திருமுறைத்தலங்கள்
பாண்டிய நாட்டுத் தலம்
திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்
காளையார் கோயில்
சிவகங்கை சமஸ்தானத்தின் கோயில், தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டது. நீராழி மண்டபமும் கட்டப்பெற்றது.. அவர்களுடைய கட்டளையில் 6 காலபூஜைகளும் நடைபெறுகின்றன. இத்தலம் தற்போது காளையார் கோயில் என்று வழங்குகிறது.
1) சென்னை - இராமேஸ்வரம் திருச்சி - மானாமதுரை இருப்புப் பாதைகளில் உள்ள நாட்டரசன் கோட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இறங்கி அண்மையிலுள்ள இத்தலத்தையடையலாம்.
2) சிவகங்கை, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. இறைவன் காளை வடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங் கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்து யாம் இருப்பது கானப்பேரூர் என்று கூறி ஆற்றுப்படுத்திய தலம்.
ஐராவதம் வழிபட்டது. தக்ஷிகாளிபுரம், சோதிவனம், மந்தார வனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், தேவதாருவனம், பூலோக கைலாசம், மகாகாளபுரம் என்பன வேறு பெயர்கள். சங்காலத்தில் கானப்பேரெயில் என்ற பெயருடன் விளங்கிய இத்தலம் உக்கிரப்பெருவழுதியின் கோட்டையாகத் திகழ்ந்தது. இத்திருக்கோயிலில் மூன்று சந்நிதிகள் உள்ளன.
1) காளீஸ்வரர் - சொர்ணவல்லி.
2) சோமேசர் - சௌந்தர நாயகி.
3) சுந்தரேசர் - மீனாட்சி.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
முதல் சந்நிதி நடுவிலும், இரண்டாவது வலப்புறத்தும், மூன்றாவது இடப்புறத்தும் உள்ளன. தேவாரப்பாடல் பெற்றவர் காளீஸ்வரரே. இவற் பெயரில்தான் நிலபுலன்கள் உள்ளன. இப்பகுதியில் இம்மூன்று சந்நிதிகளையட்டி வழங்கும் பழமொழி "காளைதேட - சோமர் அழிக்க - சொக்கர சுகிக்க" என்பதாகும். விழாக் காலத்தில் விதியுலா வருபவர் சோமேஸ்வரரே. படையல் நிவேதனம் முதலியவகைள் சொக்கருக்கு.
தீர்த்தம் - கஜபுஷ்கரணி (யானைமேடு) , சிவகங்கைக் காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலியன.
நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானைமேடு கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.
சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ள பெரிய கோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். இதையட்டி "மதுரைக் கோபுரம் தெரியக்கட்டிய மருதுபாண்டியன் வாராண்டி" என்னும் கும்மிப் பாட்டும் இங்கு வழக்கில் உள்ளது. மருதுபாண்டியர் கோபுரத்தைக் காத்த செய்தி நம் நெஞ்சத்தை உருக்குவதாகும். அஃதாவது - மருதுபாண்டியரை கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இக்கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி
உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, வெள்ளையரால் தூக்குத் தண்டினை விதிக்கப்பெற்றனர் என்பதாம். சிறியகோபுரம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது.
பண்டாசுர வதத்தின்பின் காளி இங்கு வந்து காளீசுவரை வழிபட்டுக் கரிய உருவம் மாறி சுவர்ணவல்லியாகி இறைவனை மணந்தாள் என்பது வரலாறு. நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இங்கு வந்து ஆனைமடு என்னும் தீர்த்தத்தில் நீராடிச் சோமேசரையும் காளீசுவரரையும் வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரர், சேரமானுடன் திருச்சுழியல் தலத்தை வணங்கி, இரவு துயிலும்போது அவர்கனவில் காளைவடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் திருமுடியில் சுழியும் அணிந்து காட்சிதந்து, "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைய, துயிலுணர்நத் சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார்.
பதினோராந் திருமுறை திருக்கண்ணப்பர் திருமறம், கபிலதேவ நாயனார் சிவபெருமான் அந்தாதி, பரணதேவ நாயனார் அந்தாதி, திருவிளையாடற்புராணம் அருச்சனைப்படலம், அருணகிரியாரின் திருப்புகழ் முதலியவற்றில் இத்தலம் குறிப்பிடப் பெறுகின்றது.
இத்தலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் - தளியிலார், தேவரடியார் முதலியோர்களைப் பற்றியும், ஆடல்வல்லோர்க்குத் 'தலைக்கோல்' பட்டம் அளிக்கப்பெற்ற செய்தியும் அறியமுடிகிறது.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள். இங்கு வேதாந்த மடாலயம் ஒன்று உள்ளது
"பிடியெலாம் பின்செலப் பெருங்கை மா மலர்தழீஇ
விடியலேதடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே." (சம்பந்தர்)
"தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப் பொருளா நீதியை வார்கடனஞ்
சுண்டதனுக் கிறவா தென்று மிருந்தவனை
யூழிபடைத்தவனோ டொள்ளரியும் முணரா
அண்டனை அண்டர் தமக்காகமநூன் மொழியும்
மாதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை அன்பொடு சென்றெய்துவ தென்று கொலோ
கார்வயல் சூழ் கானப் பெருறை காளையையே." (சுந்தரர்)
"சரதவேதம் பரவு புனவாயின கருந்தவசித்தர்
இரதாவாதஞ் செய்து சிவனுருவங் கண்ட வெழினகரும்
வரதனாகி அரனுறையும் கானப்பேரு மலைமகளை
விரதயோக நெறிநின்று மணந்தார் சுழியல்
வியனகரும் (திருவிளையாடற்புராணம்-அர்ச் பட) .
"கோலக் காதிற் குழையாலே - கோதிச் சேர்மைக் குழலாலே
ஞாலத்தாரைத் துயரே, செய் - நாரிக்காசைப் படலாமோ
மேலைத் தேவர்க் கரியோனே - வீரச் சேவற் கொடியோனே
காலப் பாசத் துயர் தீராய் கான்பேரிற் பெருமாளே." (திருப்புகழ்)
பதினோராம் திருமுறை
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணா னென்னு
முலைநலஞ்சேர் மொய்சடையானென்னு - முலைநலஞ்சேர்
மாதேவா வொன்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை. (கபிலதேவர்)
நிலைத்திவ் வுலகனைத்து நீரேயாய் நின்றீர்
நிலைத்திவ் வுலகனைத்து நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர். (பரணத்தேவர்)
-"சேடான
வானப் பேராற்றை மதியை முடிசூடுங்
கானப்பேரானந்தக் காளையே." (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. காளேஸ்வரர் திருக்கோயில்
காளையார் கோயில் - அஞ்சல் - 623 551
சிவகங்கை மாவட்டம்.