திருமுறைத்தலங்கள்
கொங்கு நாட்டுத் தலம்
திருப்பாண்டிக்கொடுமுடி
கொடுமுடி
தற்போது மக்கள் 'கொடுமுடி' என்று வழங்குகின்றனர். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள ஒரு நிலையம்.
ஈரோட்டிலிருந்து செல்ல பேருந்து வசதி உள்ளது. (ஈரோட்டிலிருந்து 39 A.e) சுயம்புமூர்த்தி தலம் - திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் - கறையூர். "கற்றவர் தொழுதேத்தும் சீர்கக்றையுரிற் பாண்டிக் கொடுமுடி" என்பது திருமுறைத் தொடர்.
இறைவன் - மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர். (கல்வெட்டில் 'மலைக்கொழுந்தீசர்' என்ற பெயருள்ளது.)
இறைவி - மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி, பண்மொழிநாயகி, வடிவுடைநாயகி.
தீர்த்தம் - தேவதீர்த்தம், பிரமதீர்த்தம், காவிரி.
தலமரம் - வன்னி.
மூவர் பாடல் பெற்ற தலம். பக்கத்தில் காவிரி உள்ளது. கொங்கு நாட்டில் மூவர் பாடலும் பெற்ற தலம் இஃதொன்றேயாம்.
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைபட்டுச் சிதறியது.
அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியதாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.
மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். பாண்டிய மன்னனின் விர் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் 'பாண்டிக்கொடுமுடி' என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்) பரத்வாஜர், அகத்தியர் வழிபட்ட தலம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமசிவாயத் திருப்பதிகம் பாடியருளிய தலம்.
இத்தலத்தை வழிபட்டால் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மூவருடைய தரிசனம் கிடைக்கிறது - மூம்மூர்த்தித்தலம்.
இத்திருக்கோயிலில் அழகான உற்சவ மூர்த்திகள் உள்ளன. இவைகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சித்திரை பௌர்ணமியில் பரத்வாஜருக்கு நடனக்காட்சி தந்த குஞ்சிதபாத நடராஜர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத்தாண்டவ நடனமிடுவதாக அமைந்துள்ள மூர்த்தம். இதுபோல் காண்பது அரிது. 2) பிக்ஷ£டனர் 3) சந்திரசேகரர் 4) உமாமகேஸ்வரர் 5) திரிபுரசம்ஹார மூர்த்தி - நின்றநிலை. உள்பிரகாரத்தில் நால்வர் சந்நிதிகளும் தொடர்ந்து அறுபத்துமூவர் திருமேனிகளும் உள்ளன.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் முயலகன் வடிவமும் சனகாதி நால்வர்களுக்குப் பதிலாக ஒருவருடைய வடிவமுமே உள்ளது.
தட்சிணாமூர்த்திக்குச் சடாமுடி உள்ளது. ரிஷபம் உள்ளது. காவிரி கண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. ஆடிப்பெருக்கு இத்தலத்திலும் விசேஷம். உள்சுற்றில் கஜலட்சுமி, உமாமகேஸ்வரர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. சுப்பிரமணியரைத் தாங்கும் மயில் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையைப் பார்த்த வண்ணம் உள்ளது. பெருமானின் பன்னிருகைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. நடராஜர், சிவகாமசுந்தரி சந்நிதி மிக அழகு.
அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. பிராகாரத்தில் சப்தமாதர் உருவங்கள் கல்லில் உள்ளன. சரஸ்வதி சந்நிதி உள்ளது.
கோயிலுள் வெளிச்சுற்றில் மிகப் பெரிய வன்னி மரம் உள்ளது. மிக வயதான மரம், கீழே பிரம்மா (கற்சிலை) 3 முகங்களோடு காட்சி தருகிறார். வன்னி மரத்தையே ஒருமுகமாகப் (தவஞ்செய்து) பெற்றார் என்பது வரலாறு. மூன்று தீர்த்தங்கள் உள்ளன. துலா ஸ்நானம் இங்குச் செய்வது கங்காஸ்நானத்திற்குச் சமம் என்னும் குறிப்பு சேது புராணத்தில் உள்ளது. பிரம்மாவுக்குப் பக்கத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. பெருமாள் (வீரநாராயணப் பெருமாள்) மகாலட்சுமித்தாயாருடன் காட்சித் தருகிறார். சனீஸ்வரர், காலபைரவர் சந்நிதிகளும் உள்ளன.
சுந்தரபாண்டியன் கேசரி காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இங்குள்ள காவிரியின் நடுவிலுள்ள 'அகத்தியர் பாறையில்'தான், அகத்தியரின் கமண்டல நீரைக் காகம் உருக்கொண்டு விநாயகர் கவிழ்த்த நிகழ்ச்சி நடந்ததென்பர். சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது.
"பெண்ணமர் மேனியினாரும் பிறைபுக்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாருங் காதமருங் குழையாரும்
எண்ணமருங் குணத்தாரும் இமையவரேத்தநின்றாரும்
பண்ணமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே" (சம்பந்தர்)
"சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை
அட்ட மூர்த்தியை ஆலநிழலமர்
பட்டனைத் திருப்பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழநம் வினை நாசமே" (அப்பர்)
"மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம்பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறையூரிற்பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" (சுந்தரர்)
திருப்புகழ்
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட்டலையப் புகுதாதே
திருவருட்கருணைப் ப்ரபையாலே
திரமெனக்கதியைப் பெறுவேனோ
அரிய யற்கறிதற் கரியானே
அடியவர்க்கெளியற் புதநேயா
குருவெனச் சிவனுக் கருள்போதா
கொடிமுடிக் குமரப் பெருமாளே.
-"தன்னியருள்
வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே" (அருட்பா)
அஞ்சல் முகவரி-
அருள்மிகு. மகுடேஸ்வரர் தேவஸ்தானம்
கொடுமுடி - 638 151.
ஈரோடு மாவட்டம்.