திருமுறைத்தலங்கள்
பாண்டிய நாட்டுத் தலம்
திருஆடானை
திருவாடானை
காரைக்குடியிலிருந்து 20 A.e. தொலைவில் உள்ள தலம். தேவகோட்டையிலிருந்து 10 A.e. தொலைவு. தேவகோட்டை வந்து திருவாடனை
வரவேண்டும். காரைக்குடியிலிருந்தும் தேவகோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
மிகப் பழமையான ஆலயம். வருணன் மகன் வாருணி துருவாசரைப் பழித்தமையால் ஆனை உடலும் ஆட்டுத் தலையுமாய் இருந்து இங்கு வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம்.
(ஆடு - ஆனை = ஆடானை)
இறைவன் - ஆதிரத்னேஸ்வரர், அஜகஜேஸ்வரர்.
இறைவி - சிநேகல்லி, அன்பாயிரவல்லி.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்தியதீர்த்தம், சூரியதீர்த்தம், மார்க்கண்டேயதீர்த்தம் முதலானவை.
சம்பந்தர் பாடல் பெற்றது.
இத்தலத்தின் வேறு பெயர்கள் - பாரிஜாதவனம், வன்னிவனம், வில்வவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீசம், விஜயேச்சரம் என 12 பெயர்கள் சொல்லப்படுகின்றன.
இத்திருக்கோயிலின் கோபுரம் மிகமிக உயரமானது. மநு, மாந்ததா, அர்ச்சுனன், வருணன், காமதேனு சூரியன், அகத்தியர் வாருணி முதலியோர் வழிபட்ட சிறப்புடையது. அருணகிரியார் இத்தலத்துப் பெருமானைப் பாடியுள்ளார்.
ராஜகோபுரம் ஒன்பது நிலைகளை பெற்று 130 அடி உயரமுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கியுள்ளது. விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், இலக்குமி சந்நிதிகள் உள்ளன. நடராஜசபை உள்ளது. அம்பாள் கிழக்கு நோக்கிய திருக்கோலம் - சதுர்ப்புஜக் காட்சி.
மூலவர் - சிவலிங்கத்திருமேனி, ரத்னேஸ்வரர் தரிசனம், இம்மூர்த்தி நீலக்கல்லில் ஆவுடைசேர்க்கப்பட்டுக் காட்சி தருகிறார். நீல நிற ரத்தினத்தால் இம்மூர்த்தியைச் செய்து சூரியன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. இக்கோயில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி குடும்பத்தினரின் பரம்பரை அறங்காவலர் ஆட்சிக்குட்பட்டதாக விளங்குகிறது. தற்போதுள்ள இராமநாதபுரம் இராணி திருமதி. இந்திராதேவி அவர்களே பரம்பரை அறங்காவலராக உள்ளார்.
நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பெருவிழா பத்து நாள்களும் ஆடிப்பூர உற்சவம் 15 நாள்களும் நடைபெறுகின்றன. ஆடிசுவாதி, திருக்கல்யாணத்தபசு முதலிய விழாக்களும் விசேஷமானவை.
தலபுராணம் திருவாரூர் சாமிநாத தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மாசி மாதத்தின் பிற்பகுதியில் சுவாமி, அம்பாள் திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது அற்புதமான காட்சியாகும். அண்மையில் உள்ள தலங்கள் திருப்புனவாயில்,
தேவிபட்டணம் முதலியன.
"மங்கை கூறினன் மான்மறியுடை
அங்கையானுறை ஆடானை
தங்கையாற்றெழு தேத்த வல்லவர்
மங்குநோய் பிணிமாயுமே". (சம்பந்தர்)
திருப்புகழ்
ஊனாறு முட்பிணியு மானாக வித்தவுட
லூதாரி பட்டொழிய வுயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவாவெனக் குறுகி
ஓழா முழுக்கமெழ அழுதோய
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி யெரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெனிப்பிறவி
நாடா தெனக்குள் அருள் புரிவாயே
மானாகத்துத்திமூடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு மலர்மீதே
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல கிரியாவும்
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு தயிவோன்முன்
ஆசார பத்தியுடன் ஞானா கமத்தையருள்
ஆடானை நித்தமுறை பெருமாளே.
-"பூமீது
நீடானைசூழ நிலமன்னர் வாழ்த் துதிரு
வாடானைமேவு கருணாகரமே". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. அஜகஜேஸ்வரர் திருக்கோயில்
திருவாடானை - அஞ்சல் - 623 407
திருவாடானை வட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்.