திருமுறைத்தலங்கள்
திருக்கோகர்ணம்
கோகர்ணா
துளூவநாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம்.
இத்தலம் கர்நாடக மாநிலத்தில் மேற்குக் கடற்கரையில் உள்ளது.
1) பெங்களூர் சென்று அங்கிருந்து அரசு விரைவுப் பேருந்து மூலம் திருக்கோகர்ணம் சென்றடையலாம்.
2) சென்னையிலிருந்து புகைவண்டி மூலம் செல்வதாயின், குண்டக்கல்
வழியாக ஹ§ப்ளி சென்று, அங்கிருந்து பேருந்தில் ஏறித் திருக்கோகர்ணத்தை அடையலாம்.
3) மங்களூரிலிருந்தும் கோகர்ணத்திற்குப் பேருந்து செல்கின்றது. கோ-பசு, கர்ணம் -காது, சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களுண்டு.
இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திரு அங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
"கால்களாற் பயனென், கறைக்கண்டன் உறைகோயில்
கோலக்கோபுரக் கோகரணம் சூழாக், கால்களாற் பயனனென்'.
ஒரு சமயம் இராவணன் இலங்கையில் பிரதிஷ்டை செய்விப்பதற்காகக் கயிலையிலிருந்து (சிவபெருமானிடம்) ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். வந்தவன்,
வழியில் இத்தலத்திற் சற்று இளைப்பாற எண்ணித் தரையில் வைத்தான். இறைவன் இத்தலத்திலேயே வீற்றிருக்கத் திருவுள்ளம் கொண்டாராதலின், அவன் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் அச்சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றபோது அது அசைந்து கொடுக்கவில்லை. அவன் தன் வழிமையனைத்தையும் பயன்படுத்தி எடுக்க முயன்றபோது அச்சிவலிங்கபாணம் பசுவின் காது போலக் குழைந்துவிட்டது. அதனால் தலத்திற்குக் கோகர்ணம் என்று பெயர் வந்தது.
இறைவனுக்கு மகாபலேஸ்வரர் என்று பெயருண்டாயிற்ற. ஆலயத்தில் நேரிற்காண்போர், சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியருப்பதைக் காணலாம். இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.
இறைவன் - மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்ம லிங்கேஸ்வரர்.
இறைவி - கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்புடையது. இத்தலச் சிறப்பை பிரமோத்திர காண்டம், உபதேசகாண்டம் முதலிய நுழல்கள் புகழ்கின்றன. பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர் முதலான மகரிஷிகள், இராவணன், நாகராசன் முதலிய எண்ணற்றோர் இப்பெருமானை வழிபட்டுள்ளனர்.
கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப்பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது - பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர் கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
மூலத்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை - அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுர மர்த்தினி சந்நிதிகள். விநாயகர், யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் "துவிபுஜ" விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் மதிலுக்கு வெளியே வடபால் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்வடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகார்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையன. இவற்றுள்ளும் கோடி தீர்த்தம் மிக்க சிறப்புடையது. இத்தலவரலாறு வருமாறு-
இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவனரிர். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராண லிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது. இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும். வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான்.
நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் எடுத்துக்கொண்டு சென்று பிரதிட்டை செய்தால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவினார். அந்தணச் சிறுவன் போல அவன் முன் தோன்றி நின்றார்.
இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர் இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்து விடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராததால் மூன்றுமறை, அழைத்து சிவலிங்கத்தைப் பமூ ¤யில் வைத்து விட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபடவேண்டும். அமாவாசை நாள் கடல் நீராட்டுக்கு விசேஷமானது இத்தலம், பாஸ்கரத்தலங்களுள் ஒன்றாகும். ஏனையவை - காசி, புஷ்பகிரி, காஞ்சிபுரம், ஸ்ரீ சைலம், சேது, கேதாரம் முதலியன. சிவராத்திரி விழா சிறப்பானது.
பேதை மங்கையரு பங்கிட
மிகுத்திடப் மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடி
யிறைஞ்சிநிற மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவளர் கோகரணமே. (சம்பந்தர்)
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. (அப்பர்)
க்ஷேத்திரக்ககோவைபிள்ளைத்தமிழ்
ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான்
இராவண னுள்ளமகிழ
ஈந்துசிவ லிங்மொ றீதுதரை வையா
திலங்கையில் கொடுபோவெனச்
சாகரத் தின்கரையில் வரும்வேளை யருபிரம
சாரியாய் வாங்கியதனைக்
தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச்
சமர்செயுமி ராவணன்றன்
ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற
அம்மானை ஆடிவிளையா
டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி
அம்பரவை ஏத்தினாகரச்
சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவன்மகா லிங்பெல லிங்கமூர்த் தியருள்குக
சிறுதே ருருட்டி யருளே.
கோகர்ண ஸ்தல ஸ்துதி சுலோகம்
கோகர்ணம் ஸா மஹா காசீ, விசுவ நாதோ மஹாபல
கோடி தீர்த்தஸ் தத்ர கங்கா ஸமுத்ரோயம் விசிஷ்யதே.
குஞ்சா மாத்ரா திகம் காசியா கோகர்ண மபிதீயதே
கோகர்ண ஸத்ருசம் க்ஷேத்ரம் நாஸ்தி ஜகத்ரயே.
ஸர்வேஷாம் சிவலிங்காநம் ஸார்வபௌமோ மஹாபல
மஹாபல ஸமலிங்கம் நபூதோ நபவிஷ்யதி.
கங்காதி ஸரிதோ யஸ்மாத் ஸாகரம் ப்ரவிசந்தி U
தஸ்மாத் ஸமுத்ரேஹ்யதிகோ கோகர்ண தத் விசிஷ்யதே
ஆத்யம் பசுபதே ஸ்தாநம் தர்சநாத்ஏவ முத்கிதம்
யத்ர பாபோபி மநுஜ ப்ராப்நோத்ய பயதம் பதம்.
பச்சிமாம்புதி தீரஸ்தம் கோகர்ணக்ஷேத்ர முத்தமம்
மஹாபல ஸமம் லிங்கம் நாஸ்தி ப்ரஹ மாண்ட கோளகே
பூர்வே ஸித்தேச்வரோ நாம, தக்ஷிணத் யக நாசிநீ,
உத்தரே சால்மலீ கங்கா, பச்சிமே லவணாம் விதி
பொருள் -
1) கோகர்ணமே மஹாகாசி, மஹாபலரே விசுவநாதர், கோடி தீர்த்தமே கங்கை, சமுத்திரம் கூட இருப்பதால் பின்னும் விசேஷம். 2) காசியிலும் ஒரு பங்கு அதிகம் கோகர்ணம், அதற்கு இணையான தலம் மூவுலகிலும் இல்லை. 3) எல்லாச் சிவலிங்கங்களுக்கும் மஹாபலரே சக்ரவர்த்தி, அவருக்கு இணை இன்றும் இல்லை, என்றும் இராது. 4) கங்கை முதலான சகல தீர்த்தங்களும் இங்கு கடலிற் சேர்கின்றபடியால் கோகர்ணத்தில் உள்ள சமுத்திரதீர்த்தம் பெருமைவாய்ந்தது. 5) மஹாபலேசுவரர் ஆதிமூர்த்தி, தரிசித்த மாத்திரத்தில் அவர் முத்தியளிப்பவர், பாபியான மனிதனுக்கும் அவர் அபயம் அளிப்பார். 6) மேற்குக்கரையில் உத்தம கோகர்ணம் அமைந்துள்ளது, பிரம்மாண்ட கோளத்தில் மஹாபல லிங்கத்துக்கு இணையில்லை. 7) கிழக்கில் சித்தேசுரர், தெற்கே அகநாசினி, வடக்கில் சால்மலி கங்கை, மேற்கே உப்புக்கடல்.
"கோபலத்திற்காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட
மாபலத்து மாபலமா மாபலமே". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மகாபலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோகர்ணம் - அஞ்சல் - 576 234
(கர்நாடகா)