பேரெயில்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

பேரெயில்

ஓகைப்பேரையூர் - வங்காரப்பேரையூர்

பேரையூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதால் மக்கள் இப்பதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப்பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது.

1) திருவாரூர் - மன்னார்குடிச் சாலையில் கமலாபுரம் அடுத்த மூலங்குடி வந்து அங்கிருந்து இத்தலத்தையடையலாம்.

2) மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் 'பேரெயிலூர்' என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து. இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர் - பேரெயில் முறுவலார் - பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறாநனூற்றிலும் உள்ளன.


இறைவன் - ஜகதீஸ்வரர்.

இறைவி - ஜகந்நாயகி.


தலமரம் - நாரத்தைமரம்.


தீர்த்தம் - அக்னிதீர்த்தம்.


அப்பர் பாடல் பெற்றது.

சிறிய கிராமம். நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். பிராகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், ஐயனார், சூரியசந்திரர் சந்நிதிகள் உள்ளன. மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், நடராஜசபை உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கைத் திருமேனிகள் உள்ளன. திருப்பணிகள் நடைபெற வேண்டும்.

"மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறைகொள் கண்டம் உடைய கபாலியர்

துறையும் போகுவர் தூய வெண்ணீற்றினர்

பிறையும் சூடுவர் பேரயி லாளரே". (அப்பர்)


-வெள்ளிடைவான்

வாம் பேரெயிற் சூழ்ந்த மாண்பாற் றிருநாம

மாம் பேரேயில் ஒப்பிலாமணியே (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஜகதீஸ்வரர் திருக்கோயில்

ஓகைப்பேரையூர் (வங்காரப்பேரையூர்)

வடபாதிமங்கலம் அஞ்சல் - 610 206

திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.









Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கொள்ளம்பூதூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கெள்கிக் காடு
Next