திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருநெல்லிக்கா
நெல்லி மரங்கள் அடர்ந்த சோலையாக இவ்விடம் இருந்தமையின் இப்பெயர் பெற்றது.
1) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ஊர் சற்று உள்ளடங்கியுள்ளது.
2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில், திருவாரூரை அடுத்து, 14 ஆவது கி.மீல் 'திருநெல்லிக்கா' என்று வழி காட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் சென்று, 'புதூர்' ஊரையடைந்து, அதைத்தாண்டி திருநெல்லிக்காவல் 'ரயில்வேகேட்'டையும் கடந்து, திருநெல்லிக்காவல் ஊரையடையலாம். கோயில் ஊர்க்கோடியில் உள்ளது. கோயில்வரை பேருந்து செல்லும், நல்ல பாதை.
3) திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப்பேருந்து வசதியுள்ளது. சிறிய ஊர். நெல்லிக்காவல், ஆம்லகவனம் என்பன இத் தலத்திற்குரிய பெயர்கள். 'பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. ஏனையவை 1) நாட்டியத்தான் சூடி, 2) காறாயில் 3) திருத்தெங்கூர் 4) நமசிவாயபுரம் என்பன.
இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. இத்தலத்தில் தான் இறைவன் துர்வாசருக்கு கோபத்தை நீக்கியருளினார் என்பர். சூரியன் வழிபட்டதால் அருணபுரம் என்றும், பிரமன் தீர்த்தமுண்டாக்கி வழிபட்டதனால் பிரமதீர்த்தம் என்றும், கந்தர்வன் ஒருவனின் குட்ட நோய் நீங்கப்பெற்றதால் குஷ்ட ரோகஹரம் என்றும், வழிபடு பயன்கள் எளிதில் பெறத்தக்க தலமாதலின் சர்வ உத்தமபுரம் என்றும், ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்டதால் பட்சாட்சரபுரம் என்றும், ஐந்து தீர்த்தங்கள் இருப்பதால் பஞ்சதீர்த்தபுரம் என்றும், இறையருளால் அமுதம் கிடைக்கப்பெற்றதால் அமிர்த வித்யாபுரம் என்றும் இதற்குப் பல பெயர்களுள்ளன.
இறைவன் - ஆம்லகவனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர், நெல்லிவனநாதர், நெல்லி நாதேஸ்வரர்.
இறைவி - ஆம்லகேஸ்வரி, மங்களநாயகி.
தலமரம் - நெல்லிமரம்.
தீர்த்தம் - கோயில் எதிரில் உள்ளது பிரமதீர்த்தம், வடபால் உள்ளது ரோக நிவாரண தீர்த்தம் (சூரியதீர்த்தம்)
பிரமதீர்க்கரையில் படித்துறை விநாயகர் உள்ளார்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
கோயில் வயல்களுக்கு மத்தியில் உள்ளது. மேற்கு நோக்கிய திருக்கோயில் கவசமிட்ட கொடிமரத்தையும், விநாயகரையும் பணிந்து செல்லும் நம்மை ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் அழைக்கின்றது. பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவனநாதர் பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் இடப்பால் சோமாஸ்கந்தர் தரிசனம். நேரே நடராஜசபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலியன தீட்டப்பட்டுள்ளன. மூலவர் திருமேனி - மேற்கு நோக்கிய காட்சி.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். சோழர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் இராஜேந்திரசோழ வளநாட்டு, அருவாள கூற்றத்து நெல்லிக்கா என்றும், இறைவன் பெயர் நெல்லிக்கா உடையார், ஆம்லகேஸ்வரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளன. இராஜராஜ தேவன் காலத்திய கல்வெட்டு கோயிலில் விளக்கெரிக்க நிபந்தமாக நிலம் விடப்பட்டதைக் கூறுகிறது.
நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் பெருவிழா பத்து நாள்களுக்கு நடைபெறுகின்றது. தவிர, ஆவணி முதல் வெள்ளிக்கிழமையில் அம்பாள் கல்யாண உற்சவம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகைச சோமாவாரங்களில் சங்காபிஷேகம், கார்த்திகை தீபம், தைப்பூசம், தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு வழிபாடு முதலிய உற்சவ விசேஷங்களம் நடைபெறுகின்றன. தலபுராணம் உள்ளது.
"மறைத்தான் பிணிமாதொரு பாகந்தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே." (சம்பந்தர்)
"நெல்லிவனம் மேவும் நித்தன் திருவடியைப்
புல்லும் மனத்துடனே போற்றினால் - தொல்லை
வினைத்தொகுதியாகவும் விரைந்திடும் கண்டீர்
எனைத்தும் துயரமினி ஏன்." (தனிப்பாடல்)
-"ஓங்குமலை
வல்லிக்கா தாரமணிப்புய என்று அன்பர்தொழ
நெல்லிக்கா வாழ் மெய்ந்நியமமே". (அருட்பா)
-"தருத்தாங்கு
நெல்லிக்கா மேவு நிகழ் மங்கள மாது
புல்லுகின்ற நெல்லிவனப் புண்ணியா" (சிவநாயக்கலிவெண்பா)
(திருக்கோயில் மண்டபங்களின் cF மொழிகள் எழுதப்பட்டுள்ளன.)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. நெல்லிவனேஸ்வரர் திருக்கோயில்
திருநெல்லிக்காவல் - அஞ்சல் - 610 205.
திருவாரூர் வட்டம் - மாவட்டம்.