திருக்கெள்கிக் காடு

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருத்தெங்கூர்

திருத்தங்கூர்


சோழநாட்டு (தென்கரை) த் தலம்

மக்கள் வழக்கில் திருத்தங்கூர் என்றும் வழங்கப்படுகிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் 'நெல்லிக்கா' என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி, திருநெல்லிக்கா சென்று, அங்கிருந்து 2 A.e. உள்ள இத்தலத்தையடையலாம். தனிப்பேருந்தில் செல்வோர், கோயில்வரை செல்லலாம். பொதுப் பேருந்துப் பயணம் மேற்கொள்வோர், 'நெல்லிக்கா' கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி நடந்து வரவேண்டும். ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும், இத்தலத்தில் மட்டுமே தெளிந்த நீர் தேங்கி நின்றதால் 'தேங்கூர்' என்று பெயர் பெற்றது என்பது தலபுராணச் செய்தி. தென்னை வளம்பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.


இலக்குமியும் நவக்கிரகங்களும் வழிபட்ட தலம்.


இறைவன் - ரஜதகீரிஸ்வரர், வெள்ளிமலைநாதர்.


இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.


தலமரம் - தென்னை.


தீர்த்தம் - சிவகங்கை.


சம்பந்தர் பாடல் பெற்றது.

இராஜகோபுரமில்லை. கொடிமரமில்ல - கொடிமரத்து விநாயகர் உள்ளார். நந்தி பலிபீடங்கள் உள்ளன. வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தனிக்கோயில், உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், நேரே மூலவர் தரிசனம். பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மாகலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவகைன் உள்ளன. நடராஜ சபை உள்ளது. பைரவர், சூரியன் சந்நிதிகளும் உள.

துவாரபாலகர்களையும், விநாயகரையும், சுப்பிரிமணியரையும் வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கின்றோம். கிழக்கு நோக்கிய சந்நிதி, சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனி. அக்கமணிமாலையும், திருநீற்றுப் பட்டமும், வெள்ளியாலான பிறையும் வில்வதளமும், சார்த்தப்பட்டுத் தரிசிக்கும்போது எடுப்பான திருக்கோலம் உள்ளத்திற்குச் சாந்தியைத் தருகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். நாடொறும் ஆறு கால பூஜைகள் நடை பெறுகின்றன.

வைகாசி விசாகத்தில் பெருவிழா - ஏகதினமாக உற்சவமாக நடைபெறுகிறது. அருகில் உள்ள திருமுறைத் தலங்கள் திருநெல்லிக்கா, திருக்கொள்ளிக்காடு என்பன. திருத்தேங்கூர்த்தலபுராணம் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொருளதவியாலும் ஊர்மக்களின் பேராதரவாலும் நடைபெற்றுள்ளன. மூன்றாம் ராஜராஜன் மூன்றாம் குலோத்துங்கன். மூன்றாம் ராஜேந்திரன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு விளக்கெரியவும், விழா எடுக்கவும் நிபந்தங்கள் அளித்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன.


"புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்

கரைசெய் மால் கடல் நஞ்சையுண்டவர் கருதலர் புரங்கள்

நிரைசெய்து ஆரழலூட்டி யுழல்பவர் இடுபலிக்கெழில் சேர்

விரைசெய் பூம்பொழில் தேங்கூர் வெள்ளியங்குன்ற மர்ந்தாரே" (சம்பந்தர்)


"மருவேழம் புராசி யெழு வரையேழும்

வலமயிலோன் வருமுன் தான்போய்

ஒருவேழந்தரு பரனை உமையை வலம்

வந்து கனியுடன் கொண்டோனைப்

பெருவேழந் தீர்த்தன்பு தருமோம்

பனைப்பசுந்தேன் பிலிற்றுத் தூற்றுங்

கருவேழ மருந்து துகிர்ச் செவ்வேழ

முகத்தானைக் கருத்துள் வைப்பாம்". (விநாயகர்துதி - தலபுராணம்)


-நீட்டுமொளி

ஆங்கூரிலை வேலவனாதியர் சூழத்

தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ரஜதகீரீஸ்வரர் தேவஸ்தானம்

அருள்மிகு. வெள்ளிமலைநாதர் திருக்கோயில்

திருத்தங்கூர் - திருநெல்லிக்காவல் அஞ்சல் - 610 205.

திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.










Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is பேரெயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருத்தெங்கூர்
Next