திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருமறைக்காடு
வேதாரண்யம்
தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது.
கும்பகோணம், மயிலாடுதுறை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் முதலிய ஊர்களிலிருந்து செல்லலாம், வேதங்கள் வழிபட்டதலம். மறைவனம், வேதவனம், சத்யகிரி, ஆதிசேது, தென்கயிலாயம் என்பன வேறு பெயர்கள். எழு திருமுறைகளிலும் இடம் பெற்ற சிறப்புடைய தலம். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.
இராமர் இங்கு வந்து வழிபட்டுத் தோஷம் நீங்கியதாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் சுந்தரர் வந்து தரிசித்ததலம்.
விளக்கைத்துண்டிய எலியை, மாவலியாகப் பிறக்குமாறு அருள் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள பதி. நசிகேது, சுவேதகேது ஆகியோர் இத்தலத்தில்தான் தவஞ்செய்தனர். ஞானசம்பந்தரும் அப்பரும், வேதங்களால் அடைக்கப்பட்ட கதவு, திறக்கவும் அடைக்கவும் பாடப்பட்ட சிறப்புடைய தலம்.
"வேதாரண்யம் விளக்கு அழகு" என்பது பழமொழி. அப்பர் சுவாமிகள் தூண்டு சுடரனைய சோதி கண்டாய்' என்று பாடுகிறார். இன்றும் கோயிலில் விளக்குகளின் பேரொளியைக் காணலாம். பரஞ்சோதி முனிவர், தாயுமானவர் ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்கு இத்தலத்தில்தான் அருளுபதேசம் செய்தார் என்பது வரலாறு. அகத்தியர், முசுகுந்தன், கௌதமர், விசுவாமித்திரர், வசிட்டர், நாரதர், பிரமன், மாந்தாதா முதலியோர் வழிபட்டது. அகத்தியருக்குத் திருமணக்காட்சியருளிய பதி.
இறைவன் - மறைக்காட்டீசுவரர், வேதாரண்யேசுவரர், வேதவனேசர், வேதாரண்யநாதர்.
இறைவி - வீணாவாதவிதூஷணி, யாழைப்பழித்த மொழியம்மை.
தலமரம் - வன்னி - (இம்மரத்தடியில் விசுவாமித்திரர் தவஞ்செய்ததாக வரலாறு)
தீர்த்தம் - வேததீர்த்தம் (எதிரில் உள்ள கடல்)
தியாகராஜா - புவனி விடங்கள், மரகதத்திருமேனி.
நடனம் - ஹம்சபாத நடனம்.
பீடம் - ரத்தினசிம்மாசனம்.
மூவர் பாடல் பெற்ற தலம்.
இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது - அடியில் எண்ணற்ற நாகப்பிரதிஷ்டைகள் எதிரில் தீர்த்தமுள்ளது. உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் இராமரை தொடர்ந்து வந்த வீரஹத்திபாவத்தைப் போக்கிய வீரஹத்தி விநாயகர் - பக்கத்தில் குமரன் சந்நிதி. சேர சோழ பாண்டிய லிங்கங்கள் தனித்தனியே மூன்று சந்நிதிகளாக உள்ளன. புன்னைமரத்தடியில் நசிகேது, சுவேத கேது ஆகியோரின் மூலத்திருமேனிகளைக் காணலாம்.
சுவாமிக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி (கிழக்கு நோக்கி) உள்ளது - தனிக்கோயில். உள்வலமாக வரலாம். முன்மண்டபத்தின் மேற்புறம் வண்ண ஒவியங்கள் உள்ளன. தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜ்வரதேவர், சனிபகவான், வீணையில்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வரலிங்கம் முதுலிய சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராஜசபை - தேவசபை எனப்படும். நவக்கிரகங்கள் - இத்தலம் கோளிலித் தலங்களுள் ஒன்றாதலின் -வரிசையாகவுள்ளன. பள்ளியைறையை அடுத்துப் பைரவர், சூரிய - சந்திரர்கள் சந்நிதிகள். உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை யடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர், பெட்டிக்குள் பாதுகாப்பாக வுள்ளார்.
உள் வாயிலைக் கடந்தால் இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம்.
மூலவர் - வேதாரண்யேசுவரர் - சிவலிங்கத்திருமேனி, சுவாமிக்குப் பின்னால் 'மறைக்காட்டுறையும் மணாளர்' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இம்மணாளருக்கு ஆண்டுக்கொருமுறை தான் திருமஞ்சனம். திருமஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்புசார்த்தப்படும். அஃதுஅடுத்த திருமஞ்சனத்தின்போதுதான் களையப்படும். ஆகவே மணாளர், சந்தனக்காப்பு மணத்தில் ஆண்டுதோறும் காட்சியளிக்கிறார் என்பது விசேஷமான செய்தியாகும்.
மரகதத் விடங்கருக்கு நாடொறும் திருமஞ்சனமுண்டு. வீதியுலாவில், தியாகேசர் புறப்படாத நாள்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார். தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை "சந்திரசேகரப் பட்டம்" என்பர். "பட்டம் கட்டிய சென்னிப் பரமர்" என்பது தேவாரம். இக்கோயிலில் 92 கல்வெட்டுக்கள் - சோழர் காலத்தியவை - கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறைவனை 'வேதவன முடையார்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
யாழ்ப்பாணத்து 'சின்த்தம்பி நாவலர்' என்பவர் இத்தலத்துப் பெருமான் மீது "மறைசை அந்தாதி" பாடியுள்ளார்.
அண்மையில் உள்ள தலங்கள் 1) கோடிக்கரை 2) அகத்தியான் பள்ளி முதலியன. யாழ்ப்பாணம் வரணி, ஆதீனத்தைச் சேர்ந்த இத்திருக்கோயிலின் நிர்வாகம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையுடன் இணைந்து நடைபெறுகின்றது.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள் 14.7.2000ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
"குரவம் குருக்கத்திகள் புன்னைகண் ஞாழல்
மருவும் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
சிரமமும் மலருந் திகழ் செஞ்சடை தன்மேல்
அரவம் மதியோடடை வித்தலழகே". (சம்பந்தர்)
"விண்ணினார் விண்ணின்மிக்கார் வேதங்கள் விரும்பியோதப்
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடியாடக்
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணனரில் வலங்கொண் டேத்துமாமறைக் காடனாரே". (அப்பர்)
"யாழைப் பழித்தன்ன மொழி மங்கையரு பங்கன்
பேழைச் சடைமுடிமேல் பிறை வைத்தானிடம் பேணில்
தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக் கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே". (சுந்தரர்)
பதினோராந் திருமறை
ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
துயரும் தொழும் அழும் துகிலும் கலையும் செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பிணி கூர்ந்து
அயரும் அமர்விரிக்கும்மூரி நிமிர்க்கும் அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்டவாணுதலே.
கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும் புற்றெழுந்து
நட்ட மறியுங்கி ரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும் அருந் தாரணை செல்வம் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.
(பொன்வண்ணத்தந்தாதி)
வேதாரண்ய புராணம்
வேதாரண்யேஸ்வரர் துதி
கார்தாங்கு வடிவநெடு மாலும் ஞாலங்
கண்டவனும் அடிமுடிகள் காணாதோங்கிப்
பேர்தாங்கு குணங்குறியன் றின்றே யேனும்
பிறங்குதொழில் ஐந்துதவும் பெருமைத் தாகிப்
பார்தாங்கும் உலகமுதற் புவனம் யாவும்
பரிப்பதற்கோர் முதலாகிப் படர்ந்தி டப்பால்
வார்தாங்கு முலைக்கொடியும் படரும் வேத
வனத்துறையும் தாணுவையாம் வணங்கல் செய்வாம்.
யாழைப் பழித்த மொழியம்மை துதி
வாலமதி நுதல்காட்ட, வதனம் செந்தா
மறைகாட்ட, வறைகாட்ட வளர்ந்த கொங்கை
நீலமலர் விழிகாட்ட, இமைய மென்னும்
நெடுங்கிரியில் உதித்தறங்கள் நிகழ்த்தி யாவும்
ஞாலமெலாம் பெற்றெடுத்தும் கன்னி யாகி
நவிலுமறை நாதனிடம் நயந்து நிற்கும்
பாலினையின் னமுதையருந்தேனை யாழைப்
பழித்தமொழி உமைபாதம் பணிதல் செய்வாம்.
திருப்புகழ்
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக்கொண்ட கரும்புயல் மருகோனே
வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
வேத வனத்திற் சங்கரர் தந்தருள் பெருமானே
(அருணகிரிநாதர்)
-"நேயமுணத்
தேடெலியை மூவுலகுந் தேர்ந்து தொழச் செய்தருளும்
ஈடில் மறைக்காட்டில் என்றன் எய்ப்பில் வைப்பே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. வேதாரண்யநாதர் திருக்கோயில்
வேதாரண்யம் - அஞ்சல் - 614810
வேதாரண்யம் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.