்பந்தர் பாடல் பெற்றது.
முகப்பு வாயிலைக் தாண்டியுட் புகுந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
உள்மண்டபத்தில் வலப்பால் நடராஜ சபை. மூலவர் உள்ள இடம் புற்றாக அமைந்துள்ளது. இடப்பால் தனஞ்சயர் உருவமுள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டை காணப்படுகிறது. மூலவர் - சுயம்பு. முப்பிரிவாக அமைத்து செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொரத்தப்பட்டு விளங்குகிறது. இது குறித்த வரலாறு வருமாறு - "சுகல முனிவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து அடித்தார் - அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி - (வடக்கு வீதியில் உள்ள) பசுபதி தீர்த்தத்தில் விழுந்திறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார்".
அக்காமதேனு முட்டியதால் மூலத்திருமேனி மூன்று வடுக்களையுடையதாய் - முப்பிரிவாக, மேற்குறித்துள்ளவாறு காட்சி தருகின்றது. சுயம்பாதலின் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. பாம்பு வழிபட்டமையால் பாம்பு போன்ற வடுவும் முன்புறத்தில் உள்ளது.
ஆதிசேஷன், தனஞ்சயர் வடிவில் தோன்றி, பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்ட நாள் ஐப்பசி முதல் நாளாகும். எனவே அந்நாளில் நம் உணவு போலவே சோறு, குழம்பு, காய்கறி வகைகள் வடைபாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கையில் சிறப்பு செய்து வழிபடுகின்ற வழக்கம் இன்றுமுள்ளது. பச்சை திராட்சையும், மாங்கனியும், மாம்பழச் சாறும் இங்குச் சிறப்பு நிவேதனம்.
நாடொறும் இருகால வழிபாடு நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரங்கள், கடைசி சோமவாரத்தன்று 108 கலசாபிஷேகம் விசேஷம். ராஜராஜசோழன் காலக் கல்வெட்டில் இத்தலம் சுற்ற வேலி வளநாட்டு பாம்பணி கூற்றத்துப் பாமணி என்று குறிக்கப்படுகிறது.
"அங்கமு (ம்) நான்மறையும் அருள் செய்தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயனின்றுகளுஞ் செறுவிற்றிகழ்கின்ற சோதிப்
பங்கய (ம்) நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே". (சம்பந்தர்)
(சம்பந்தர் பாட்டில் பாதாளேச்சுரம் என்று குறிக்கப்படும் பெயர் பிற்காலத்தில் சுந்தரர் வாக்கில் பாம்பணி என்று மாறி வருவதை நோக்குங்கால் அக்காலத்திலேயே இப்பெயர் மாறிப்போய் விட்டிருப்பதை அறியமுடிகிறது) .
-"பூவுலகாம்
ஈங்கும் பாதாளமுதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும்
தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சர்ப்பபுரீஸ்வரர் திருக்கோயில்
பாமணி - அஞ்சல் - 614 014
(வழி) மன்னார்குடி - மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம்.