திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருக்காறாயில்
திருக்காறைவாசல், காரவாசல்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள ஊர், திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. இவ்வூர் நெடுங்சாலையிலேயே உள்ளது. 'கார்அகில்' மரக்காடாக இருந்த இடமாதலின் 'காரகில்வனம்' என்பதே காரகில் - காறாயில் என்றாயிருக்க வேண்டும் சம்ஸ்கிருதத்தில் 'பனசாரண்யம்', 'காளாகருவனம்' எனப்படுகிறது. தேவதாரு வனம், கபாலபுரம், பிரமபுரம், கபித்தவனபுரம் (கபித்தவன் என்பவன் தொண்டு செய்து வாழ்ந்த தலம்) எனவும் பெயர்களுண்டு. கபால முனிவர்க்கு இறைவன் காட்சி கொடுத்த இடம். சப்தவிடங்கத் தலங்களுள் இது ஆதிவிடங்கத் தலமாகும். தியாகராஜா எழுந்தருளியுள்ள பெரும் பதி, இங்குத்தான் இறைவன், பதஞ்சலிக்கு எழுவகைத் தாண்டவங்களையும் காட்டியருளியதாக வரலாறு.
இறைவன் - கண்ணபாயிரநார், கண்ணாயிரமுடையார்.
இறைவி - கைலாசநாயகி.
தலமரம் - 'பலா' எனப்படுகிறது ('அகில்' தான் இருக்க வேண்டும்)
தீர்த்தம் - பிரமதீர்த்தம் (கோயிலுள்ள வடபால் உள்ளது) வடக்குப் பிரகாரத்தில் உள்ள 'சேஷதீர்த்தமும்' சிறப்புடையது. பௌர்ணமிதோறும் இக்கிணற்றுத் தீர்த்தத்தைத் தொடர்ந்து பருகிவரின் பணிதீரும் என்பது நம்பிக்கை.
சம்பந்தர் பாடியது.
கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. ராஜகோபுரமில்லை. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர், (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு,
ஆளுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.
தியாகராஜசபை தரிசிக்கத்தக்கது. பெருமான் ஆதிவிடங்கர். சபை உயரத்தில் அழகான பிரபையுடன் காட்சி தருகிறது. ஆதிவிடங்கன் ஆசனம் - வீரசிங்காசனம், நடனம் - குக்குடு நடனம். தியாகராஜா சந்நிதியில் வெள்ளிப்பேழையில் மரகதலிங்கம் உள்ளது. தியாகேசருக்கு வெள்ளிப்பேழையில் மரகதலிங்கம் உள்ளது. தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடொறும் காலையில் இச்சந்நிதியில் அபிஷேகம் மரகதலிங்கத்திற்கு வழிபாடு நைடெபறும்போது மக்கள் பலரும் வந்து வழிபடுகிறார்கள். வலம்முடித்துப் படிகளேறி முன்மண்டபத்தில் சென்றால் நேரே மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி சுயம்பு. வலப்பால் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலம் - எடுப்பான தோற்றம் - தெற்கு நோக்கியது.
ஓரிடத்தில் நின்று நேரே பெருமாளையும் வலப்பால் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக் அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் 'காட்சி தந்த நாயனார்' - பின்னால் நந்தியும், பக்கத்தில் உமையும்கூடிய - திருமேனி தரிசிக்கத்தக்கது. நகரத்தார் திருப்பணி பெற்றுள்ள இக்கோயில் நன்கு உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. நடராஜர், தியாகராஜர் அபிஷேகங்கள் முறையாக நடைபெறுகின்றன. இத்தலத்தில் சொல்லப்படும் செவிவழிச் செய்திகளாவன-
1) பிரமதீர்த்தக் கரையில் உள்ள விநாயகருக்குக் 'கடுக்காய் விநாயகர்' என்று பெயர். ஒருசமயம் வணிகள் ஒருவன் சாதிக்காய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தவன் சற்று இளைப்பாற இத்தீர்த்தக்கரையில் அமர்ந்தான். அப்போது விநாயகர், ஒரு சிறுவனைப்போல் வந்து, என்ன மூட்டைகள் என்று கேட்க, வணிகன் உண்மையைச் சால்லாமல் 'கடுக்காய் மூட்டைகள்' என்று சொல்ல, சிறுவனும் மறைந்தான். மூட்டைகள் அத்தனையும் கடுக்காய் மூட்டைகளாக மாறியிருப்பது கண்ட, வணிகன் மனம் நொந்து, தன்பிழை பொறுக்குமாறு உள்ளம் உருகி வேண்ட, விநாயகரும் அவனை மன்னித்து, அம்மூட்டைகளைப் பழையபடியே சாதிக்காய்களாக மாற்றித் தந்தாராம். இதனால் இக்குளக்கரை விநாயகருக்குக் 'கடுக்காய் விநாயகர்' என்று பெயர் வந்தது.
2) தாசி ஒருத்திக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி தந்தார். ஆதலின் இங்குப் பெருமானுக்கு 'காட்சி தந்த நாயனார்' என்றும் பெயராம்.
3) ஒரு சமயம் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்தபோது குருட்டுப் பெண்ணொருத்தி, பக்கத்தில் உள்ள 'வெள்ளையாறு' என்னுமிடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கும்பாபிஷேகத்தின்போது கூட்டத்தினர் எழுப்பிய குரலொலி கேட்டுத் தன்னால் பார்க்கமுடியவில்லையே என்று உருக்கமுடன் பிரார்த்திக்க, இறைவன் அப்பெண்ணுக்குக் கண்பார்வை தந்து, அப்பார்வையும் நம் பார்வையைப்போல் சதாரணமாக இல்லாமல் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமாறு ஒளிதந்து அருளும் புரிந்து, அவளும் பார்த்து மகிழுமாறு செய்தாராம். இதனால் இறைவனுக்குக் 'கண்ணாயிரநாதர்' என்று பெயர் வந்தது. கல்வெட்டில்
இப்பெருமானின் பெயர் 'காறாயில் மகாதேவர்' என்று குறிக்கப்பெற்றுள்ளது.
"தாயானே தந்தையுமாகிய தன்மைகள்
ஆயானே ஆய நல்லன்பர்க் கணியானே
சேயானே சீர் திகழுந் திருக் காறாயில்
மேயானே என்பவர்மேல் வினை மேவாவே." (சம்பந்தர்)
"செங்கமலை வாணியுறை காறாயில் ஆயிரங்கண் சிவன் செம்பாதி
அங்கமதில் தங்கி உயிர் அத்தனையும் சுகானு பவமாரச் சந்தி
கங்குல் பகல் எனும் மூன்று காலத்தும் பொதுச் சிறப்பிற் கடைக் கணித்து
மங்களத்தைச் செய்தருளும் கைலாச நாயகியை வாழ்த்தி வாழ்வாம்." (தலபுராணம்)
'ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடீ - ஏறேய
ஆதி விடங்கா காறை அண்டத்தாய் எம்மானே
ஆதி விடங்கா வுமை நன்மாட்டு."
(11 ஆம் திருமுறை பரணதேவ நாயனார்)
-நாட்டுமொரு
"நூறாயிலன்பர் தமை நோக்கியருள் செய் திருக்
காறாயில் மேலோர் கடைப்பிடியே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
காறைவாசல் - அஞ்சல் - 610202
திருவாரூர் வட்டம் - மாவட்டம் .