திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
கொள்ளம்பூதூர்
திருக்களம்புதூர்
திருக்களம்பூர்
கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் சென்று கொள்ளாம்பூதூரை அடையலாம். ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகின்றது. இது அகத்திய காவேரி எனப்படும். இவ்வாற்றின் எதிர்க்கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை 'நம்பர் கோயில்' என்றழைக்கின்றனர். நம்பர் என்பது ஞானசம்பந்தரைக்குறிக்கும்.
இவ்வாற்றில்தான் ஞானசம்பந்தர், அடியவரோடு ஓடம் ஏறிப்பதிகம் பாடிச் செலுத்தி மறுகரையைச் சேர்ந்த அற்புதம் நிகழ்ந்தது. (இந்த ஆற்றை ஓடம் போக்கி
ஆறு என்றும் மக்கள் வழங்குகின்றனர்) ஞான சம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகைதந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ்செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர் அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" என்று தொங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஒடத் திருவிழா'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடைபெறுகின்றது. (கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று.
இது தவிர பிரமவனம், பஞ்சாட்சருபரம், காண்டீபவனம் என்னும் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. அருச்சுனன் வழிபட்டதாகவும் வரலாறு தா புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இறைவன் - வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவி - சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - பிரமதீர்த்தம், அகத்திய தீர்த்தம காண்டிப தீர்த்தம் (அருச்சுன தீர்த்தம்) , முள்ளியாறு எனப்படும் வெட்டாறு முதலியன.
சம்பந்தர் பாடல் பெற்றது.
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச் செங்கட் சோழன், பிருகுமுனிவர், காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர் வழிபட்ட தலம்.
"பொற்புறு கொள்ளம் பூதூர் எனவொரு புகழ்ப் பேர் கொண்ட
விற்பொலி மதில்சூழ் வில்வ வனமது விண்ணோர் போற்றும்
சிற்பரன் உகந்த காசி செறி அகத்திய காவேரி
அற்புதமாகுங் கங்கை பலமும் அப்படியே யாமால்" (தலபுராணம்)
சுவாமி விபுலானந்தர் அவர்கள்- யாழ்நூலின் ஆசிரியர் பலகாலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ்நூலை அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும். (1947ல்) திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. நகரத்தார் திருப்பணி பெற்றது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரிமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் உள்ளார். கோயிலின் முன் பிரமத் தீர்த்தம் உள்ளது. உள்நுழைந்ததும் வலப்பால் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாங் கோபும் ஐந்து நிலைகளையுடையது. வாயிலில் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனிதனிக்கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை.
கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செல்லும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் வலம் வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுகசுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்து. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் நின்ற திருக்கோலம். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களின் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். வலப்பால் திருமுறைக்கோயில் - பக்கத்தில்
நடராஜசபை. இம் மண்டபத்தில் விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நேரே மூலவர் தரிசனம், கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. இத்திருக்கோயிலில் நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. நற்சாந்துப்பட்டி பெ. ராம இராமன்செட்டியார், பெ. ராம லட்சுமணன் செட்டியார் குடும்பத்தினர் இத்திருக்கோயிலின்பால் அளவிலாதபற்று கொண்டு இலட்சக் கணக்கில் திருப்பணிகளைச் செய்வித்து - கோயில் முழுவதையும் கருங்கல் திருப்பணியாக செய்வித்து - 1.7.1979ல் மகா கும்பாபிஷேகத்தை மிகச்சிறபர்கச் செய்து முடித்துள்ளனர். இன்றும் இக்குடும்பத்தினர் இக்கோயிலைச் செம்மயை £கப் போற்றி வருவது நம்நெஞ்சுக்கு மகிழ்வூட்டும் அமுதச் செய்தியாகும். மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள்ள உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி 'கொள்ளம்பூதூர் உடையார்' என்றும், தேவி 'அழகிய நாச்சியார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள்வழிபாட்டுக்கும் நிவந்தங்கள்விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இத்தலம் கல்வெட்டில் 'அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
"கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்
நட்டமாடிய நம்பனையுள்கச்
செல்லவுந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே"
"கொன்றைசேர் சடையான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுன் ஞானசம்பந்தன்
இன்று சொன்மாலை கொண்டேத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே" (சம்பந்தர்)
"தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி
ஒழிந்திடவும் மிக்கதோர விரைவார் சண்பைக
காவலனார் ஓடத்தின் கட்டவிழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டார் தம்மை யேற்றி
'நாவலமே கோலாக' அதன்மேல்நின்று
நம்பர்தமைக் 'கொட்டமே' நவின்று பாட" (பெரிய.புராணம்)
வில்வவனேசர் துதி
"சீர்கொண்ட ஒருகோடிப் பரிதியென ஒளிவிரிக்கும் செவ்வியானைப்
பார்கொண்ட மணிச்சுடிகைப் பன்னகப்பொற் பணியானைப் பசுந்தேன் நல்கும்
தார்கொண்ட தண்துளபத் திருமாலும் சதுர்முகனும் தாழ்ந்து போற்றக்
கார்கொண்ட முகத்தானை வில்வவனப் பெருமானைக் கருத்துள் வைப்பாம்".
(தலப்பாடல்)
வெண்ணிலாக்கண்ணி
"வில்வவனமேவு நாதர் வெண்ணிலாவே - எங்கள்
விமலர்தமை ஏத்துவம் வா வெண்ணிலாவே
நம்பர்பதம் அபயமென வெண்ணிலாவே - நீதான்
நண்ணியுற்ற நலமறிந்தோம் வெண்ணிலாவே
நாட்டுக்கெலாம் நம்பனென வெண்ணிலாவே
நம்பனுறை கொள்ளம் பூதூர் வெண்ணிலாவே."
(கொள்ளம்பூதூர் வைத்தியலிங்க முதலியார் பாடியது)
-'தோய்வுண்ட
கள்ளம்பூதாதி நிலைகண்டு உணர்வு கொண்டவர்சூழ்
கொள்ளம்பூதூர் வான்குல மணியே' (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. வில்வாரண்யேசுவரர் திருக்கோயில்
திருக்களம்பூர் - 622 414
திருவாரூர் மாவட்டம்.