திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருநாட்டியத்தான்குடி
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து, அங்கிருந்து வடபாதி மங்கலம் செல்லும் பாதையில் சென்றால் இத்தலத்யடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.
கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம். அவருடைய இரு புதல்வியர்களை - சிங்கடி, வனப்பகை - சுந்தரர் தம் புதல்வியர்களாக ஏற்றருளியபதி.
இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர், கரிநாலேஸ்வரர், நாட்டியத்து நம்பி.
இறைவி - மங்களாம்பிகை.
தலமரம் - மாவிலங்கை.
தீர்த்தம் - சூரியதீர்த்தம், கரிதீர்த்தம் (இவைமுறையே கோயிலின் முன்னும் பின்னும் உள்ளன.)
சுந்தரர் பாடல் பெற்றது.
கிழக்கு நோக்கிய கோயில். நகரத்தார் திருப்பணி பெற்றது. கிழக்குக் கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது.
ஐந்துநிலை ராஜகோபுரம், உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், விசுவநாதர், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா ஆகியன. கோட்புரி நாயனார் உருவம் உள்ளது. மகா மண்டபத்தில் நடராஜசபையும் உற்சவமூர்த்தங்களும் உள்ளன.
இத்தல வரலாறு வருமாறு-
1) கோட்புலி நாயனார் வீட்டில் சுந்தரர் தங்கியிருந்தபோது வழிபடக் கோயிலுக்குச் சென்றார். அங்கு இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்யதிசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சுந்தரர் சென்று, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். கண்டதும்,
"நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி" என்று பாடினார்.
அது கேட்டதும் சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் செல்ல, சுந்தரர் பின் தொடர்ந்து கோயிலுள் செல்லும்போது பாம்பு வாயிலில் தடுக்க அப்போது "பூணாணாவதோர்" என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது.
2) யானை (கரி) யன்று வழிபட்டதால் கரிநாலேஸ்வரர் என்று சுவாமிக்குப் பெயர் வந்தது.
3) அண்ணன் தம்பியருக்கிடையில் பாகம்பிரிக்க நேர்ந்தபோது தமக்குள் இரத்தினங்களை மதிப்பிடுவதிலும் பிரிப்பதிலும் உடன்பாடு வரமுடியாமல் இறைவனிடம் முறையிட, இறைவன் இரத்தின வியாபாரியாக வந்து பிரித்தூக கொடுத்ததால் ரத்னபுரீசுவரர் என்று பெயர் பெற்றார்.
"பூணாணாவதொர் அரவம் கண்டு அஞ்சேன்
புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்
பேணீராகிலும் பெருமையை யுணர்வேன்
பிறவேனாகிலு மறவேன்
காணீராகிலுங் காண்ப னென்மனத்தாற்
கருதீராகிலுங் கருதி
நானேல் உம் அடிபாடுதல் ஒழியேன்
நாட்டியத்தான்குடி நம்பீ." (சுந்தரர்)
-"எல்லற்கண்
சேட்டியத்தானே தெரிந்து சுரர் வந்தேத்தும்
நாட்டியத்தான் குடிவாழ் நல்லினமே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில்
திருநாட்டியத்தான்குடி - அஞ்சல்
(வழி) மாவூர் s.o. 610202
திருவாரூர் வட்டம் - மாவட்டம்.