கருவூர்

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

கருவூர்

கரூர்

திருச்சி - ஈரோடு பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தற்போது மக்கள் வழக்கில் 'கரூர்' என்றழைக்கப்படுகிறது. பெரிய ஊர் சென்னை, சேலம், திருச்சி, ஈரோடு முதலிய பல ஊர்களிலிருந்தும் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.

ஊருக்குக் 'கருவூர்' என்றும் கோயிலுக்கு 'ஆநிலை' என்றும் பெயர். காமதேனு வழிபட்ட தலம். இதனால், சுவாமிக்குப் பசுபதி என்ற பெயருண்டு.

புகழ்ச்சோழ நாயனார் ஆண்டபதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம், சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டுசெய்த தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதாரத்தலம்.


இறைவன் - பசுபதீஸ்வரர், பசுபதி நாதர், பசுபதி.


இறைவி - கிருபாநாயகி, சௌந்தர்ய நாயகி.


தீர்த்தம் - ஆம்பிரவதி (அமராவதி) நதி.


சம்பந்தர் பாடிய தலம், மூலவர் சுயம்பு மூர்த்தி, சிறிது சாய்வாக உள்ளது. (கருவூராருக்காகச் சுவாமி சாய்ந்து கொடுத்தார் என்பது செவிவழிப் பெற்ற செய்தி) சோழர் காலத் திருப்பணி பெற்ற தலம். ஆவுடையார் சதுரமாக உள்ளது.

கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ்ச்சோழ நாயனார் கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன்பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது.

புகழ்ச்சோழர் மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. விசாலமான கோயில். கருவூர்த் தேவர் சாமதிக்கோயில் தனியே உள்ளது. (கருவூர்சித்தர் எனப்படுபவர் வேறு) கோயிலுள் மூலவரைத் தரிசிக்கச் சேவார்த்திகள் செல்லும் நுழைவு வாயிலில் வலப்பக்கமுள்ள கல்தூண் ஒன்றில் - மத்தியில் சேவார்த்திகள் செல்லும் பக்கமாகவே கீழ்க்காணுமாறு சக்கரம் ஒன்று உள்ளது. இதன் பொருள் எவர்க்கும் தெரியவில்லை, விசாரித்ததில், இக்கோயில் அமைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய குறிப்பு அச்சக்கரம் என்கின்றனர். உண்மை விளங்க வில்லை (அதைக் காண்போர் அப்பொருள் தெரிந்து வெளிப்படுத்துவாராயின் சமய உலகம் அவர்க்கு என்றும் நன்றியுடையதாகும்.)

நடராஜர் சந்நிதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முதலியவையும் உள. பிராகாரத்தில் ஒரு சுவாமி சந்நிதியும், இலக்குமி சந்நிதியும் அடுத்து ஆறுமகர் சந்நிதியும் உள்ளது. (இறையனார் களவியலுரையில் 'கருவூர் உள்ளிவிழா' என்று வருகின்ற குறிப்புக்கும் உண்மைப்பொருள் விளங்கவில்லை என்ற ஏக்கமும் ஓர் அன்பரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது.

மூலவர் - சிவலிங்கத்தின் மீது மாட்டுக்குளம்பு பட்டது போல இருபக்கங்களிலும் பள்ளங்கள் உள்ளன. மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது.

இரு அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன. இது பற்றித் தெரியவரும் செய்திகள் - இவ்விரு அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியுள்ள அலங்கார நாயகி சந்நிதியே ஆதியானது. மற்றதாகிய சௌந்தர நாயகி சந்நிதி பற்ற ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. 1) அதாவது கரூருக்குப் பக்கத்தில் ஆண்டவர் கோயிலூர் என்னும் ஊர் உள்ளது. அஞ்கு வாழ்ந்த வந்த ஒரு பெய், ஆண்டாள்போல - இவ்விறைவனை மணந்துகொண்டாளாம். அதனால்தான் சுவாமி, திருவிழாவில் ஒரு நாள் அவ்வூருக்கு இன்றும் சென்று வருகின்றதாம். மற்றொரு செய்தி 2) மாலிக்காபூரின் படையெடுப்பின்போது அம்மன் திருமேனி புதைத்து வைக்கப்பட்டது. அது பிறகு தோண்டியபோது கிடைக்கவில்லை. ஆதலால் புதிய அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்பு, புதைத்து வைக்கப்பட்ட முன்னதும் கிடைத்து விட்டது. அதனால் அதையும் இரண்டாவதாகப் பிரதிஷ்டை செய்து விட்டனர் என்பது. நவக்கிரகத்திற்கு எதிரில் பைரவர் சந்நிதி, சற்று உயரத்தில் உள்ளது. கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில் (தெரவு ¤ல்) தான் பெரியபுராணத்தில் வரும் நிகழ்ச்சியான எறிபத்த நாயனார் பட்டத்துயானையை வெட்டிய வரலாறு நடந்ததாம். இவ்விழா இன்றும் நவராத்திரியில் ஒரு நாளில் இவ்விடத்தில், கோவை, சிவக்கவிமணி திரு. சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பெறுகின்றது.

மாசி மாதத்தில் ஐந்து நாள்கள் சூரிய ஒளி சுவாமிமீது படுவதாகச் சொல்லப்படுகிறது.


'நீதியார் நினைந்தாய நான்மறை

ஓதியாரொடுங் கூடலார் குழைக்

காதினார் கருவூருளானிலை

ஆதியாரடியார் தமன்பரே.


பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்

பெண்ணினார் பிறைதாங்கு நெற்றியர்

கண்ணினார் கருவூருளானிலை

நண்ணினார் நமையாளு நாதரே' (சம்பந்தர்)


திருப்புகழ்

மதியால் வித்தனாகி - மனதாலுத்தமனாகிப்

பதிவாகிச் சிவஞான - பரயோகத் தருள்வாயே

நிதியே நித்தியமேயென் - நினைவேநற் பொருளாயோய்

கதியே சொற் பரவேளே - கருவூரிற் பெருமாளே.


-"தீண்டரிய

வெங்கருவூர் வஞ் வினைதீர்த்தவர் சூழ்ந்த

நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில்

கரூர் - 639 001.

கரூர் மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பாண்டிக்கொடுமுடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஅஞ்சைக்களம்
Next